பஹல்காம் தீவிரவாத தாக்குதலை கண்டித்து தமிழகம் முழுவதும் பாஜக இன்று ஆர்ப்பாட்டம்

பஹல்காம் தீவிரவாத தாக்குதலை கண்டித்து தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.

இதுதொடர்பாக சென்னை தியாகராய நகரில் உள்ள கமலாலயத்தில் செய்தியாளர்களிடம் தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று கூறியதாவது:

நீட் விவகாரத்தில் அரசியல் செய்வதை எல்லாம் பொருட்படுத்தாமல் மாணவர்கள் நீட் தேர்வு எழுதி எதிர்காலத்தை நோக்கி சென்றுகொண்டு இருக்கின்றனர். திமுக ஆட்சிக்கு வந்ததும், நீட் தேர்வை ரத்து செய்வோம் என்றனர். அவர்கள் ஆட்சிக்கு வந்து தற்போது 5-வது நீட் தேர்வு நடக்கிறது. சொல்வது எதையும் திமுக செய்வது இல்லை. இனிமேல் அவர்களால் எதுவும் செய்யவும் முடியாது. மக்களுக்கு செலவிடாமல், பாராட்டு விழாவுக்கும், விளம்பரத்துக்கும் வீண் செலவு செய்கின்றனர்.

அதிமுகவுக்கு பாஜக அழுத்தம் கொடுப்பதாக ஸ்டாலின் கூறுகிறார். உண்மையில், அதிமுக – பாஜக கூட்டணி அமைந்த பிறகு, ஸ்டாலின்தான் மிகுந்த அழுத்தத்தில் இருக்கிறார். ‘‘கல்வி நிலையங்களை மூடநம்பிக்கை, மத சடங்குகள் நடைபெறும் இடமாக மாற்ற கூடாது. அங்கு சமூக நீதிதான் இருக்க வேண்டும்’’ என்று ஸ்டாலின் சொல்கிறார். ஆனால், அவரது ஆட்சியில்தான் பள்ளிகளில் மாணவர்களின் பைகளில் அறிவுக்கு பதிலாக அரிவாள் இருக்கிறது. ஒற்றுமைக்கு பதிலாக சாதிய வேற்றுமை இருக்கிறது.

மோடி வெளிநாடு செல்வதை விமர்சனம் செய்தனர். நல்லெண்ண அடிப்படையில் அவர் சென்று வந்த பயணங்கள், இன்று நமக்கு உதவுகின்றன. உலகின் பல நாடுகளும் தற்போது இந்தியாவின் பக்கம் உள்ளன. பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு எதிராக, 30 நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவு குரல் எழுப்பி உள்ளன.

பஹல்காம் தீவிரவாத தாக்குதலை கண்டித்து மே 5-ம் தேதி (இன்று) மாலை 5 மணிக்கு தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். சென்னையில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், கோவையில் முன்னாள் தலைவர் அண்ணாமலை, மதுரையில் பொன்.ராதாகிருஷ்ணன், திண்டுக்கல்லில் தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். தமிழகத்தில் எங்கெங்கு பாகிஸ்தானியர்கள் உள்ளனர் என்பதை தீவிரமாக கண்டுபிடித்து அவர்களை வெளியேற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.