கலைமகள் சபாவுக்கு சொந்தமான சொத்துகளை மதிப்பிட 33 மாவட்ட ஆட்சியர்களுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: கலைமகள் சபாவுக்கு சொந்தமான சொத்துகள் தமிழகம் முழுவதும் எங்கெங்கு உள்ளன என்பது குறித்து ஆய்வு செய்து, அவற்றை அளவீடு செய்ய 33 மாவட்ட ஆட்சியர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கலைமகள் சபா என்ற நிதி நிறுவனம் தமிழகம் முழுவதும் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோரிடம் முதலீடுகளைப் பெற்று பல ஆயிரக்கணக்கான நிலங்களை வாங்கி ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டது. முதலீடு செய்தவர்களின் பெயர்களிலேயே நிலங்கள் வாங்கப்பட்டன. இந்நிலையில், இந்நிறுவனத்துக்கு எதிராக மோசடி புகார்கள் வரத் தொடங்கியதும் நிறுவனத்தை நடத்திய நிர்வாகிகள் மீது வழக்குகள் பதியப்பட்டன. இது தொடர்பான வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம் கலைமகள் சபாவுக்கு சொந்தமான சொத்துகளை நிர்வகிக்க நிர்வாகிகளை நியமித்து உத்தரவிட்டது.

இந்த வழக்குகள் மீதான விசாரணை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது. அப்போது பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் வி.ஆர்.கமலநாதன், பி.சின்னதுரை ஆகியோர், “கலைமகள் சபா பெயரில் உள்ள சொத்துகளை விற்பனை செய்து அதன் மூலம் கிடைக்கும் தொகையை முதலீட்டாளர்களுக்கு வழங்க வேண்டிய நிலையில், அந்த சொத்துகள் இதுவரையிலும் அடையாளம் காணப்படவில்லை,” என தெரிவித்தனர்.

அப்போது நேரில் ஆஜரான பதிவுத்துறை ஐஜி, “கலைமகள் சபாவுக்கு சொந்தமான சொத்துகள் தமிழகம் மட்டுமின்றி கர்நாடகம், கேரளா, டெல்லி போன்ற மாநிலங்களிலும் உள்ளன. தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கோவை, திருப்பூர் உள்ளிட்ட 33 மாவட்டங்களில் கலைமகள் சபாவுக்கான சொத்துகள் உள்ளன,” என்றார்.

இதையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதிகள், “கலைமகள் சபாவில் முதலீடு செய்துள்ள 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பணம் திரும்ப கிடைக்கும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கின்றனர். இந்த சபாவுக்கென 3 ஆயிரத்து 88 சொத்துகள் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால், அந்த சொத்துகள் இதுவரையிலும் முறையாக அடையாளம் காணப்பட்டு அளவீடும் செய்யப்படவில்லை. எனவே, இந்த சொத்துகளை 33 மாவட்ட ஆட்சியர்கள் அடையாளம் கண்டு அளவீடு செய்ய வேண்டும்.

இதற்காக 33 மாவட்ட ஆட்சியர்களையும் இந்த வழக்கில் எதிர்மனுதாரர்களாக சேர்க்கிறோம். மாவட்ட ஆட்சியர்கள் இந்தப்பணியை விரைவில் முடிக்க ஏதுவாக கலைமகள் சபாவுக்கு சொந்தமான சொத்து விவரப் பட்டியலை சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களிடம் பத்திரப் பதிவுத் துறை ஐஜி வழங்க வேண்டும். அந்த ஆவணங்களின் அடிப்படையில் ஆட்சியர்கள் ஆய்வு மேற்கொண்டு அளவீடு செய்ய வேண்டும். இதற்காக தனியாக ஒரு வட்டாட்சியரை ஆட்சியர்கள் நியமித்துக் கொள்ளலாம்,” என உத்தரவிட்டுள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.