புதுடெல்லி: மறைந்த போப் பிரான்சிஸின் இறுதிச் சடங்கு நடைபெறும் ஏப்ரல் 26 (சனிக்கிழமை) அன்று இந்தியாவில் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் மதத் தலைவரான மறைந்த போப் பிரான்சிஸ் உடலுக்கு இறுதிச் சடங்குகள் ஏப்.26-ம் தேதி சனிக்கிழமை நடைபெற இருக்கிறது. அன்றைய தினம் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படும். அன்று நாடு முழுவதிலும் அனைத்து அரசு கட்டிடங்களிலும் உள்ள தேசியக் கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்கவிடப்படும்.
திருச்சபையின் தலைமை தந்தை போப் பிரான்சிஸ் மறைவையொட்டி 3 நாள் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படும் என்று மத்திய அரசு ஏற்கெனவே அறிவித்திருந்தது. ஏப்ரல் 22, 23 ஆகிய இரண்டு நாட்கள் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்பட்டதுடன், இறுதிச் சடங்கு நடைபெறும் தினத்தன்று ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கத்தோலிக்க கிறிஸ்தவ மத தலைவரான போப் பிரான்சிஸ் ஏப்.21 (திங்கள்கிழமை) தனது 88-வது வயதில் மறைந்தார். அவரது உடல் அஞ்சலிக்காக காசா சாண்டா மார்ட்டாவின் தேவாலயத்திலிருந்து புனித பீட்டர்ஸ் பேராலயத்துக்கு புதன்கிழமை கொண்டு செல்லப்பட்டது. சனிக்கிழமை காலை 10:00 மணி வரை போப் பிரான்சிஸின் உடல் புனித பீட்டர்ஸ் பேராலயத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படும். சனிக்கிழமை போப் பிரான்சிஸின் உடல் புனித பீட்டர்ஸ் பேராலயத்தில் இருந்து இறுதிச் சடங்குகளுக்காக புனித மேரி மேஜர் பேராலயத்துக்கு கொண்டு செல்லப்படும்.
ஜார்ஜ் பெர்கோகிலோ என்ற இயற்பெயர் கொண்ட போப் பிரான்சிஸ், லத்தீன் அமெரிக்காவைச் சேர்ந்த முதல் போப் என்ற பெருமையை பெற்றவர். 2013-ம் ஆண்டும் மார்ச் 13-ம் தேதி 266-வது போப்பாக தேர்வு செய்யப்பட்ட அவர், கத்தோலிக்க கிறிஸ்தவ மத நடைமுறைகளில் அதிக சீர்திருத்தங்களை மேற்கொண்டவராக அறியப்படுகிறார்.