டமாஸ்கஸ்,
சிரியாவில் அல் அசாத் தலைமையிலான அரசு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கவிழ்ந்தது. அதிபராக இருந்த அல் அசாத் ரஷியாவுக்கு தப்பிச்சென்றார். இதையடுத்து, சிரியாவில் ஆட்சியை கைப்பற்றிய ஹயத் தஹிர் அல் ஷியாம் அதிபராக பதவியேற்றார்.
அதேவேளை, முன்னாள் அதிபர் அல் அசாத் ஆதரவாளர்கள் குழுக்களாக சேர்ந்து சிரியா அரசுக்கு எதிராக கிளர்ச்சி நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், சிரியா அரசுப்படைகள் மீதும் இந்த கிளர்ச்சிக்குழுக்கள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனிடையே, கடந்த சில நாட்களாக சிரியாவில் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அந்நாட்டின் டமாஸ்கசில் சன்னி பிரிவினருக்கும், டுரூஸ் மதத்தை சேர்ந்தவர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. இந்த மோதலில் 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். டுரூஸ் மதத்தினர் இஸ்ரேலிலும் வசித்து வரும் நிலையில் அவர்களுக்கு ஆதரவாக சிரியா மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், இஸ்ரேல், சிரியா இடையே பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
இந்நிலையில் பதற்றத்தை தணிக்கும் வகையில் இஸ்ரேலுடன் சிரியா பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. இரு நாடுகளும் மறைமுக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன. 3ம் நாட்டின் மத்தியஸ்தம் மூலம் இஸ்ரேலுடன் மறைமுக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக சிரியா அதிபர் ஹயத் தஹிர் அல் ஷியாம் தெரிவித்துள்ளார். சிரியாவில் இஸ்ரேல் நடத்தும் தாக்குதலை முடிவுக்கு கொண்டுவர இந்த பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.