ஆபரேஷன் சிந்தூர்: பாக். மீதான இந்திய ராணுவ நடவடிக்கைக்கு ட்ரம்ப் ரியாக்‌ஷன் என்ன?

வாஷிங்டன்: பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்புகளின் 9 முகாம்கள் மீது ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்தியா வான்வழி தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இந்தியா – பாகிஸ்தான் இடையிலான தற்போதைய சூழல் குறித்தும், ஆபரேஷன் சிந்தூர் குறித்தும் தனது கருத்தை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

“இது ஒரு அவமானம். ஓவல் அலுவலகத்தை அடையும்போது இந்த தகவலை அறிந்தோம். கடந்த காலத்தை வைத்து பார்க்கும்போது ஏதோ ஒன்று நடக்கப் போகிறது என்பதை மக்கள் அறிந்திருப்பார்கள் என நான் கருதுகிறேன். இந்தியா – பாகிஸ்தான் என இரு நாடுகளும் நீண்ட காலமாக மோதலில் ஈடுபட்டு வருகின்றன. இந்த மோதல் பல தசாப்தங்களாக நீடித்து வருகிறது. இது விரைவில் முடிவுக்கு வரும் என நினைக்கிறேன்” என ட்ரம்ப் கூறியுள்ளார்.

ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை அடுத்து பாகிஸ்தான் மீது இந்தியா வான்வழி தாக்குதல் மேற்கொண்ட உடன் அமெரிக்க தேசிய பாதுகாப்பு முகமையின் மார்கோ ரூபியோவை தொடர்பு கொண்டு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பேசியதை வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகம் உறுதி செய்துள்ளது.

ஆபரேஷன் சிந்தூர்: பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் வான்வழி தாக்குதலை தொடங்கியுள்ளது இந்திய ராணுவம். பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலில், “மொத்தம் 9 பயங்கரவாத முகாம்கள் குறிவைக்கப்பட்டுள்ளன. எங்கள் நடவடிக்கைகள் கவனமான முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எந்த பாகிஸ்தான் ராணுவ முகாம்களும் குறிவைக்கப்படவில்லை. இலக்குகளைத் தேர்ந்தெடுப்பதிலும் செயல்படுத்தும் முறையிலும் இந்தியா மிகுந்த நிதானத்தைக் காட்டியுள்ளது.

25 இந்தியர்களும், ஒரு நேபாள குடிமகனும் கொல்லப்பட்ட காட்டுமிராண்டித்தனமான பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்த பதிலடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பஹல்காம் தாக்குதலுக்குப் பொறுப்பானவர்கள் விளைவுகளை எதிர்கொள்வார்கள் என்ற நாங்கள் உறுதியளிக்கிறோம். ‘ஆபரேஷன் சிந்தூர்’ பற்றிய விரிவான விளக்கம் இன்று அளிக்கப்படும்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

கோட்லி, பஹ்வல்பூர் மற்றும் முசாபராபாத் ஆகிய இடங்களில் இந்தியா ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியதாக பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் ஜெனரல் அகமது ஷெரிப் சவுத்ரி தெரிவித்ததாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள முசாபராபாத் நகரைச் சுற்றியுள்ள மலைகளுக்கு அருகிலுள்ள பகுதியில் நள்ளிரவுக்குப் பிறகு பலத்த வெடிச்சத்தங்கள் கேட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகவும், பல்வேறு விமானங்கள் திருப்பிவிடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

கடந்த 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதன்காரணமாக, இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் மேகம் சூழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.