நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா, ராகுலுக்கு நோட்டீஸ்: குற்றம் நிரூபிக்கப்பட்டால் 7 ஆண்டு வரை சிறை தண்டனை

நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோருக்கு டெல்லி சிறப்பு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

கடந்த 1937-ம் ஆண்டில் நேருவால் தொடங்கப்பட்ட அசோசியேட்டட் ஐர்னல்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் (ஏஜேஎல்) சார்பில் நேஷனல் ஹெரால்டு பத்திரிகை வெளியிடப்பட்டு வந்தது. இதில் 5,000-க்கும் மேற்பட்ட சுதந்திர போராட்ட வீரர்கள் பங்குதாரர்களாக இருந்தனர். கடந்த 2008-ம் ஆண்டில் நேஷனல் ஹெரால்டு மூடப்பட்டது. அப்போது காங்கிரஸ் கட்சிக்கு ஏஜேஎல் நிறுவனம் ரூ.90 கோடி கடன்பட்டிருந்தது.

இந்த சூழலில் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் பங்குதாரராக உள்ள யங் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம், ரூ.50 லட்சத்தை மட்டும் செலுத்தி ஏஜேஎல் நிறுவனத்தை கையகப்படுத்தியது. மீதமுள்ள ரூ.89.50 கோடியை காங்கிரஸ் ரத்து செய்தது. இதன்மூலம் ஏஜேஎல் நிறுவனத்தின் ரூ.5,000 கோடி சொத்துகளை யங் இந்தியா பிரைவேட் நிறுவனம் முறைகேடாக அபகரித்திருப்பதாக அமலாக்கத் துறை குற்றம் சாட்டி உள்ளது.

இந்த வழக்கில் முதல்கட்ட குற்றப் பத்திரிகையை கடந்த மாதம் 9-ம் தேதி டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை தாக்கல் செய்தது. இதில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சாம் பித்ரோடா, சுமன் துபே உள்ளிட்டோர் மீது குற்றம் சாட்டப்பட்டது. கடந்த 12-ம் தேதி வழக்கில் தொடர்புடைய ரூ.661 கோடி மதிப்பிலான சொத்துகள், ரூ.90 கோடி மதிப்பிலான பங்குகள் முடக்கப்பட்டன.

கடந்த 25-ம் தேதி டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. அப்போது அமலாக்கத் துறையின் குற்றப் பத்திரிகையில் குறிப்பிட்ட சில ஆவணங்கள் இணைக்கப்படவில்லை. அந்த ஆவணங்களை அமலாக்கத் துறை இணைக்க வேண்டும். அதன்பிறகு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்புவது குறித்து முடிவு செய்யப்படும் என்று சிறப்பு நீதிபதி விஷால் கோகனே தெரிவித்தார். இதைத் தொடர்ந்து அமலாக்கத் துறை சார்பில் சம்பந்தப்பட்ட ஆவணங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த சூழலில் நேஷனல் ஹெரால்டு வழக்கு டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி விஷால் கோகனே உத்தரவிட்டார்.

மேலும் வழக்கில் தொடர்புடைய காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சாம் பித்ராடோ, சுமன் துபே, சுனில் பண்டாரி மற்றும் யங் இண்டியா நிறுவனம், டோட்டக்ஸ் மெர்சன்டைஸ் பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்களுக்கும் நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார். வழக்கின் அடுத்த விசாரணை வரும் 8-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இதுகுறித்து சட்ட நிபுணர்கள் கூறும்போது, “சட்டவிரோத பணப் பரிமாற்ற சட்டப்பிரிவின் கீழ் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் மீது குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. இந்த சட்டத்தின் 4-வது பிரிவின் கீழ் தண்டனை வழங்க வேண்டும் என்று அமலாக்கத் துறை கோரியுள்ளது. வழக்கு விசாரணையின்போது குற்றம் நிரூபிக்கப்பட்டால் சோனியா காந்தி, ராகுல் காந்திக்கு அதிகபட்சமாக 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட வாய்ப்பிருக்கிறது” என்று தெரிவித்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.