புதுடெல்லி: பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து நடத்தப்பட்ட ஆபரேஷன் சிந்தூர் குறித்து அமெரிக்கா, சவூதி அரேபியா, ரஷ்யா உள்ளிட்ட 5 நாடுகளுக்கு இந்தியா விளக்கம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். லஷ்கர் இ தொய்பா நடத்திய இந்த தாக்குதலின் பின்னணியை உறுதிப்படுத்திய இந்திய அரசு, பாகிஸ்தானில் இயங்கி வரும் இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத அமைப்புகளின் முகாம்களை குறிவைத்து தாக்க ராணுவத்துக்கு உத்தரவிட்டது.
இதையடுத்து, இந்திய ராணுவம் பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் 9 பயங்கரவாத முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி அழித்தது. ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரிலான இந்திய ராணுவத்தின் இந்த துல்லிய தாக்குதல்கள், 9 பயங்கரவாத முகாம்களை மட்டுமே குறிவைத்து நடத்தப்பட்டுள்ளன. பாகிஸ்தானின் ராணுவ நிலைகள், பொதுமக்கள் குறிவைக்கப்படவில்லை என இந்த தாக்குதல் குறித்து விவரித்த வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தார்.
இந்நிலையில், பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் ஆகிய இடங்களில் நடத்தப்பட்ட இந்த அதிகாலை தாக்குதல் குறித்து அமெரிக்கா, இங்கிலாந்து, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு இந்தியா விளக்கியதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
அடையாளம் காணப்பட்ட பயங்கரவாதிகளின் நம்பகமான தடயங்கள், நேரில் கண்ட சாட்சிகள் கூறியவை, பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாதக் குழுக்கள் குறித்த ஆதாரங்கள் ஆகியவை இந்தியாவிடம் இருப்பதாகவும், அதன் அடிப்படையிலேயே இலக்குகள் தீர்மாணிக்கப்பட்டன என்றும் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. விளக்கமளிக்கப்பட்ட ஐந்து நாடுகளின் தலைவர்களும் கடந்த இரண்டு வாரங்களாக பிரதமர் நரேந்திர மோடியுடன் தொடர்பில் உள்ளனர்.
ஆபரேஷன் சிந்தூர் குறித்து அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட அறிக்கையில், “இந்தியா தனது நடவடிக்கைகள் மீது உரிய கவனம் செலுத்தி அதன் அடிப்படையில் துல்லியமாக செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் அளவிடப்பட்டவை, பொறுப்பானவை, தீவிரமடையாத வகையில் வடிவமைக்கப்பட்டவை.
பாகிஸ்தானிய பொதுமக்கள், பொருளாதார அல்லது ராணுவ இலக்குகள் எதுவும் தாக்கப்படவில்லை. அறியப்பட்ட பயங்கரவாத முகாம்கள் மட்டுமே குறிவைக்கப்பட்டன. பயங்கரவாதிகள் மற்றும் அவர்களை ஆதரிக்கும் உள்கட்டமைப்புக்கு எதிராக பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. மாறாக, கடந்த பதினைந்து நாட்களில், பாகிஸ்தான் மறுப்பில் ஈடுபட்டது. அதோடு, இந்தியாவுக்கு எதிராக தவறான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது.” என்ற தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் நடவடிக்கைகள் குறித்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோவிடம் பேசியதாகவும் வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, இந்த தாக்குதல் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள மார்கோ ரூபியோ, “இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான நிலைமையை நான் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறேன். இரு தரப்பு தலைமையுடனும் நான் தொடர்பில் இருக்கிறேன். இது விரைவில் முடிவடையும் என்று எதிர்பார்க்கிறேன். அமைதியான தீர்வை நோக்கி இந்திய மற்றும் பாகிஸ்தான் தலைமைகள் ஈடுபடும் என்ற ட்ரம்ப்பின் கருத்துக்களை நான் எதிரொலிக்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.