“அதிமுகவினரின் அதிருப்தியை நாம் பயன்படுத்த வேண்டும்” – திமுகவினருக்கு ஸ்டாலின் அறிவுரை

சென்னை: “பாஜகவுக்கு பயந்து அதிமுக கூட்டணி அமைத்துள்ளது. இதனால், அதிமுகவில் பலர் அதிருப்தியில் உள்ளனர். இந்தச் சூழலை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று திமுக மாவட்டச் செயலாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சனிக்கிழமை முதல்வரும், கட்சித் தலைவருமான ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. பின்னர், முதல்வர் ஸ்டாலின் பேசியது: “நமது பலமே திமுகவின் கட்டுமானம்தான். வேறு எந்தக் கட்சிக்கும் இல்லாத இந்த நிர்வாக கட்டமைப்பை காலம்தோறும் புதுப்பிக்கிறோம். புதுப்பித்துக் கொண்டே இருக்க வேண்டும். வரும் தடங்கல்களை உங்கள் உழைப்பால் வெல்ல வேண்டும்.

பாஜக தமிழகத்தில் எப்படியாவது காலூன்ற நினைக்கிறது. அதனால் அச்சுறுத்தி, அதிமுகவை அடக்கிவிட்டது. பழனிசாமிக்கும் வேறு வழியில்லை. பாஜக கூட்டணியை ஏற்காவிட்டால் சொந்த கட்சியில் அவரது தலைமைக்கே சிக்கல் வரும் என்று பயப்படுகிறார். பாஜகவுக்கு பயந்து அதிமுக கூட்டணி அமைத்துள்ளது. இதனால், அதிமுகவில் பலர் அதிருப்தியில் உள்ளனர். இந்தச் சூழலை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இண்டியா கூட்டணி அமைத்ததில் திமுகவின் பங்கு அதிகம் என்பதால், திமுக மீது பாஜக கோபத்தில் உள்ளது. இதனால்தான் அமலாக்கத் துறையை ஏவிவிடுகிறது. அரசியல் ரீதியாக நம்மை வெல்ல முடியாதவர்கள், இதுபோன்ற மிரட்டல்கள் மூலம் அசிங்கப்படுத்த நினைப்பார்கள். அவர்களது அச்சுறுத்தலை அரசியல் ரீதியாக எதிர்கொள்வோம்.

அமைச்சர்கள் அனைவரும் இனி சென்னையைவிட, மாவட்டங்களில்தான் அதிக நாட்கள் செலவிட வேண்டும். எம்எல்ஏக்கள் ஒவ்வொரு ஊராட்சி, வார்டு வாரியாக சென்று மக்களை சந்திக்க வேண்டும். வெற்றி பெறுபவர், திறமை வாய்ந்தவர் மட்டுமே தேர்தலில் நிறுத்தப்படுவார். வேட்பாளர் யார் என்பதை தலைமை கழகம் முடிவு செய்யும். அவரை சட்டப்பேரவைக்கு தேர்வு செய்ய உழைக்க வேண்டியது உங்கள் கடமை.

வரும் ஓராண்டு காலம் மிக முக்கியமான காலகட்டம். உள்ளூர் பிரச்சினைகளுக்கு அதிக முக்கியத்துவம் தரவேண்டும். சாதனைகளை சமூக ஊடகங்கள் வாயிலாக கொண்டு சேர்க்க வேண்டும். சமூக ஊடக பணிகளுக்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் 15-20 பேரை நியமிக்க வேண்டும். இதற்கான செலவினங்களை மாவட்ட அமைச்சர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும். பவளவிழா கொண்டாடிய திமுக, 6-வது முறையாக ஆட்சியில் அமர்ந்துள்ளது. கடந்த 7 ஆண்டுகளாக நாம் எதிர்கொண்ட அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்று வருகிறோம். கோடிக்கணக்கான திமுக தொண்டர்களும், நிர்வாகிகளும்தான் இதற்கு காரணம்.

மக்களவைத் தேர்தலை தொடர்ந்து, சட்டப்பேரவை தேர்தலிலும் நாம் வெற்றி பெற வேண்டும். இதற்கு அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் இணைந்து பணியாற்ற வேண்டும். மாவட்ட நிர்வாகிகள் மற்றும் இதர பொறுப்பாளர்களுடன் இணைந்து மாவட்டச் செயலாளர்கள் தேர்தல் பணியாற்ற வேண்டும். நிர்வாகிகள் துரோகம் செய்தால், திமுக மிகப் பெரிய பிரச்சினையை சந்திக்கும். அது முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு செய்யும் மாபெரும் துரோகம். எனவே, அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவது அவசியம்” என்று முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.

4 தீர்மானங்கள் என்னென்ன? – முன்னதாக, திமுக அரசின் 5-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் முதல்வர் ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவிப்பது, தமிழகம் முழுவதும் 1,244 இடங்களில் திமுக அரசின் 4 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டங்கள் நடத்துவது, மதுரையில் ஜூன் 1-ம் தேதி திமுக பொதுக்குழு கூட்டத்தை கூட்டுவது, அமலாக்கத் துறை போன்ற அமைப்புகளை அரசியல் பழிவாங்கலுக்கு பயன்படுத்தும் மத்திய பாஜக அரசின் அதிகார அத்துமீறலுக்கு கண்டனம் தெரிவிப்பதுடன், மக்கள் மன்றத்திலும், சட்டத்தின் துணை கொண்டும் திமுக எதிர்கொள்ளும் என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.