புதுடெல்லி: வாக்காளர் பட்டியல்களின் துல்லியத்தை மேம்படுத்தவும், வாக்களிக்கும் செயல்முறையை மிகவும் வசதியாக மாற்றவும் 3 புதிய முன்முயற்சிகளை தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது.
கடந்த மார்ச் மாதம் தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சந்து மற்றும் விவக் ஜோஷி முன்னிலையில் தலைமை தேர்தல் அதிகாரிகள் (சிஇஓ) மாநாட்டின்போது இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் வழிகாட்டுதலுக்கு ஏற்ப இந்த சீர்திருத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
அதன்படி, இந்திய பதிவாளர் ஜெனரலிடம் இருந்து இறப்புப் பதிவு தரவுகளை மின்னணு முறையில் தேர்தல் ஆணையம் பெற உள்ளது. இதன் மூலம் இறப்பு குறித்த தகவல்கள் தேர்தல் பதிவு அதிகாரிகள் சரியான நேரத்தில் பெறுவது உறுதிப்படுத்தப்படும். பின்னர் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு இறந்தவரின் பெயர் பட்டியலில் இருந்து நீக்கப்படும்.
வாக்காளர்களுக்கு எளிதாக இருக்கும் வகையில் பூத் சிலிப் எனப்படும் வாக்காளர் தகவல் சீட்டுகளின் வடிவம் மாற்றியமைக்கப்பட உள்ளது. அதில் வாக்காளர் வரிசை எண், பகுதி, மைய எண் பெரிய எழுத்துகளில் இடம்பெறும். இதனால், வாக்காளர்கள் தங்கள் வாக்குச் சாவடியை எளிதாக அடையாளம் காண்பதுடன் வாக்குச் சாவடி அதிகாரிகள் வாக்காளரின் விவரங்களை திறம்படக் கண்டறிய முடியும்.
மேலும், வாக்குச் சாவடி நிலை அலுவலர்களுக்கு புதிய அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது. இதன் மூலம், வீடு வீடாகச் சென்று வாக்காளர் சரிபார்ப்பு மற்றும் பதிவு நடவடிக்கைகளின் போது மக்கள் அவர்களை எளிதாக அடையாளம் கண்டு கொண்டு நம்பிக்கையுடன் தகவல் மற்றும் தரவு தொடர்புகளை அவர்களிடம் மேற்கொள்ள முடியும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.