ராஜபாளையம்: “தமிழக மக்களை பாதுகாக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஜூன் 11 முதல் 20-ம் தேதி வரை 10 நாட்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட உள்ளது” என்று அக்கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.
ராஜபாளையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு கூட்டம் இரண்டு நாட்கள் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின் மாநில செயலாளர் சண்முகம் செய்தியாளர்களிடம் கூறியது: “மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில குழு கூட்டத்தில் தற்போதைய அரசியல் சூழல், மக்கள் பிரச்சினை குறித்து விவாதிக்கப்பட்டது. மத்திய அரசின் தொழிலாளர் விரோத சட்டங்களை கண்டித்து மே 20-ம் தேதி நடைபெறும் வேலைநிறுத்தத்தில் ரயில் மறியல் மற்றும் மத்திய அரசு அலுவலகம் முன் போராட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்திய அரசின் தாராளமய கொள்கை மூலம் விலைவாசி உயர்ந்துள்ளது.
அமெரிக்க வரி விதிப்பால் இந்திய உற்பத்தி துறை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 25 பொருட்களுக்கு இந்திய அரசு வரியை குறைத்துள்ளது கண்டிக்கத்தக்கது. இந்திய பொருட்களுக்கான வரியை குறைக்க அமெரிக்காவை வலியுறுத்த வேண்டும். நெய்வேலி என்எல்சி ஊழியர்களுக்கு இணையாக தூத்துக்குடி தெர்மல் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அதற்கு எதிராக தெர்மல் நிர்வாகம் மேல் முறையீடு செய்துள்ளதை கண்டித்து 22 நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பஞ்சமி நில மீட்பு, நீர்நிலை புறம்போக்கில் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்குதல், வேலைவாய்ப்பின்மை, அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், தனியார் துறையில் இட ஒதுக்கீடு, தாது மணல், மணல் உள்ளிட்ட கனிம வளக் கொள்ளையை தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தமிழக மக்களை பாதுகாக்க வலியுறுத்தி ஜூன் 11 முதல் 20-ம் தேதி வரை 10 நாட்கள் தமிழகம் முழுவதும் 250-க்கும் அதிகமான குழுக்கள் மூலம் நடைபயணம் மற்றும் வாகன பேரணி என தொடர் போராட்டங்கள் நடத்தப்பட உள்ளது.
பொது இடங்களில் உள்ள கொடிக்கம்பங்களை அகற்றும் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மார்க்சிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் மேல்முறையீடு செய்துள்ள நிலையில், வருவாய்த்துறை நடவடிக்கையை நிறுத்தி வைக்க அரசு உத்தரவிட வேண்டும். பகல்ஹாம் தாக்குதலுக்கு காரணமான தீவிரவாதிகள் மீதான மத்திய அரசின் துல்லிய தாக்குதலை வரவேற்கிறோம். அதேநேரம் போர் வந்தால் இரு நாட்டு பொதுமக்களும் பாதிக்கப்படுவர்,” என்று அவர் கூறினார். இந்த சந்திப்பின்போது, மாநில செயற்குழு உறுப்பினர் அர்ச்சுனன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் மாரியப்பன் ஆகியோர் உடன் இருந்தனர்.