புதுடெல்லி: பஹல்காம் தீவிரவாத தாக்குதல் எதிரொலியாக பாகிஸ்தானில் இருந்து அனைத்து பொருட்கள் இறக்குமதிக்கும் இந்தியா தடை விதித்துள்ளது. இருதரப்பு கடித போக்குவரத்து, இந்திய துறைமுகங்களில் கப்பல்கள் நுழையவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த 22-ம் தேதி சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 26 பேர் உயிரிழந்தனர். பாகிஸ்தானிலிருந்து செயல்படும் லஷ்கர்-இ-தொய்பா அமைப்புக்கு இதில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) விசாரணை நடத்தி வருகிறது. இந்த தாக்குதலையடுத்து, பாகிஸ்தானுடனான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக இந்தியா அறிவித்தது. இதுதவிர, விசா ரத்து, அட்டாரி-வாகா எல்லை மூடல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், இந்த தாக்குதலில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் மோடி கடும் எச்சரிக்கை விடுத்தார்.
இதன் தொடர்ச்சியாக, பாதுகாப்பு அமைச்சர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர், முப்படை தலைமை தளபதி உள்ளிட்டோர் அடங்கிய உயர்நிலைக் குழுவைக் கூட்டி ஆலோசனை நடத்திய பிரதமர் மோடி, தீவிரவாதிகள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு முப்படைகளுக்கும் முழு சுதந்திரம் வழங்கினார். ராணுவம் பாகிஸ்தான் எல்லையில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளது. முப்படைகளும் தயார் நிலையில் உள்ளன. இதுபோல இந்தியாவுடனான வர்த்தகத்துக்கு தடை விதித்த பாகிஸ்தான், தங்கள் வான் எல்லையில் இந்திய விமானங்கள் பறக்க தடை விதித்தது. இதனால் இரு நாடுகளுக்கிடையே போர் பதற்றம் நிலவுகிறது. இந்த சூழலில், இந்த தாக்குதலில் பாகிஸ்தானின் உளவு அமைப்புக்கும் (ஐஎஸ்ஐ) தொடர்பு இருப்பது என்ஐஏ நடத்திய விசாரணையில் தெரியவந்து உள்ளது.
இந்நிலையில், இந்திய வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் (டிஜிஎப்டி) நேற்று முன்தினம் வெளியிட்ட அறிவிக்கையில் கூறியிருப்பதாவது: பாகிஸ்தானிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் அனைத்து வகையான பொருட்களின் நேரடி அல்லது மறைமுக இறக்குமதிக்கும் தடை விதிக்கப்படுகிறது. குறிப்பாக, வழக்கமாக சுதந்திரமாக இறக்குமதி செய்யக்கூடிய பொருட்கள் மற்றும் பிற விதிகளின் கீழ் அனுமதிக்கப்பட்ட பொருட்கள் உட்பட அனைத்துக்கும் இது பொருந்தும். இந்தக் கட்டுப்பாடு இறக்குமதிக்கு மட்டுமல்ல, இந்தியா வழியாக செல்லும் பொருட்களுக்கும் பொருந்தும்.
இந்த தடை உடனடியாக அமலுக்கு வருகிறது. மறு உத்தரவு வரும் வரை இது அமலில் இருக்கும். தேசிய பாதுகாப்பு மற்றும் பொதுக் கொள்கையை கருத்தில் கொண்டு இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடையிலிருந்து விலக்கு வேண்டுமானால், மத்திய அரசிடமிருந்து முன் அனுமதி பெற வேண்டியது அவசியம் ஆகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் உடனான கடிதப் போக்குவரத்துக்கு மத்திய அரசு நேற்று தற்காலிக தடை விதித்தது.இது தொடர்பாக மத்திய தொலைத் தொடர்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “பாகிஸ்தானிலிருந்து வான் வழியாகவோ அல்லது தரை வழியாகவோ வரும் அனைத்து வகை கடிதங்கள் மற்றும் பார்சல்களுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து அந்த நாட்டுக்கு அனுப்பப்படும் கடிதங்கள் மற்றும் பார்சல்களுக்கும் இந்த கட்டுப்பாடு பொருந்தும்” என கூறப்பட்டுள்ளது.
மேலும் பாகிஸ்தான் கப்பல்கள் இந்திய துறைமுகங்களில் நுழையவும் இந்திய கப்பல்கள் பாகிஸ்தான் துறைமுகங்களுக்கு செல்லவும் மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழி போக்குவரத்து அமைச்சகம் தடை விதித்துள்ளது.