பிளே ஆப் நோக்கி குஜராத்… தோல்வியுடன் வெளியேறும் SRH…? – புள்ளிப்பட்டியல் இதோ!

IPL 2025, GT vs SRH: ஐபிஎல் தொடரின் 51வது லீக் போட்டி இன்று அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. குஜராத் டைட்டன்ஸ் அணியுடன், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி விளையாடியது.

GT vs SRH: குஜராத்தின் மிரட்டல் டாப் ஆர்டர்  

ஹைதராபாத் அணி கடந்தாண்டு சிறப்பாக விளையாடி இறுதிப்போட்டி வரை சென்றிருந்தாலும், இம்முறை பெரியளவில் விளையாடவில்லை. 9வது இடத்திலேயே நீடிக்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, சிஎஸ்கேவுக்கு எதிரான வெற்றிக்கு பின் நம்பிக்கையுடன் பிளேயிங் லெவனில் மாற்றம் செய்யவில்லை. குஜராத்தில் இன்று ஜெரால்ட் கோட்ஸிக்கு வாய்ப்பு கிடைத்தது. 

டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. குஜராத் அணிக்கு இந்த சீசன் முழுவதும் டாப் ஆர்டர் வீரர்களான சாய் சுதர்சன், சுப்மான் கில், ஜாஸ் பட்லர் ஆகியோர் சிறப்பான ஃபார்மில் இருப்பதால் தொடர் வெற்றிகள் கிடைத்தன. இன்றும் டாப் ஆர்டர் ஜொலித்தது. 

GT vs SRH: ஷமி ஓவரில் 5 பவுண்டரி

பவர்பிளேவில் சுதர்சன் – கில் ஜோடி இன்று வழக்கத்தை விட அதிரடியாக விளையாடி விக்கெட் இழப்பின்றி 82 ரன்களை குவித்தது. அதுவும் சாய் சுதர்சன் நல்ல பார்மில் இருந்தார். ஷமியின் 2வது ஓவரில் 5 பவுண்டரியை பறக்கவிட்டு மிரட்டினார்.

GT vs SRH: சுதர்சனுக்கு ஆரஞ்ச் கேப்

இருப்பினும், பவர்பிளே முடிந்து ஷீஷன் அன்சாரி வீசிய 7வது ஓவரில் சுதர்சன் 23 பந்துகளில் 9 பவுண்டரிகள் உள்பட 48 ரன்களுடன் ஆட்டமிழந்தார். இருப்பினும் அவர் 10 இன்னிங்ஸில் 504 ரன்களை அடித்து தற்போது ஆரஞ்ச் கேப்பை பெற்றுள்ளார்.

GT vs SRH: கில்லின் நல்ல ஃபார்ம் 

இதன்பின், கில் – பட்லர் ஜோடியும் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இந்த ஜோடி 62 ரன்களை எடுத்தபோது கில் சர்ச்சையான முறையில் ரன்அவுட்டாகி வெளியேறினார். அவர் 38 பந்துகளில் 10 பவுண்டரி, 2 சிக்ஸருடன் 76 ரன்களை அடித்திருந்தார், ஸ்ட்ரைக் ரேட் 200. இதைத் தொடர்ந்து பட்லரும் அரைசதம் அடித்து 64 ரன்களில் ஆட்டமிழந்தார். 

கடைசி கட்டத்தில் வாஷிங்டன், ஷாருக்கான், தேவாட்டியா சில சிக்ஸர்களை பறக்கவிட குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 224 ரன்களை அடித்தது. ஜெயதேவ் உனத்கட் 3, கம்மின்ஸ் மற்றும் அன்சாரி தலா 1 விக்கெட்டை எடுத்தனர்.

GT vs SRH: சுமார் தொடக்கம் 

இதைத் தொடர்ந்து, 225 ரன்களை துரத்திய ஹைதராபதாத் அணிக்கு ஹெட் – அபிஷேக் நல்ல தொடக்கத்தை கொடுத்தது. 6 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 57 ரன்களையே அடித்தது. குஜராத் அணியை விட பவர்பிளேவில் 25 ரன்கள் குறைவு எனலாம். அதுவும் ஹெட் 16 பந்துகளில் 4 பவுண்டரிகள் அடித்து 20 ரன்களில் ஆட்டமிழந்தார். இங்கேயே ஹைதராபாத் பின்னடைவு சந்தித்துவிட்டது. 

GT vs SRH: அபிஷேக் ஆறுதல்

அபிஷேக் சர்மா ஓரளவு ஆறுதல் அளித்தார். இஷான் கிஷன் 13 (17) ரன்களில் வெளியேறினார். கிளாசென் உள்ள வந்தும் ஆட்டம் நீண்ட நேரம் குஜராத் பக்கமே இருந்தது. அபிஷேக் சர்மா 41 பந்துகளில் 4 பவுண்டரி, 6 சிக்ஸரை பறக்கவிட்டு 74 ரன்களில் ஆட்டமிழந்தார், ஸ்ட்ரைக் ரேட் 180.49.

GT vs SRH: 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

அவரை தொடர்ந்து கிளாசென் 23(18), அனிகேத் வர்மா 3(7), கமிந்து மென்டிஸ் 0(1) அடுத்தடுத்து விக்கெட் விழ, குஜராத் ஏறத்தாழ வெற்றியை உறுதிசெய்துவிட்டது. கடைசி கட்டத்தில் கம்மின்ஸ், நிதிஷ்குமார் ரெட்டி ஓரளவு ஆறுதல் அளிக்க 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 186 ரன்களையே அடித்தது. 38 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி பெற்றது. 

GT vs SRH: ஆட்ட நாயகன் பிரசித் கிருஷ்ணா

இஷாந்த் சர்மா கடைசி ஓவரில் 2 பந்துகளை வீசியபோது கணுக்காலில் காயம் ஏற்படவே, கடைசி 4 பந்துகளை சாய் கிஷோர் வீசினார். பிரசித் கிருஷ்ணா, சிராஜ் தலா 2 விக்கட்டையும், இஷாந்த் சர்மா, கோட்ஸி தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். ஆட்டநாயகன் விருதை பிரசித் கிருஷ்ணா வென்றார். அவர் 4 ஓவர்களை வீசி 19 ரன்களை மட்டும் கொடுத்து முக்கியமான பேட்டர்களான ஹெட் மற்றும் கிளாசெனின் விக்கெட்டை கைப்பற்றியிருந்தார். 

IPL 2025 Points Table: புள்ளிப்பட்டியல் அப்டேட்

ஐபிஎல் புள்ளிப்பட்டியலில், குஜராத் டைட்டன்ஸ் அணி 14 புள்ளிகளுடன் 2வது இடத்திற்கு முன்னேறியிருக்கிறது. மும்பை அணி 14 புள்ளிகளுடன் (11 போட்டிகள்) முதலிடத்தில் நீடிக்கிறது. ஆர்சிபி, பஞ்சாப், டெல்லி, லக்னோ அணிகள் முறையே 3வது முதல் 6வது இடத்தில் உள்ளன. 8வது இடத்தில் இருக்கும் ராஜஸ்தானும், 10வது இடத்தில் இருக்கும் சிஎஸ்கேவும் தொடரில் இருந்து வெளியேறிவிட்ட நிலையில், 9வது இடத்தில் இருக்கும் சன்ரைசர்ஸ் அணி இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியேறவில்லை எனலாம்.

மேலும் படிக்க | RCB-ஐ பழிவாங்க CSK-க்கு நல்ல வாய்ப்பு… பிளேயிங் லெவனில் இந்த 2 மாற்றங்கள் வேணும்!
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.