சென்னை ஐஐடி-யில் டேட்டா சயின்ஸ் மற்றும் எலக்ட்ரானிக் சிஸ்டம்ஸ் பட்டப்படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

சென்னை: சென்னை ஐஐடியில், டேட்டா சயின்ஸ் மற்றும் எலக்ட்ரானிக் சிஸ்டம்ஸ் பாடங்களில் பிஎஸ் பட்டப்படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது தொடர்பாக சென்னை ஐஐடி வெளியிட்டுள்ள அறிக்கை: ஜேஇஇ கட்டுப்பாடுகள் ஏதுமின்றி, மாணவர்களும் பணிபுரியும் தொழில் வல்லுநர்களும் மதிப்புமிக்க ஐஐடி கல்வியைப் பெறும் வகையில் இப்பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. உலகளவில் அணுகக்கூடிய இந்த இளங்கலைப் பட்டப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்க மே 20, 2025 கடைசி நாளாகும்.

ஜேஇஇ அல்லது குறிப்பிட்ட இடங்கள் மட்டுமே இருக்கக்கூடியதாக இல்லாமல், ஐஐடி கல்வியைப் பெற விரும்பும் மாணவர்கள், பணிபுரியும் தொழில் வல்லுநர்கள் ஆகியோரைக் கருத்தில் கொண்டு உலகளவில் அணுகக்கூடியதாகவும் அனைத்தையும் உள்ளடக்கி நெகிழ்வுடன் இந்த இளங்கலை பட்டப்படிப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள், தொழில் வல்லுநர்கள், தொழிலில் மாற்றம் விரும்புவோர், சர்வதேச மாணவர்கள், 12-ம் வகுப்பு முடித்தவர்கள் என 38,000-க்கும் மேற்பட்டோர் தற்போது இத்திட்டத்தில் சேர்ந்துள்ளனர். பொறியியல் அல்லாத பின்னணி கொண்டவர்கள், பணிபுரியும் பெண்கள் என 25 சதவீதத்தினர் ஆர்வமுடன் இணைந்துள்ளனர். குறிப்பாக 20 சதவீதம் பேர் 30 வயதுக்கு மேற்பட்டவர்கள்.

ஜேஇஇ மெயின் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு நேரடி சேர்க்கை உண்டு. மற்றவர்கள் நான்கு வார காலத்திற்கு ஆன்லைன் ஆயத்தப் பாடத்திட்டத்தை வெற்றிகரமாக முடித்தபின், நேரடி தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று தகுதிபெறலாம்.

பின்வரும் இணைப்பைப் பயன்படுத்தி இப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்- https://study.iitm.ac.in/ விண்ணப்ப பதிவுசெய்ய மே 20, 2025 கடைசி நாளாகும்.

இப்பாடத்திட்டங்களின் நன்மைகள் குறித்து எடுத்துரைத்த ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி, “முதன்மைக் கல்வி நிறுவனமான சென்னை ஐஐடி இருபத்தோராம் நூற்றாண்டில் எப்படிப்பட்ட கல்வி நிறுவனமாகத் திகழ வேண்டும் என பரிசீலித்து வருகிறோம். ஐஐடி தரமுடைய கல்வியை அனைவருக்கும் கிடைக்கச் செய்யும் வகையில் எங்களது தொலைநோக்குப் பார்வையை பிரதிபலிக்கும் வகையில் பிஎஸ் பாடத்திட்டங்கள் அமைக்கப் பெற்றுள்ளன.

இதன்மூலம் நாட்டின் மூலைமுடுக்கு மட்டுமின்றி உலகின் அனைத்துப் பகுதி மாணவர்களும் கற்கச் செய்து வருகிறோம். GATE-2025 டேட்டா சயின்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவுத் தேர்வில் முதல் 10 இடங்களைப் பெற்ற மாணவ-மாணவிகளில் 3 பேர் பிஎஸ் டேட்டா சயின்ஸ் மாணவர்கள். தரத்தில் எந்த சமரசமும் செய்துகொள்ளவில்லை என்பதையே இது காட்டுகிறது. இவ்வாறு அனைத்தையும் உள்ளடக்கி எதிர்கால இந்தியாவுக்கு தயாராகும் வகையில் வழிநடத்துகிறோம்” என்று குறிப்பிட்டார்.

10-ம் வகுப்பில் கணிதம், ஆங்கிலம் படித்திருக்கும் எந்தப் பிரிவு (வணிகம், அறிவியல் போன்றவை) மாணவர்களும் டேட்டா சயின்ஸ் படிப்பில் சேர முடியும். எலக்ட்ரானிக் சிஸ்டம்ஸ் படிப்பைப் பொறுத்தவரை 11, 12ம் வகுப்புகளில் மாணவர்கள் இயற்பியல், கணிதம் ஆகிய பாடங்களை எடுத்துப் படித்திருக்க வேண்டும்.

இதுபற்றி மேலும் விளக்கம் அளித்த சென்னை ஐஐடி பிஎஸ் டேட்டா சயின்ஸ் மற்றும் அப்ளிகேஷன்ஸ் பாடத்திட்ட ஒருங்கிணைப்பாளரான பேராசிரியர் ஆண்ட்ரூ தங்கராஜ், “உயர்தரக் கல்வியை அனைவருக்கும் கிடைக்கச் செய்வதற்கான சென்னை ஐஐடி-யின் உறுதிப்பாட்டிற்கு இப்பாடத்திட்டம் எடுத்துக்காட்டாக விளங்குகிறது. அடுத்த தலைமுறைக்கு உலகளாவிய தொழில்நுட்பத் திறமையாளர்களை உருவாக்க பூகோள ரீதியான, பொருளாதாரம் மற்றும் கல்வி ரீதியான தடைகளைத் தகர்த்தெறிந்து வருகிறோம். இந்த பட்டப்படிப்பில் சிறந்து விளங்கும் மாணவர்கள் சென்னை ஐஐடி-யில் எம்.டெக் அல்லது எம்.எஸ் படிப்புகளுக்கு தங்களை மேம்படுத்திக் கொள்ளும் வாய்ப்பைப் பெறலாம்” என்றார்.

பிஎஸ் பட்டப்படிப்பு முடித்தவர்கள் தொழில் மற்றும் கல்வித்துறையில் சிறந்த வாய்ப்புகளைப் பெற்றுள்ளனர். குறிப்பிடத்தக்க சாதனையாக, பிஎஸ் பாடத்திட்டங்களைச் சேர்ந்த 3 மாணவர்கள் GATE 2025 (AIR 1, 7 மற்றும் 10) டேட்டா சயின்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவுத் தேர்வில் அகில இந்திய அளவிலான தரவரிசையில் முதல் 10 பேரில் இடம்பெற்றுள்ளனர், இப்பாடத் திட்டத்தின் கல்வி வலிமைக்கும் போட்டித்தன்மைக்கும் இதுவே சான்றாகும்.

இந்த பாடத்திட்டங்களின் சிறப்பம்சங்கள்:
• ஜேஇஇ தேவையில்லை: 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களும் சேரத் தகுதி படைத்தவர்கள்.
• பாடத்திட்டத்தில் நுழையவும், வெளியேறவும் பல்வேறு வாய்ப்புகள்: சான்றிதழ்/டிப்ளோமாவுடன் வெளியேறலாம் அல்லது பிஎஸ்சி அல்லது பிஎஸ் பட்டப்படிப்பைத் தொடரலாம்.
• எங்கிருந்தும் படிக்கலாம்: பாடத்திட்ட உள்ளடக்கம் ஆன்லைனில் வெளியிடப்படும். நேரடித் தேர்வுகள் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் உள்ள மையங்களில் நடத்தப்படும்.
• மற்றொரு இளங்கலைப் பட்டப்படிப்புடனோ பிரத்யேகப் பட்டப்படிப்பாகவோ படிக்கலாம்.
• 12-ம் வகுப்பு படிக்கும்போதே விண்ணப்பிக்கலாம்.
• உண்மையான உள்ளடக்கம்: வயது வரம்போ, மாணவர் சேர்க்கை எண்ணிக்கை வரம்போ கிடையாது. தகுதியான மாணவர்களுக்கு நிறைய நிதியுதவிகளும் உண்டு
• முன்னாள் மாணவர் தகுதி: செனட் ஒப்புதல் அளித்த பிஎஸ்சி/பிஎஸ் பட்டத்துடன் ஐஐடி மெட்ராஸ் முன்னாள் மாணவர்களும் தகுதி பெறலாம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.