புதுடெல்லி: உத்தரபிரதேச அரசின் உள்துறை சிறப்பு செயலாளராக அண்ணாவி தினேஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசில் தமிழ்நாட்டை சேர்ந்த குடிமைப்பணி அதிகாரிகள் தொடர்ந்து முக்கியத்துவம் பெறுகின்றனர்.
கரூரின் சோமூர் ஊராட்சியை சேர்ந்த விவசாயி அன்னாவி. இவரது மூத்த மகனான அண்ணாவி தினேஷ் குமார், கடந்த 2012-ல் ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்று உ.பி. அதிகாரியானார். இவர், ஊராட்சி ஒன்றிய அரசு பள்ளியில் தமிழ்வழிக் கல்வி பயின்றவர். உ.பி. உயர் அதிகாரியான தினேஷ் குமார், தொழில்நுட்பக் கல்வித் துறையின் சிறப்பு செயலாளராகப் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், அண்ணாவி தினேஷ் குமார், உள்துறை அமைச்சகத்தின் சிறப்பு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுபோல், நீண்ட இடைவெளிக்கு பின் மாநில உள்துறையில் பணியாற்ற உள்ள தமிழர் என்ற பெருமை தினேஷ் குமாருக்கு கிடைத்துள்ளது. இதற்குமுன் சுமார் 50 வருடங்களுக்கு முன்பு காங்கிரஸ் ஆட்சியில் தமிழரான கல்யாண் கிருஷ்ணன், உள்துறை செயலாளராக இருந்தார்.
உ.பி.யின் மிக முக்கியமான உள்துறையின் செயலாளராக பிஹாரைச் சேர்ந்த சஞ்சய் பிரசாத் உள்ளார். முதன்மை செயலாளரான இவர், கூடுதல் பணியாக முதல்வர் யோகியின் செயலாளராகவும் இருக்கிறார். இவரது தலைமையின் கீழ் தமிழரான அண்ணாவி தினேஷ் குமார் பணியாற்றுவார்.
யோகி ஆதித்யநாத் கடந்த 2015 முதல் தொடர்ந்து முதல்வராக உள்ளார். இவர் ஆட்சிக்கு வந்தது முதல், தமிழகத்தைச் சேர்ந்த குடிமைப்பணி அதிகாரிகளுக்கு முக்கியப் பொறுப்புகளை வழங்கி வருகிறார். பிரதமர் நரேந்திர மோடியின் மக்களவை தொகுதியான வாராணசியின் ஆட்சியராக எஸ்.ராஜலிங்கம் இருந்தார்.
தென்காசி மாவட்டம் கடையநல்லூரைச் சேர்ந்த இவரது பதவி உயர்வுக்கு பிறகும் அதே வாராணசியில் மண்டல ஆணையராகத் தொடர்கிறார். இதுபோல் உ.பி.யிலுள்ள ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் (வனப்பணி) போன்ற குடிமைப்பணி அதிகாரிகளில் உள்ள சுமார் 30 தமிழர்களும் பல முக்கியப் பதவிகளை வகிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.