RCB vs RR: ஐபிஎல் 2025 தொடரின் 42வது லீக் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடந்தது. இப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெறுவதற்கு பிரகாசமான வாய்ப்பு இருந்தும் 19வது ஓவரில் ஹேசில்வுட் அபாரமாக பந்துவீசி போட்டியின் முடிவை ஆர்சிபி அணியின் பக்கம் திருப்பினார். அதேபோல், ராஜஸ்தான் அணி தோல்விக்காகவே ஆடியது என்றும் விமர்சிக்க தகுதியான அணி தான். ஏனென்றால் அந்த அணியின் ஆட்டமும் அப்படி தான் இருந்தது.
ஆர்சிபி அணி சூப்பர் பேட்டிங்
இப்போட்டியில் டாஸ் வெற்றி பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பவுலிங்கை தேர்வு செய்தது. பெங்களூரு சின்னசாமி மைதானம் சிறியது மற்றும் பேட்டிங்கிற்கு உகந்தது என்பதால் எப்போதும் 2வது பேட்டிங் செய்யும் அணி வெற்றி பெற வாய்ப்பு அதிகம். இந்த காரணத்துக்காகவே ஆர்ஆர் அணியும் பவுலிங்கை தேர்வு செய்தது. ஆனால் அந்த பிளான் ராஜஸ்தான் அணிக்கு கை கொடுக்கவில்லை. ஏனென்றால் பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டிலும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சிறப்பாக ஆடியது. முதலில் பேட்டிங் ஆடிய ஆர்சிபி அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் எடுத்தது. விராட் 70, படிக்கல் 50, சால்ட் 26 என பேட்ஸ்மேன்கள் சிறப்பாக ஆடி ரன்களை குவித்தனர்.
ராஜஸ்தான் ராயல்ஸ் சொதப்பல்
பவுலிங்கில் சிறப்பாக இல்லையென்றாலும் பேட்டிங்கில் ராஜஸ்தான் சிறப்பாக ஆடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆரம்பத்தில் சிறப்பாகவே ஆடினர். ஜெய்ஷ்வால் 49, வைபவ் சூரியவன்ஷி 16, நிதீஷ் ராணா 28, ரியான் பராக் 22 ரன்கள் எடுத்து அவுட்டாகினர். பின்வரிசையில் ஹெட்மயர் சொதப்பி விக்கெட்டை பறிகொடுத்தார். சிறப்பாக ஆடிய துருவ் ஜூரல் 47 ரன்கள் எடுத்து ராஜஸ்தான் அணியை வெற்றிக்கு மிக அருகில் அணியை அழைத்துச் சென்றார். ஆனால் 19வது ஓவரில் ஆர்சிபி அணியின் ஹேசில்வுட் அற்புதமாக பந்துவீசி துருவ் ஜூரல் விக்கெட்டை எடுத்தார். அடுத்து ஆர்ச்சர் விக்கெட்டையும் வீழ்த்த அந்த ஓவரில் தான் ஆட்டம் ஆர்சிபி பக்கம் திரும்பியது. ஹேசில்வுட்டின் அந்த ஓவர் தான் இப்போட்டியின் கிளைமேக்ஸ் என சொல்லலாம்.
ஆர்சிபி அணியின் வெற்றி
12 பந்துகளில் 18 ரன்கள் எடுத்தால் வெற்றி என ராஜஸ்தான் இருந்தபோது ஹேசில்வுட் சிறப்பாக 19வது ஓவர் வீசி முடித்தார். அத்துடன் மொத்தம் இப்போட்டியில் நான்கு விக்கெட்டுகளையும் கைப்பற்றினார் ஹேசில்வுட். 20வது ஓவரை யாஷ் தயாள் வீச, முடிவில் ஆர்சிபி அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அத்துடன் இந்த ஐபிஎல் போட்டியில் சின்னசாமி ஸ்டேடியத்தில் முதல் வெற்றியையும் பதிவு செய்தது. இந்த வெற்றியின் மூலம் ஐபிஎல் 2025 புள்ளிப் பட்டியலில் ஆர்சிபி அணி 3வது இடத்துக்கு முன்னேறியது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 8வது இடத்தில் உள்ளது.