சேலம்: “சட்டப்பேரவையில் நான் பேசுவதை முழுமையாக ஒளிபரப்பினால் திமுக ஆட்சி உடனடியாக அதல பாதாளத்துக்கு போய்விடும்.” என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
சேலம் ஓமலூர் அதிமுக கட்சி அலுவலகத்தில், இன்று (மே 8) செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது: “அதிமுக ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்காக தொடர்ந்து உழைத்து வரும் கட்சி. திமுக ஆட்சிக்கு வந்தது முதல் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. நாள்தோறும் கொலை, கொள்ளை, பாலியியல் வன்கொடுமை நிகழ்வுகள் நடந்த வண்ணம் உள்ளன.
அண்மையில் 2 இடங்களில் புகார் கொடுக்க வந்த பெண்களிடம் காவல்துறையைச் சேர்ந்தவர்களே அத்துமீறி நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திமுக ஆட்சியில் பொதுமக்கள், பெண்கள் என யாருக்கும் பாதுகாப்பு இல்லாத நிலையே உள்ளது. நாட்டில் நிலவும் பிரச்சினைகளை ஊடகங்கள் முழுமையாக வெளியிட வேண்டும். இவ்வளவு பிரச்சினைகளை கண்டு கொள்ளாமல் எதிர்க்கட்சிகள் மீது வீணாக பழி சொல்கின்றனர்.
டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தபோது தமிழகத்தின் நலனுக்காக பல்வேறு கோரிக்கைகளை மனுவாக கொடுத்தோம். அந்த கோரிக்கைகள் அனைத்தும் ஒன்றன்பின் ஒன்றாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன. 100 நாள் வேலைத் திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடு, மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடு, சாதிவாரி கணக்கெடுப்பு அறிவிப்பு என எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றிய உள்துறை அமைச்சருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
அதிமுக ஆட்சியில் அனைத்து துறைகளும் சிறப்பாக செயல்பட்டன. ஆனால், முதல்வர் ஸ்டாலின் மாடல் ஆட்சியில் மக்களின் பிரச்சினைகள் ஆட்சியாளர்களின் காதில் விழுவது இல்லை. கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவர்களை சேர்ப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்யாதது கண்டிக்கத்தக்கது. மக்களின் பிரச்சினையில் கவனம் இன்றி இருப்பதை வன்மையாக கண்டிக்கிறோம். அரசு விழித்துக் கொண்டு மக்கள் பிரச்சினையில் கவனம் செலுத்த வேண்டும்.
சட்டமன்றத் தேர்தலுக்காக பாஜக-வுடன் கூட்டணி வைத்துள்ளோம். தேர்தலுக்கு இன்னும் 9 மாத காலம் இருக்கிறது. அதற்குள்ளாக இன்னும் பல கட்சிகள் எங்களது கூட்டணியில் இணையும். ஆட்சிக்கு வருவதற்கு முன்பு 3.5 லட்சம் அரசுப் பணியிடங்கள், 2 லட்சம் அரசு சார்பு பணியிடங்களை நிரப்புவதாக கூறிய திமுக, ஆட்சிக்கு வந்த 4 ஆண்டுகளில் சுமார் 78 ஆயிரம் பணியிடங்களை மட்டுமே நிரப்பியுள்ளது.
மேலும் எதிர்க்கட்சியாக இருக்கும்போது அவுட் சோர்சிங் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்துவிட்டு தற்போது அவுட் சோர்சிங் முறையில் பணியிடங்களை நிரப்புகிறார்கள். கடந்த 4 ஆண்டுகளில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணி ஓய்வு பெற்ற நிலையில் காலிப் பணியிடங்கள் மேலும் அதிகரித்து விட்டது. பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் கடை பணியாளர்கள் பணியிடங்களை அரசு உடனடியாக நிரப்ப வேண்டும்.
எனது, சட்டப்பேரவை பேச்சை முழுமையாக ஒளிபரப்பினால் திமுக ஆட்சி உடனடியாக அதல பாதாளத்துக்கு போய்விடும். முதல்வர் ஸ்டாலின் செய்தியாளர்களை சந்திப்பதே இல்லை. செய்தியாளர் சந்திப்பு நிகழ்ந்தாலும், கேள்விகள் முன்கூட்டியே அளிக்கப்பட்டு, அந்த கேள்விகளை கேட்க மட்டுமே செய்தியாளர்கள் நிர்ப்பந்திக்கப்படுகிறார். மக்கள் பிரச்சினைகளை செய்தியாளர்கள் கேட்டுவிட்டால் பதிலளிக்க முடியாமல் போய்விடும் என்பதால் முதல்வர் பத்திரிகையாளர்களை தவிர்க்கிறார்.
பஹல்காமில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதல் இந்திய மக்கள் அனைவரையும் கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கி விட்டது. அதற்கு பதிலடியாக தீவிரவாத முகாம்களை கண்டறிந்த இந்திய ராணுவமும் முப்படைகளும் நடத்திய தாக்குதல் பாராட்டுக்குரியது. பயங்கரவாதத்தை முறியடிக்கும் விதமாக ராணுவம் எடுத்துள்ள முதல் கட்ட பணிக்கு அதிமுக சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று அவர் கூறினார்.