இந்திய அணியின் கேப்டனாக இருந்த தோனி பல்வேறு சாதனைகளை செய்துள்ளார், அதேபோல ஐபிஎல் தொடரிலும் கேப்டனாக பல்வேறு சாதனைகளை செய்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருந்து இதுவரை 5 கோப்பைகளை வென்று கொடுத்துள்ளார். 2024 ஆம் ஆண்டு தனது கேப்டன்சி பொறுப்பை ருதுராஜ் கெய்க்வாடிடம் ஒப்படைத்தார். அதிலிருந்து ஒரு வீரராக மட்டுமே சென்னை அணிக்காக விளையாடி வருகிறார். இந்த ஆண்டு ருதுராஜ்க்கு கையில் ஏற்பட்ட காயம் காரணமாக தொடர் முழுவதும் இருந்து விலகியதால் தோனி மீண்டும் கேப்டன் பொறுப்பை ஏற்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் படிங்க: பும்ரா இனி இந்தியாவின் துணை கேப்டன் கிடையாது.. பிசிசிஐ அதிரடி!
சென்னை சூப்பர் கிங்ஸ்
ஐபிஎல் 2025 சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், ரசிகர்களுக்கும் ஒரு மறக்க வேண்டிய ஆண்டாகவே உள்ளது. மெகா ஏலத்திற்கு பிறகு அணியின் காம்பினேஷன் சரியாக அமையாமல் தொடர் தோல்விகளை சந்தித்து வருகின்றனர். இதுவரை ருதுராஜ் தலைமையில் ஒரு வெற்றியும், தோனியின் தலைமையில் ஒரு வெற்றியும் என மொத்தமே இந்த சீசனில் இரண்டு வெற்றிகளை மட்டுமே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பதிவு செய்துள்ளது. மேலும் தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல் இருப்பது இதுவே முதல் முறை. ராகுல் திருப்பாதி, விஜய் ஷங்கர், தீபக் ஹூடா ஆகியோர் சரியாக விளையாடாமல் போனது தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
தோனி ஓய்வு எப்போது?
2023 ஆம் ஆண்டு 5வது கோப்பையை வென்ற பிறகு தோனி ஓய்வை அறிவிப்பாளர் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் கடந்த இரண்டு சீசனங்களாக ரசிகர்களுக்காக மட்டுமே தோனி விளையாடி வருகிறார். கடைசி இரண்டு ஓவர்கள் இருக்கும் போது மட்டுமே பேட்டிங்கில் இறங்கும் தோனி, விக்கெட் கீப்பிங்கில் அதே திறமையுடன் இன்னும் இருக்கிறார். இந்நிலையில் இந்த சீசனின் பாதையில் தோனி ஓய்வை அறிவிக்க உள்ளார் என்று பரவலாக பேசப்பட்டது. இதற்கு காரணம் கடந்த 20 வருடங்களாக தோனி விளையாடுவதை மைதானத்திற்கு வந்து அவரது பெற்றோர்கள் பார்த்தது இல்லை. ஆனால் இந்த ஆண்டு சென்னையில் நடைபெற்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தோனியின் அப்பா, அம்மா மைதானத்திற்கு வந்திருந்தனர்.
எனவே இந்த போட்டியுடன் தோனி ஓய்வை அறிவிக்கின்றார் என்று அதிகம் பேசப்பட்டது. ஆனால் தோனி ஓய்வு பெறவில்லை, இதற்கு காரணம் ருதுராஜ் காயம் காரணமாக வெளியேறியது தான் என்று கூறப்படுகிறது. இதனால் தோனி மீண்டும் இந்த சீசனில் விளையாடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த சீசன் முடிந்தவுடன் தோனி நிச்சயமாக ஓய்வை அறிவிப்பார் என்று கூறப்படுகிறது. அதனால் தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சில அதிரடி மாற்றங்களும் ஏற்பட்டு வருகிறது. இளம் வீரர்களுக்கு அணியில் விளையாடுவதற்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது. சமீபத்தில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஊர்வில் படேலை உடனடியாக எடுத்ததற்கும் இதுதான் காரணம் என்று கூறப்படுகிறது. தோனி கடைசியாக அடுத்த ஆண்டு ஒரு சீசன் விளையாடுவார் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், இந்த தகவல் தோனியின் ரசிகர்களுக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கும் ஒரு பெரிய பெரிய இடியாக அமைந்துள்ளது.
மேலும் படிங்க: வன்ஷ் பேடி விலகல்… CSK-வில் இணைந்த இளம் சிங்கம்… யார் இந்த உர்வில் படேல்?