புதுச்சேரி: புதுச்சேரியில் இம்மாதம் 20-ம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்துவது என ஏஐடியூசி தலைமையிலான கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
தொழிலாளர்கள் சார்பாக தனித்தும், கூட்டாகவும் சமர்ப்பிக்கப்பட்ட கோரிக்கைகளை மத்திய அரசு புறக்கணித்துள்ளதோடு, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக தொழிலாளர் விரோத நடவடிக்கைகள், சட்டத் திருத்தங்கள் மேற்கொள்வது பற்றி தேசிய பேரவை விவாதித்தது. இதையடுத்து நாடு தழுவிய அளவில் வரும் 20-ம் தேதி பொது வேலை நிறுத்தத்துக்கு மத்திய தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளது.
இந்தப் போராட்டத்தை புதுச்சேரியில் நடத்துவது சம்பந்தமான ஆலோசனை கூட்டம் முதலியார்பேட்டை ஏஐடியூசி அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு ஏஐடியூசி மாநில பொதுச் செயலாளர் சேதுசெல்வம் தலைமை தாங்கினார். மாநில கவுரவத் தலைவர் அபிஷேகம், மாநிலத் தலைவர் தினேஷ் பொன்னையா, சிஐடியு மாநில செயலாளர் சீனுவாசன், மாநிலத் தலைவர் பிரபுராஜ், ஐஎன்டியூசி மாநில பொதுச் செயலாளர் ஞானசேகரன் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கத்தினர் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில், வேலை நிறுத்த பந்த் போராட்டத்தை விளக்கி கோரிக்கை விளக்க கருத்தரங்கம் வரும் 6-ம் தேதி மாலை சுதேசி மில் அருகில் நடத்துவது எனவும், மே 15, 16, 17 ஆகிய மூன்று தினங்கள் வேன் பிரச்சாரம் செய்வது எனவும், மே 20-ம் தேதி பந்த், மறியல் போராட்டம் ராஜா தியேட்டர், சேதராப்பட்டு, மதகடிப்பட்டு, திருக்கனூர், வில்லியனூர், அரியாங்குப்பம், பாகூர், காரைக்கால் ஆகிய மையங்களில் நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
புதிய தொழிலாளர் சட்டங்களை திரும்ப பெற வேண்டும். அமைப்புசாரா தொழிலாளர், ஒப்பந்த தொழிலாளர், திட்டம் சார்ந்த தொழிலாளர் உட்பட அனைவருக்கும் குறைந்தபட்ச ஊதியம் ரூ.26 ஆயிரம் மாதம் ஒன்றுக்கு நிர்ணயம் செய்ய வேண்டும். ஒப்பந்த, தினக்கூலி, வெளிச்சந்தை முறை, பயிற்சியாளர் போன்ற பெயர்களில் நடக்கும் சுரண்டலுக்கு முடிவு கட்ட வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்கிட வேண்டும். அமைப்புசாரா தொழிலாளர் உட்பட அனைத்து தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ. 9 ஆயிரம் மற்றும் சமூக பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடத்தப்பட உள்ளது.