''பிரதமர் மோடி ஒரு போராளி; அவர் ஜம்மு காஷ்மீரில் அமைதியை நிலைநாட்டுவார்'': ரஜினி

மும்பை: பஹல்காம் தாக்குதல் காட்டுமிராண்டித்தனமானது, இரக்கமில்லாதது என்று தெரிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்த், பிரதமர் மோடி ஜம்மு காஷ்மீரில் அமைதியை கொண்டுவரும் போராளி என்று பாராட்டியுள்ளார். மும்பையில் நடந்த சர்வதேச ஆடியோ விஷுவல் மற்றும் எண்டர்டெயின்மெண்ட் (WAVES) உச்சி மாநாடு – 2025-ல் கலந்து கொண்ட ரஜினி இவ்வாறு தெரிவித்தார்.

மாநாட்டில் பேசிய ரஜினிகாந்த், “பஹல்காமில் நடந்த காட்டுமிராண்டித்தனமான இரக்கமற்றத் தாக்குதலுக்கு பின்னர், இந்த நிகழ்வின் பொருள் பொழுதுபோக்கு என்பதால் தேவையற்ற விமர்சனங்களைத் தவிர்க்க, அரசு இந்த நிகழ்ச்சியைத் தள்ளிவைக்கும் என்று பலர் என்னிடம் தெரிவித்தனர். ஆனால் இந்த நிகழ்வு நடக்கும் என்று நான் உறுதியுடன் இருந்தேன். ஏனெனில் நமது பிரதமர் நரேந்திர மோடி மீது எனக்கு நம்பிக்கை உள்ளது.

அவர் ஒரு போராளி, எந்தச் சூழ்நிலையையும் அவர் எதிர்கொள்ளுவார், கடந்த பத்தாண்டுகளாக எந்தச் சூழ்நிலைகளையும் அவர் திறமையாகவும் அழகாகவும் கையாண்டுள்ளார். அவர், காஷ்மீரில் அமைதியையும் நாட்டுக்கு பெருமையையும் கொண்டுவருவார்.

நான் இங்கு இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த WAVES-ல் ஒரு பகுதியாக இருப்பது எனது பாக்கியம். மத்திய அரசுக்கு எனது பாராட்டுக்கள்” என தெரிவித்தார்.

ஜியோ வோர்ல்ட் சன்வென்ஷன் சென்டரில், சர்வதேச ஆடியோ விஷுவல் மற்றும் எண்டர்டெயின்மெண்ட் உச்சி மாநாடு 2025- ஐ வியாழக்கிழமை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, இந்தியாவின் படைப்பாற்றல் மற்றும் கலாச்சாரத்துறைகளுக்கு இது வரலாற்றுத்தருணம் என்று தெரிவித்தார்.

படைப்பாளர்களை இணைப்பது, நாடுகளை இணைப்பது என்ற கருப்பொருளுடன் நடக்கும் இந்த நான்கு நாட்கள் மாநாட்டின் குறிக்கோள், ஊடகம், பொழுதுபோக்கு மற்றும் டிஜிட்டல் கண்டுபிடிப்புகளுக்கான மையமாக இந்தியாவை மாற்றுவதாகும்.

WAVES-2025 என்பது ஆடியோ விஷுவல் மற்றும் எண்டர்டெயின்மெண்ட் துறைகளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்தியாவின் முதல் உச்ச மாநாடு. இது 10,000 பிரதிநிதிகள், 1000 படைப்பாளிகள், 300 நிறுவனங்கள் மற்றும் 350 ஸ்டார்ட் அப்களை ஒன்றிணைத்து, ஒரு வலுவான பல்துறை வலையமைப்பை உருவாக்கும். திரைப்படங்கள் மற்றும் ஓடிடி முதல் ஏவிஜிடி – எக்ஸ்ஆர், காமிக்ஸ், ஏஐ மற்றும் ஒளிபரப்பு வரை இந்த நிகழ்வு ஊடகம் மற்றும் தொழில்நுட்பத்தின் மொத்த கூட்டிணைவாக இருக்கும்.

மே 1ம் தேதி தொடங்கும் இந்த நிகழ்வு மே 4ம் தேதி வரை நான்கு நாட்கள் நடக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.