இஸ்லாமாபாத்: ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தின் மீது இந்தியா ட்ரோன் தாக்குதல் நடத்தியதை அடுத்து, பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகளை தொடரலாமா வேண்டாமா என்பது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அவசர ஆலோசனைக் கூட்டத்தை கூட்டி உள்ளது.
இந்தியாவின் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளைப் போல, பாகிஸ்தானில் பிஎஸ்எல் (பாகிஸ்தான் சூப்பர் லீக்) போட்டிகள் நடைபெற்று வருகின்றன. ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு பிஎஸ்எல் அணிகளான பெஷாவர் ஸல்மி மற்றும் கராச்சி கிங்ஸ் இடையே போட்டி நடைபெறவிருந்தது. இந்நிலையில், இந்த மைதானத்தின் மீது இந்தியா ட்ரோன்களைக் கொண்டு தாக்குதல் நடத்தியது. இந்தியாவின் 15 ராணுவ இலக்குகளை குறிவைத்து பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல்களை நடத்த முயன்றதை அடுத்து இந்த பதிலடியை இந்திய ராணுவம் கொடுத்தது.
இந்திய ராணுவத்தின் இந்த தாக்குதல் காரணமாக பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகளை தொடர்ந்து நடத்தலாமா வேண்டாமா என்பது குறித்து முடிவு செய்ய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அவசர ஆலோசனைக் கூட்டத்தை கூட்டி உள்ளது. பாகிஸ்தான் சூப்பர் லீக்-ல் 6 அணிகள் உள்ளன. இவற்றில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். பாகிஸ்தான் சூப்பர் லீக்-ன் இறுதிப் போட்டி வரும் 18-ம் தேதி லாகூரில் நடைபெறும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
இதனிடையே, “போட்டிகளை தொடர்வது குறித்து அரசாங்கத்தின் ஆலோசனை பின்பற்றப்படும். புதன்கிழமை முதல் பஞ்சாப் மாகாணத்தில் இந்தியா நடத்திய ட்ரோன் தாக்குதல்களின் எண்ணிக்கை காரணமாக இந்த கூட்டம் நிலைமையை மதிப்பாய்வு செய்யும்” என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கருதுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.