ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில், பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் நடத்திய துல்லிய தாக்குதலுக்கு பாராட்டு தெரிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்த், ‘ஒட்டுமொத்த தேசமும் மோடியுடன் நிற்கிறது’ என தனது வலைதளபக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆதரவு காஷ்மீர் பகுதிகளில் உள்ள பயங்கரவாத அமைப்புகளின் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் நேற்று அதிகாலை இந்திய ராணுவம் துல்லிய தாக்குதல் நடத்தியது.
இந்தியாவின் இந்த துணிச்சலான நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்து நடிகர் ரஜினிகாந்த் தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ‘போராளியின் போர் தொடங்கிவிட்டது. லட்சியம் நிறைவேறும் வரை ஆபரேஷன் சிந்தூரை நிறுத்த வேண்டாம். ஒட்டுமொத்த தேசமும் உங்களுடன் நிற்கிறது. ஜெய்ஹிந்த்’ என்று கூறியுள்ள ரஜினிகாந்த், அதில் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை டேக் செய்துள்ளார்.
பஹல்காமில் சிந்திய கண்ணீருக்கு பாகிஸ்தானில் 16-ம் நாள் ‘காரியம்’ – பஹல்காம் தாக்குதல் நடைபெற்று நேற்றுடன் 16 நாட்கள் முடிந்தன. அதை நினைவூட்டும் வகையில் சிந்தூர் தாக்குதல் மூலம் காரியம் செய்திருக்கிறது இந்திய ராணுவம். காஷ்மீரின் பஹல்காம் பைசரன் பள்ளத்தாக்கில் கடந்த மாதம் 22-ம் தேதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர்.
அதன்பிறகு ஒட்டுமொத்த தேசமும் தீவிரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குரல் கொடுத்தது. அனைத்து அரசியல் கட்சிகளும் அதற்கு ஆதரவளித்தன. இந்நிலையில், இந்திய ராணுவம் நேற்று ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 இடங்களில் தாக்குதல் நடத்தியது.
இதில் லஷ்கர், ஜெய்ஷ், ஹிஸ்புல் முஜாகிதின் ஆகிய 3 தீவிரவாத அமைப்புகளின் தலைமையிடங்களை இந்திய ஏவுகணைகள் தாக்கி அழித்தன. இந்து முறைப்படி ஒருவர் இறந்தால் 16-ம் நாள் காரியம் செய்வார்கள். அந்த சடங்குக்கு பிறகு இறந்தவரின் ஆத்மா சாந்தியடையும் என்பது நம்பிக்கை. அதன்படி பஹல்காம் தாக்குதல் நடந்த பிறகு நேற்றுதான் 16-ம் நாள். சரியான நாளை தேர்ந்தெடுத்துதான் மத்திய அரசு தாக்குதல் நடத்தி உள்ளது. தீவிரவாத முகாம்கள் மீது நடத்திய தாக்குதல், காரியம் செய்ததுபோல் இருந்தது மக்கள் என்பது கருத்தாக உள்ளது.