Cooku with Comali: `பிரச்னை முடிந்ததா!' – சமாதானம் பேசி அழைத்து வரப்பட்டாரா மதுமிதா?

விஜய் டிவிக்கு இது சமாதான சீசன் போல. பத்து ஆண்டுகளூக்கு முன் வழக்கறிஞர் நோட்டிஸ் அனுப்பிய நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனை குக்கு வித் கோமாளி சீசன் 6 ல் ஒரு குக்காக அழைத்து வந்திருக்கிறார்கள்.

இது தொடர்பாக லட்சுமி ராமகிருஷ்ணனிடம் கேட்டபோது, ‘என்னுடைய நிகழ்ச்சியைக் கலாய்த்து நிகழ்ச்சி பண்ணியது தொடர்பான அந்தப் பிரச்னை எப்போதோ முடிவுக்கு வந்து விட்டது. அதனால் நடந்தது நடந்ததாக இருக்கட்டும், நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்’ என எல்லாவற்றையும் மறந்து விட்டேன்’ எனச் சொல்லியிருந்தார்.

இதே குக்கு வித் கோமாளியில் இன்னொரு நடிகையும் நீண்ட நாள் கழித்து விஜய் டிவிக்கு வந்திருக்கிறார். இவருக்கும் விஜய் டிவிக்கும் நடந்த பஞ்சாயத்தும் கூட அந்தச் சமயத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டது. அவர் வேறு யாருமல்ல. நடிகை மதுமிதாதான்.

நடிகை மதுமிதா

பிக் பாஸ் 3வது சீசனில் ஒரு போட்டியாளராகக் கலந்து கொண்ட மதுமிதா நிகழ்ச்சியின் போது கையை அறுத்துக் கொண்டதாகச் சொல்லி நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டது நினைவிருக்கலாம்.

நிகழ்ச்சியில் நடிகை ஷெரின், வனிதா விஜயகுமார் ஆகியோருடன் சில வாக்குவாதங்கள் நிகழ்ந்து அதன் தொடர்ச்சியாகவே கையை பிளேடால் அறுத்துக் கொண்டதாக அப்போது பேசப்பட்டது,

இந்த விவகாரத்தில் தன் பக்கமிருந்த நியாயத்தை சேனல் மற்றும் தயாரிப்பு தரப்பு புரிந்து கொள்ளவில்லை என புலம்பிய மது, ஒருகட்டத்தில் கமல்ஹாசன் மீதும் கூட தன் அதிருப்தியை வெளிப்படுத்தி பேட்டியெல்லாம் தந்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் எப்படி?

அவரது நட்பு வட்டத்தில் சிலரிடம் பேசினோம்.

நடிகை மதுமிதா

 ‘’பிக்பாஸ் நிகழ்ச்சி தந்த மனக்கசப்பு அவங்களுக்கு ரொம்ப நாளா இருந்தது. நிகழ்ச்சி முடிஞ்சு வெளியில் வந்ததுல இருந்து விஜய் டிவியில எந்த நிகழ்ச்சியிலயும் கலந்துக்காமதான் இருந்தாங்க.

விஜய் டிவின்னு மட்டுமல்ல எந்தவொரு பொது நிகழ்ச்சியிலயுமே முகம் காட்ட வேண்டாம்னுதான் ஒதுங்கியிருந்தாங்க.

ஏற்கனவே ஆன்மிகத்துல அதிக நாட்டமிருந்ததால் கோயில்களுக்கு பயணம் பண்ணினாங்க. வீட்டுல குழந்தையுடன் நேரத்தைச் செலவழிச்சாங்க.

இந்தச் சூழல்ல குக்கு வித் கோமாளி கடந்த சீசனுக்கே அவங்களை கலந்துக்கச் சொல்லி அணுகியிருக்காங்க. ஆனா அப்ப மறுத்துட்டாங்க.

தொடர்ந்து இந்த சீசன்லயும் மறுபடியும் கூப்பிட்டதால கலந்துக்கச் சம்மதிச்சிட்டாங்க. காலம் மாத்திடுச்சுன்னு சொல்றதை விட எதையும் பாசிட்டிவா எடுத்துக்கற மனநிலைக்கு இப்ப அவங்க வந்துட்டாங்க.

அதோட வெளிப்பாடுதான் இந்த சீசன்ல கலந்துக்கிட்டது” என்கிறார்கள்.   

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.