450 கி.மீ தூரம் பாய்ந்து தாக்கவல்ல ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்ததாக பாகிஸ்தான் தகவல்

புதுடெல்லி: தரையிலிருந்து தரைக்கு 450 கி.மீ தூரம் வரை பாய்ந்து சென்று இலக்குகளைத் தாக்கவல்ல ஏவுகணை சோதனையை வெற்றிகரமாகச் செய்துள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. இந்த ஏவுகணை அப்தலி வெப்பன் சிஸ்டம் (Abdali Weapon System) என்று அந்நாட்டு ராணுவத்தால் அழைக்கப்படுகிறது. இந்தச் சோதனையை எக்சர்சைஸ் இண்டஸ்-ன் (Exercise INDUS) ஒரு பகுதியாக செய்துள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கு பகுதியில் நடைபெற்ற தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலை பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ உத்தரவின் பேரில், லஷ்கர் -இ-தொய்பா திட்டமிட்டுள்ளது என இந்தியாவின் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) தனது முதல் கட்ட விசாரணை அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்தத் தாக்குதலும் கற்பனையிலும் நினைத்துப் பார்க்க முடியாத பதிலடி கொடுக்கப்படும் என்று பிரதமர் மோடி கூறியிருந்த நிலையில், பாதுகாப்பு ஆலோசனைக் குழு கூட்டம், பாதுகாப்பு அமைச்சரவை கூட்டம், மத்திய அமைச்சரவைக் கூட்டம் எனப் பல கட்ட கூட்டங்கள் நடந்துவிட்டன. பாகிஸ்தானும் பல்வேறு ஆலோசனைக் கூட்டங்களை நடத்தியது. இதனால் இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் மூளுமா என்ற வாத விவாதங்களும் நிகழத் தொடங்கின.

இந்தியாவின் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைக்கு உறுதுணையாக இருப்போம் என்று அமெரிக்கா உறுதிபடத் தெரிவித்தது. ஒரு பிராந்தியப் போருக்கான அத்தனை பதற்றங்களும் சூழ்ந்து கொண்டிருக்கிறது. இவை ஒருபுறம் இருக்க, எங்கே நடவடிக்கை என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சிக்கவும் தொடங்கிவிட்டன. இந்தச் சூழலில் தான் தரையிலிருந்து தரைக்கு 450 கி.மீ தூரம் வரை பாய்ந்து சென்று இலக்குகளைத் தாக்கக்கூடிய ஏவுகணை சோதனையை வெற்றிகரமாகச் செய்துள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. இது இந்தியாவை வம்பிழுக்கும் செயலாக பார்க்கப்படுகிறது.

எதற்காக சோதனை? – இந்த ஏவுகணை சோதனை பாகிஸ்தான் ராணுவத்தின் ஆயத்த நிலையை உறுதிப்படுத்துவதற்காகவும், ஏவுகணைகளின் அதிநவீன செயல்திறன்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட அம்சங்களை சரிபார்த்துக் கொள்வதற்காகவும் நடத்தப்பட்டதாகத் தெரிகிறது. பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் மற்றும் ராணுவத் தளபதிகள் பாகிஸ்தானின் நலனை, பாதுகாப்பை உறுதி செய்வதில் படைகள் பலத்துடனும், தயார் நிலையிலும், தொழில்நுட்ப ரீதியாக வலுவாகவும் இருப்பதாக நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

வம்பிழுக்கிறதா பாகிஸ்தான்? – ஏற்கெனவே, ஜம்மு – காஷ்மீரின் உரி, நவு​கம், ராம்​பூர், கெரன், குப்​வா​ரா, பூஞ்ச் உள்ளிட்ட எல்​லைப் பகு​தி​களில் கடந்த 9 நாட்​களாக இந்​தியா, பாகிஸ்​தான் ராணுவ வீரர்​களுக்கு இடையே கடும் துப்பாக்​கிச் சண்டை நடை​பெற்று வரு​கிறது. பாகிஸ்தான் அத்துமீறல்களுக்கு இந்தியாவும் தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது. இதுதவிர பாகிஸ்தான் தலைவர்கள் அவ்வப்போது போரைத் தூண்டும் விதமாக சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். பாகிஸ்தான் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அட்டாவுல்லா தாரா, அடுத்த 36 மணி நேரத்துக்குள் பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தலாம் என்றார். ஆனால் அவர் அவ்வாறு கூறியே 72 மணி நேரம் கடந்துவிட்டது.

அனைத்து விதமான இறக்குமதிகளுக்கும் தடை: பாகிஸ்தானில் இருந்து நேரடியாக மற்றும் மறைமுகமாக என அனைத்துவித இறக்குமதிகளுக்கும் இந்தியா உடனடி தடை விதித்துள்ளதாக வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதேபோல் இந்திய துறைமுகங்களிலும் பாகிஸ்தான் கப்பல்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வர்த்தகத்துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், “மறு உத்தரவு வரும் வரை பாகிஸ்தானில் உற்பத்தியாகும் பொருட்கள் அல்லது அங்கிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு உடனடியாக அமலாகும் வகையில் தடைவிதிக்க ஏதுவாக வெளிநாட்டு வர்த்தக கொள்கையில் புதிய திருத்தம் செய்யப்பட்டுள்ளது. நாட்டின் பாதுகாப்பு மற்றும் பொதுநலனை கருத்தில் கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், கப்பல் போக்குவரத்து இயக்குநரகம் பிறப்பித்துள்ள மற்றொரு உத்தரவில் பாகிஸ்தான் கொடியை தாங்கிய எந்தவொரு கப்பலும் இந்திய துறைமுகங்களுக்குள் அனுமதிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பங்கர்கள், பதுங்கிடங்கள், பதற்றம் – இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டு கோட்டின் அருகே உள்ள கிராம மக்கள் பங்கர்கள், பலப்படுத்தப்பட்ட பதுங்கிடங்கள் என தற்காப்புக்கு ஆயத்தமாகி வருகின்றனர். இந்தியாவின் சுராண்டா, பாகிஸ்தானின் சக்கோத்தி என இருநாட்டு எல்லை கிராமங்களிலும் இந்த ஆயத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

சுராண்டா கிராமவாசி ஒருவர் ஊடகப் பேட்டி ஒன்றில், “இங்கே 1500 பேர் வசிக்கிறோம். எங்கள் கிராமத்தில் 6 பதுங்குகுழிகள் இருக்கின்றன. பஹல்காம் தாக்குதலுக்குப் பின்னர் இருதரப்பு ராணுவமுமே ஒருவருக்கொருவர் அச்சுறுத்தலாக இருக்கின்றனர். எல்லைப் பதற்றத்தால் நாங்களும் அச்சத்தில் உள்ளோம். ஏதேனும் பெரிய அளவில் சண்டை ஏற்பட்டால் எங்கள் கிராமமே அதிகம் பாதிக்கப்படக் கூடியதாக இருக்கும்” என்றார்.

எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டருகே அத்துமீறி தாக்குதல் நடத்தப்படுவதே பதற்றத்தை அதிகரித்துள்ள சூழலில் சீனா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் இந்தியா – பாகிஸ்தான் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்று வலியுறுத்திவருகின்றன. இவ்வாறான சூழலில் பாகிஸ்தானின் இந்த ஏவுகணை சோதனை ஒரு வம்பிழுக்கும் செயலாகவே பார்க்கப்படுகிறது.

இதனிடையே, உத்தர பிரதேச கங்கை விரைவுச் சாலையில் ரஃபேல், சுகோய் உட்பட போர் விமானங்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருவதும் கவனிக்கத்தக்கது. அதன் விவரம்: உத்தர பிரதேச கங்கை விரைவுச் சாலையில் ரஃபேல், சுகோய் உட்பட போர் விமானங்கள் தீவிர பயிற்சி

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.