பொதுமக்கள் கேள்வி கேட்டால் பொய் வழக்கு பதிவு செய்வதா? – தமிழக அரசுக்கு பாஜக கண்​டனம்

சென்னை: மத்திய அரசின் திட்டங்களில் நடக்கும் முறைகேடுகளை பொதுமக்கள் கேள்வி கேட்டால் அவர்கள் மீதே பொய் வழக்கு பதிவு செய்வதா? என தமிழக பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.

பாஜக மாநில செயலாளர் அஷ்வத்தாமன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம், ஜல்ஜீவன் திட்டம் உள்ளிட்ட மத்திய அரசின் திட்டங்களில் பயனாளிகளை தேர்வு செய்கிற நோடல் ஏஜென்சியாக மாநில அரசு உள்ளது. இதில் பல்வேறு முறைகேடுகளும், ஊழல்களும் தமிழகத்தில் நடக்கிறது. குறிப்பாக, வீடு ஒதுக்கீடு செய்வதற்கு லஞ்சம் வாங்குவதும், மேலும் சார்பு அடிப்படையில் வீடுகளை ஒதுக்குவதும் தமிழகம் முழுவதும் நடந்தேறி வருகிறது.

குழாய் மூலமாக குடிநீர் வழங்குவதற்கு ரூ.10,000 முதல் ரூ.15,000 வரை லஞ்சம் பெறப்படுவதாக குற்றச்சாட்டு பல பகுதிகளில் எழுந்துவருகிறது. இந்நிலையில், இந்த ஊழலுக்கு எதிராக பொதுமக்கள் புகார் அளித்தால், தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், புகார் அளிக்கிற பொது மக்கள் மீதே பொய் வழக்குகள் போடுவதாக மிரட்டி பயமுறுத்தி வருகிறது திராவிட மாடல் அரசு.

குறிப்பாக, தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாள் ஊராட்சியிலும், கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்திலும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளது. பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம், ஜல்ஜீவன் திட்டத்தில் நடக்கும் ஊழலை பொதுமக்கள் கேள்விக்கேட்டால், அவர்கள் மீது பொய் வழக்கு போடுவோம் என காவல்துறையை வைத்து மிரட்டி வருகிற இந்த போக்கு ஜனநாயகத்துக்கு எதிரானது. தமிழக அரசு உடனடியாக அந்த புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.