புதுடெல்லி: இந்தியாவில் இருந்து பாகிஸ்தானியர்கள் தங்கள் சொந்த நாட்டுக்குச் செல்வதற்கு ஏற்ப வாகா எல்லையை அந்நாடு மீண்டும் திறந்துள்ளது.
இந்தியாவின் அட்டாரி கிராமத்துக்கும் பாகிஸ்தானின் வாகா கிராமத்துக்கும் இடையே உள்ள எல்லைப் பகுதியில் இரு நாடுகளும் சோதனைச் சாவடிகளை அமைத்துள்ளன. இதன் வழியாக மக்கள் சாலை மார்க்கமாக எல்லையை கடக்க முடியும்.
இந்நிலையில், கடந்த ஏப்ரல் 22-ம் தேதி பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து, இந்தியாவில் வசிக்கும் பாகிஸ்தானியர்கள் நாட்டை விட்டு வெளியேற இந்தியா உத்தரவு பிறப்பித்தது. பாகிஸ்தானும் இதே நடவடிக்கையை கையில் எடுத்தது. இதனால் பாகிஸ்தானில் உள்ள இந்தியர்களும், இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்களும் தங்கள் தாய்நாட்டுக்கு திரும்பி வருகின்றனர். இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நேரடி விமான போக்குவரத்து இல்லாததால், பலரும் வேறு நாடுகள் வழியாக தங்கள் தாய் நாட்டுக்குச் செல்கின்றனர்.
வேறு சிலர், பஞ்சாப் மாநிலம் அமிர்தரஸில் உள்ள வாகா – அட்டாரி சோதனைச் சாவடி வழியாக வெளியேறி வருகின்றனர். நேற்று முன்தினம் (புதன்கிழமை) அட்டாரி-வாகா எல்லை வழியாக 125 பாகிஸ்தானியர்கள் இந்தியாவை விட்டு வெளியேறினர். கடந்த ஏழு நாட்களில் மொத்தம் 911 பேர் அட்டாரி – வாகா எல்லை வழியாக பாகிஸ்தான் சென்றுள்ளனர், பாகிஸ்தான் விசாக்களை வைத்திருக்கும் 15 இந்திய குடிமக்களும் இந்த பாதையை கடந்து பாகிஸ்தான் சென்றனர். அதேபோல், வாகா – அட்டாரி எல்லை வழியாக 1,617 இந்தியர்கள் தாயகம் திரும்பி உள்ளனர்.
மூடப்பட்ட வாகா எல்லை: இந்நிலையில், பாகிஸ்தானின் வாகா எல்லை நேற்று (வியாழக்கிழமை) மூடப்பட்டது. இதனால், பாகிஸ்தானியர்கள் பலர் இந்தியாவைவிட்டு வெளியேற முடியாமல் தவித்தனர். “என் அம்மாவை ஹரித்வார் அழைத்து வந்தேன். 45 நாட்கள் இந்தியாவில் இருக்க எங்களுக்கு விசா கிடைத்தது. 10 நாட்களுக்கு முன்பு இந்தியாவுக்கு வந்தோம். இருப்பினும் நாங்கள் முன்கூட்டியே வெளியேற வேண்டும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதனால் அட்டாரி வந்தோம். ஆனால், எல்லை கதவுகள் மூடப்பட்டுள்ளது” என பாகிஸ்தானை சேர்ந்த சூரஜ்குமார் என்பவர் தனியார் ஊடக நிறுவனத்திடம் தெரிவித்தார். இதுபோல், பலர் பாகிஸ்தானுக்குச் செல்ல முடியாமல் தவித்தனர்.
இந்நிலையில், இந்தியாவில் சிக்கித் தவிக்கும் தனது குடிமக்கள் திரும்பி வருவதற்கு பாகிஸ்தான் இன்று (வெள்ளிக்கிழமை) அனுமதி அளித்துள்ளது. கிட்டத்தட்ட 24 மணிநேரம் அமைதி காத்த பிறகு இந்த நடவடிக்கையை பாகிஸ்தான் எடுத்துள்ளது.
பாகிஸ்தானியர்கள் வெளியேற அவகாசம் நீட்டிப்பு: முன்னதாக, இந்தியாவில் இருந்து பாகிஸ்தானியர்கள் வெளியேறுவதற்கான கால அவகாசத்தை மறு தேதி குறிப்பிடாமல் மத்திய அரசு நேற்று நீட்டித்துள்ளது. இதுகுறித்து உள்துறை அமைச்சகம் பிறப்பித்துள்ள உத்தரவில், “அட்டாரியில் உள்ள ஒருங்கிணைந்த சோதனைச் சாவடி வழியாக பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்தை உடனடியாக நிறுத்த கடந்த ஏப்ரல் 24-ம் தேதி உத்தரவிடப்பட்டது.
உரிய அனுமதி பெற்று இந்தியா வந்தவர்கள், இவ்வழியே மே 1-ம் தேதிக்கு முன் பாகிஸ்தான் திரும்ப வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவு மறு ஆய்வு செய்யப்பட்டு பகுதி அளவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை பாகிஸ்தான் குடிமக்கள் அட்டாரி சோதனை சாவடி வழியாக இந்தியாவை விட்டு வெளியேற அனுமதி அளிக்கப்படுகிறது.” என்று கூறப்பட்டுள்ளது.
இந்திய வான்பரப்பில் பாக். விமானங்கள் பறக்க தடை: இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நேரடி விமான சேவை இல்லை. எனினும் பாகிஸ்தானின் விமான சேவை நிறுவனங்கள், இந்திய வான் பரப்பு வழியாக சிங்கப்பூர், மலேசியா, கிழக்கு ஆசிய நாடுகளுக்கு விமானங்களை இயக்கி வந்தன. தற்போது இந்திய வான் பரப்பில் பாகிஸ்தான் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த தடை உத்தரவு வியாழக்கிழமை முதல் அமலுக்கு வந்திருக்கிறது. மே 23-ம் தேதி வரை தடை நீடிக்கும். அதன்பிறகு அப்போதைய சூழலுக்கு ஏற்ப முடிவு எடுக்கப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்தியா – பாக். பதற்றம் நீடிப்பு: கடந்த 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதன் காரணமாக இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் எழுந்திருக்கிறது. பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குவாதர் துறைமுகம், அதே மாகாணத்தில் உள்ள பஸ்னி விமானப்படை தளம், கில்ஜித் பகுதியில் உள்ள ஸ்கர்டு விமானப்படை தளம், கைபர் பதுன்கவாவில் உள்ள ஸ்வாட் விமானப் படைத் தளம் ஆகியவற்றின் மீது இந்தியா தாக்குதல் நடத்தக்கூடும் என்று பாகிஸ்தான் ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அந்த பகுதிகளில் பயணிகள் விமானங்கள் பறக்க பாகிஸ்தான் அரசு தடை விதித்துள்ளது.
இந்தியாவுடன் நேரடி மோதலை தவிர்க்க அமெரிக்காவின் உதவியை பாகிஸ்தான் அரசு நாடியிருப்பதாக கூறப்படுகிறது. இந்தச் சூழலில் அமெரிக்க வெளியுறவுதுறை அமைச்சர் மார்கோ ரூபியோ மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருடன் நேற்று முன்தினம் தொலைபேசியில் பேசினார்.
தீவிரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் போருக்கு அமெரிக்கா துணை நிற்கும் என்று அவர் உறுதி அளித்தார். தாக்குதலுக்கு காரணமான தீவிரவாதிகளை நீதியின் முன்பு நிறுத்த வேண்டும். அதேநேரம் இந்தியாவும், பாகிஸ்தானும் பதற்றத்தை தணிக்க வேண்டும்’ என்று அவர் வலியுறுத்தினார். அதேபோல், பஹல்காம் தீவிரவாத தாக்குதல் தொடர்பாக இந்தியாவுடன் நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீபுக்கு அமெரிக்கா அறிவுரை வழங்கி உள்ளதும் குறிப்பிடத்தக்கது.