நடப்பு ஐ.பி.எல் சீசனில் தனது முதல் ஆட்டத்திலேயே டெல்லியிடம் நூலிழையில் தவறவிட்ட வெற்றியை, தனது சொந்த மைதானத்தில் மீட்டெடுக்க வேண்டும் என்ற முனைப்பில் நேற்று (ஏப்ரல் 22) அக்சர் அண்ட் கோ-வை எதிர்கொண்டது பண்ட் அண்ட் கோ. டாஸ் வென்ற அக்சர் பெரிதாக எதையும் யோசிக்காமல் சிம்பிளாக பவுலிங்கைத் தேர்வு செய்தார்.

அக்சரின் அசத்தல் பிளான்… சுதாரித்துக் கொண்ட மார்க்ரம் – மார்ஷ்!
லக்னோ பேட்டிங் என்றாலே நிக்கோலஸ் பூரான், மிட்செல் மார்ஷ் அதிரடி என்று நினைக்கும் எதிரணிகளை சைலண்டாக சம்பவம் செய்துவரும் எய்டன் மார்க்ரம், இன்றைய போட்டியிலும் தனது சம்பவத்தைத் தொடர்ந்தார்.
மறுபக்கம், யாரும் எதிர்பாராத விதமாக திடீரென பவர்பிளேக்குள் ஓவர் போடும் அக்சர், மேலும் சர்ப்ரைஸ் தரும் விதமாக முதல் ஓவரையே வீசவந்தார்.
எதற்கு வீண் வம்பு என முதல் ஓவரை 3 ரன்கள் மட்டும் அடித்து சாமிக்கு விட்ட மார்க்ரம் – மார்ஷ் கூட்டணி, ஸ்டார்க் வீசிய இரண்டாவது ஓவரிலிருந்து கியரை மாற்ற முயன்றனர்.
2, 3 ஆகிய ஓவர்களில் மொத்தமாகவே ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரி மட்டுமே வர, முகேஷ் குமார் வீசிய 4-வது ஓவரில் ஃபோர், சிக்ஸ் என ரூட்டை மாற்றினார் மார்க்ரம்.
ஆனாலும், அடுத்த இரண்டு ஓவர்களில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸ் மட்டுமே வந்தது. பவர்பிளே முடிவில் விக்கெட் இழப்பின்றி 51 ரன்களைக் குவித்தது லக்னோ.
அதையடுத்து, ஆட்டத்தின் 7-வது ஓவராக தனது 4-வது ஓவரை வீசவந்த அக்சர், 10 ரன்களை மட்டும் விக்கெட் எதுவும் எடுக்காமல் வெறும் 29 ரன்களோடு தனது கோட்டாவை முடித்துக்கொண்டார்.

அடுத்து விப்ராஜ் வீசிய 8-வது ஓவரில் 14 ரன்கள் வர, ரன்கள் அடித்த வேகமே தெரியாமல் அதற்கடுத்த ஓவரிலேயே 30 பந்துகளில் அரைசதம் கடந்தார் மார்க்ரம்.
கடந்த ஆறு போட்டிகளில் இது மார்க்ரமின் 4-வது அரைசதம், அதிலும் ஒரு போட்டியில் 47-ல் அவுட்டானர். பெரிதாக அதிரடி இல்லையென்றாலும் நிதானமாக சென்றுகொண்டிருந்த இந்த ஜோடியை, 10-வது ஓவரின் கடைசி பந்தில் மார்க்ரமை விக்கெட் எடுத்து உடைத்தார் சமீரா.
மீண்டும் ஏமாற்றிய பூரான்!
10 ஓவர்கள் முடிவில் ஒரேயோரு விக்கெட்டை மட்டும் இழந்து 87 ரன்களுடன் லக்னோ நல்ல நிலையில் இருந்தது. 35 ரன்களுடன் களத்தில் நின்று கொண்டிருந்த மார்ஸுடன் கைகோர்த்தார் பூரான்.
கடைசி இரண்டு ஆட்டங்களாக 8, 11 என ஏமாற்றிய பூரான் இன்று அதிரடி காட்டுவார் என்று லக்னோ ரசிகர்கள் எதிர்பார்த்த வேளையில், ஸ்டார்க் வீசிய 11-வது ஓவரில் பவுன்சர் வந்த பந்தை எகிறி அடித்து பால் இன்சைட் எட்ஜில் போல்டாகி வெறும் 9 ரன்களில் மீண்டும் ஏமாற்றினார் பூரான்.

சரி அடுத்து பண்ட் இறங்குவார், இந்த ஆட்டத்திலாவது அடிப்பார் என ரசிகர்கள் காத்திருக்க, அவர்களையும் தாண்டி எதிரணியையே ஆச்சரியப்படுத்தும் வகையில் கடந்த போட்டியின் கேமியோ ஹீரோ அப்துல் சமதை இறக்கினார் பண்ட்.
ஒரு ஓவர் விட்டுப் பிடித்த டெல்லி, 14-வது ஓவரை முகேஷ் குமாரிடம் பந்தைக் கொடுத்து அப்துல் சமதை 2 ரன்களிலும், மார்ஷை 45 ரன்களிலும் அசால்ட்டாக தூக்கியது.
கடைசி வரை ஒன்றுமே செய்யாத பண்ட்!
சரி இப்போதாவது பண்ட் வருவாரா என்று பார்த்தால் ஆயுஷ் பதோனியும், மில்லரும் கிரீஸுக்கு வந்தனர். 15 ஓவர்கள் முடிவில் 118 ரன்கள் குவித்தது லக்னோ.
19-வது ஓவர் வரை பதோனிக்கும், மில்லருக்கும் பால் சிக்கவே இல்லை. மெதுவாக உருட்டியே 19 ஓவர் முடிவில் அணியை 147-க்கு கொண்டுவந்தனர்.
அடுத்து, முகேஷ் குமார் வீசிய கடைசி ஓவரில் முதல் மூன்று பந்துகளும் ஆஃப் சைட் திசையில் பவுண்டரி அடித்த பதோனி, நான்காவது பந்தை ஆஃப் சைட் நகர்ந்து பேக் சைடில் அடிக்க முயன்று போல்டானார்.

ஒருவழியாக கடைசி இரு பந்துகளையும் சிக்ஸர் அடிக்க விறுவிறுவென வந்த பண்ட், 5-வது பந்தை டாட் பால் ஆக்கி, கடைசி பந்தில் கிளீன் போல்டானார்.
200 ரன்களை அசால்ட்டாக அடிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட லக்னோ 6 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் மட்டுமே அடித்தது. டெல்லியில் அதிகபட்சமாக முகேஷ் குமார் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
லக்னோவை நிதானமாக டீல் செய்த டெல்லி!
160 டார்கெட்டை சீக்கிரமாக முடிக்க, ஷர்துல் தாகூர் வீசிய முதல் ஓவரிலேயே 3 பவுண்டரி அடித்து இன்டென்ட் காட்டியது போரல் – கருண் நாயர் கூட்டணி.
இருப்பினும், அடுத்த இரண்டு ஓவர்களில் தலா ஒரு பவுண்டரி மட்டுமே இந்தக் கூட்டணி அடிக்க, 4-வது ஓவரை மார்க்ரமிடம் ஒப்படைத்தார் பண்ட். அதற்கு கைமேல் பலனாக சிக்ஸ் அடித்த அடுத்த பந்திலேயே 15 ரன்களில் போல்டானார் கருண் நாயர்.

ஆனால், போரல் தனது ஆட்டத்தை நிறுத்தவில்லை. போதாகுறைக்கு லக்னோவிடம் பழைய கணக்கைத் தீர்க்க ராகுலும் களத்தில் இறங்கினார்.
அவசரப்படாத இந்தக் கூட்டணி பொறுமையாக ஆடி பவர்பிளே முடிவில் டெல்லியின் ஸ்கோரை 54-ஆக உயர்த்தியது. அதன்பிறகு ஜென் நிலைக்குச் சென்ற இந்த ஜோடி, அடுத்த 4 ஓவர்களில் ஒரேயொரு பவுண்டரி மட்டுமே அடித்து 26 சேர்க்க, 10 ஓவர்கள் முடிவில் அதே ஒரு விக்கெட் இழப்புக்கு 80 ரன்கள் தொட்டது டெல்லி.
சொல்லப்போனால், 10 ஓவர்கள் முடிவில் லக்னோவை லக்னோவை விட 7 ரன்கள் டெல்லி கம்மி.

ஆனால், அடுத்த ஓவரிலேயே ஆட்டத்தின் போக்கு மாறியது. 11-வது ஓவரில் போரல் சிக்ஸ் அடித்து அரைசதம் கடக்க, அதேஓவரில் ராகுலும் ஒரு சிக்ஸ் அடித்து டெல்லியின் ரன்வேகத்தைக் கூட்டினார்.
இருப்பினும், பவர்பிளேயில் கருண் நாயரின் விக்கெட்டை எடுத்து டெல்லிக்கு தடை போட்ட மார்க்ரம், இம்முறை 12-வது ஓவரில் போரல் விக்கெட் எடுத்தார்.
அந்த ஓவரோடு 100 ரன்களைக் கடந்தது டெல்லி. 36 ரன்களுடன் களத்தில் இருந்த ராகுலுடன் பார்ட்னர்ஷிப் போட்டார் கேப்டன் அக்சர்.
லக்னோவிடம் பழைய கணக்கைத் தீர்த்த ராகுல்!
அடுத்த 8 ஓவர்களில் 55 ரன்கள் எடுத்தால் டெல்லி வெற்றி. இந்த நேரத்தில் 13-வது ஓவரை வீசிய ஆவேஷ் கான், வெறும் மூன்று ரன்கள் மட்டும் கொடுத்து ஆட்டத்தை இழுத்துப் பிடிக்க முயன்றார்.
ஆனால், அக்சரோ ஆட்டத்தை சீக்கிரம் முடிக்கும் மோடில், ரவி பிஷ்னாய் வீசிய 14-வது ஓவரில் இரண்டு சிக்ஸ் அடித்து லக்னோ பவுலர்களுக்கு பிரஷர் ஏற்றினார்.
Big-hitting Brilliance
Captain Axar Patel adds two more sixes to power up #DC‘s chase ⚡
Updates ▶️ https://t.co/nqIO9mb8Bs#TATAIPL | #LSGvDC | @DelhiCapitals | @akshar2026 pic.twitter.com/XqBYGoco5Q
— IndianPremierLeague (@IPL) April 22, 2025
அதோடு நிற்காத அக்சர், அடுத்த மூன்று ஓவர்களில் மேலும் இரண்டு சிக்ஸர், ஒரு பவுண்டரி அடித்து 17 ஓவர்கள் முடிவில் டெல்லியின் ஸ்கோரை 151 என உயர்த்தி கிட்டத்தட்ட வெற்றியைத் தனதாக்கிவிட்டார்.
மறுமுனையில் கே.எல்.ராகுல் நிதானமாக அக்சரின் ஷாட்களை ரசித்துக் கொண்டிருந்தார்.

டெல்லியின் வெற்றிக்கு 9 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட அந்த நேரத்தில் பிரின்ஸ் யாதவ் வீசிய 18-வது ஓவரில் முதல் பந்தில் சிங்கிள் எடுத்து அரைசதம் கடந்த கே.எல்.ராகுல், `இங்க நான்தான் நம்பர்’ என்று தனது ஜெர்ஸி நம்பரைக் காட்டினார்.
அடுத்து மூன்றாவது பந்தில் ஒரு சிங்கிள் எடுத்து, ஐ.பி.எல் வரலாற்றில் அதிவேகமாக 5,000 ரன்களைக் கடந்த வீரர் என்ற சாதனை படைத்தார் கே.எல்.ராகுல் (130 போட்டிகள்).

பின்னர் அதே ஓவரில் ஐந்தாவது பந்தை சிக்ஸருக்கு அனுப்பி டெல்லியை வெற்றிபெற வைத்ததோடு, லக்னோவுடனான கணக்கையும் தீர்த்துக் கொண்டார்.
டெல்லி அணியில் 4 விக்கெட்டுகள் வீழ்த்திய முகேஷ் குமார் ஆட்ட நாயகன் விருது வென்றார். இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் டெல்லி அணி 12 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தைப் பிடித்தது.
கடந்த ஐ.பி.எல் சீசனில் கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ அணி ஒரு போட்டியில் தோல்வியடைந்தபோது, கே.எல்.ராகுலிடம் அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா மைதானத்திலேயே கத்திப் பேசிய சம்பவம் அப்போது பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.