லாகூர்,
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாதம் 22ம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர்.
இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்ட லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டண்ட் பிரண்ட் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த தாக்குதலை தொடர்ந்து இந்தியா , பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உருவாகியது.
இதனிடையே, பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இன்று பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் பயங்கரவாத முகாம்களை கூறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. ஆபரேஷன் சிந்தூர் என பெயரிடப்பட்ட இந்த தாக்குதலில் பாகிஸ்தானில் 3 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், இந்தியாவுக்கு பதிலடி கொடுக்கப்படும் என்று பாகிஸ்தான் மிரட்டல் விடுத்துள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தான் ராணுவத்தின் ஊடக பிரிவு தலைவர் அகமது ஷெரீப் சவுதிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், இது கோழைத்தனமான எதிரி இந்தியா வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது. பஹ்வல்பூர், கோட்லி, முசாபராபாத் ஆகிய 3 நகரங்கள் மீது வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதிலடி கொடுக்கும். பதிலடிக்கான நேரம், இடத்தை பாகிஸ்தான் முடிவு செய்யும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.