சிந்து நதியை ‘தடுக்கும்’ கட்டமைப்பு மீது தாக்குவோம்: பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் எச்சரிக்கை

இஸ்லாமாபாத்: இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், “சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை மீறி, நதியில் இந்தியா ஏதாவது புதிய கட்டமைப்பை உருவாக்கினால், அதனைத் தாக்குவோம்” என்று பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா முகமது ஆசிப் எச்சரித்துள்ளார்.

ஜியோ நியூஸ் தொலைக்காட்சிக்கு அமைச்சர் கவாஜா அசிஃப் அளித்த பேட்டியில், “சிந்து நதியில் புதிதாக எந்தவொரு கட்டமைப்பையும் கட்டுவது, இந்தியாவின் ஆக்கிரமிப்பாக பார்க்கப்படும். அவர்கள் சிந்து நதியில் ஏதாவது கட்டமைப்பைக் கட்ட முயன்றால், அதனை நாங்கள் கட்டாயம் தாக்குவோம். ஆக்கிரமிப்பு என்பது பீரங்கியாலோ துப்பாக்கியாலோ சுடுவது மட்டுமில்லை; அதற்கு பல முகங்கள் உள்ளன. தண்ணீரைத் தடுத்து நிறுத்துவதோ, திசைத் திருப்பி விடுவதோ அதில் ஒன்று. இது தாகம், பட்டினி மரணங்களுக்கு வழிவகுக்கும்.

நாங்கள் இந்த விவகாரத்தைத் தொடர்ந்து எடுத்துச் சொல்வோம். சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை மீறுவது இந்தியாவுக்கு எளிதல்ல. சம்பந்தப்பட்டவர்களை பாகிஸ்தான் அணுகும்” என்று தெரிவித்தார். மேலும், இந்தியா தொடர்ந்து தூண்டிவிடும் வேலையைச் செய்கிறது என்று குற்றம்சாட்டிய பாகிஸ்தான் அமைச்சர், ”பாகிஸ்தான் பழிவாங்கும் நடவடிக்கையை மட்டுமே எடுக்கும்” என்றார்.

இந்தியாவுக்கு மிரட்டல் விடுக்கும் விதமாக பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் பேசுவது இது முதல்முறை அல்ல. கடந்த வாரத்தில், “இந்தியாவின் நடவடிக்கைகள், இரண்டு அணு ஆயுத அண்டை நாடுகளுக்கு இடையே முழு போருக்கு வழிவகுக்கும்” என்று அவர் எச்சரித்திருந்தார். ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், “ராணுவ ஊடுருவல் நிகழும். தற்போது அது தவிர்க்க முடியாத ஒன்று என்பதால் நாங்கள் எங்கள் படைகளை பலப்படுத்தியுள்ளோம். தற்போதைய சூழலில் எத்தகைய யுக்திகள் மேற்கொள்ளப்பட வேண்டுமோ அதற்கான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

“அணு ஆயுத விஷயத்தில் பாகிஸ்தான் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கும். அதேநேரத்தில், எங்கள் இருப்புக்கு நேரடி அச்சுறுத்தல் இருந்தால் மட்டுமே அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவோம்” என்று தெரிவித்துள்ளார். இந்தியா – பாகிஸ்தானுக்கு இடையே அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், இந்த வாரத்தின் தொடக்கத்தில் கவாஜா ஆசிப்பின் எக்ஸ் கணக்கை இந்திய அரசு தடை செய்திருந்தது.

இதனிடையே, காஷ்மீரின் பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இந்தியா பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சிந்து நதி நீர் பங்கீடு ஒப்பந்தத்தை நிறுத்தியது, வாகா எல்லையை மூடியது, பாகிஸ்தானியர்கள் வெளியேற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.