புதிய போப் தேர்வாகவில்லை.. முதல் வாக்குப்பதிவுக்குப் பிறகு வெளியேறிய கரும்புகை

வாடிகன் சிட்டி,

உலகம் முழுவதும் உள்ள 140 கத்தோலிக்கர்களின் தலைவராக இருந்த போப் பிரான்சிஸ் கடந்த மாதம் 21-ந் தேதி உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். அவரது உடல் 26-ந் தேதி ரோமில் அடக்கம் செய்யப்பட்டது. பின்னர் 9 நாட்கள் வாடிகனில் துக்கம் அனுசரிக்கப்பட்டது.

இந்த நடைமுறைகளுக்குப்பின் புதிய போப் ஆண்டவரை தேர்வு செய்வதற்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டன. இதற்காக உலகமெங்கிலும் இருந்து வாடிகனில் குவிந்திருந்த கார்டினல் எனப்படும் கர்தினால்கள் அடுத்தடுத்து சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

மேலும் புதிய போப் ஆண்டவரை தேர்வு செய்வதற்கான கார்டினல் கான்கிளேவ் (கர்தினால் மாநாடு) நடைபெறும் சிஸ்டைன் சிற்றாலயத்தில் முன்னேற்பாடு பணிகளும் நடந்தன. இதன் தொடர்ச்சியாக நேற்று சிஸ்டைன் சிற்றாலயத்தில் கார்டினல் கான்கிளேவ் தொடங்கியது. இதில் 80 வயதுக்கு உட்பட்ட 133 கார்டினல்கள் கூடினர். அவர்கள் தங்களுக்கு உள்ளேயிருந்து ஒருவரை அடுத்த போப் ஆண்டவராக தேர்வு செய்கிறார்கள்.

புதிய போப் ஆண்டவர் தேர்வு செய்யப்படும் வரை அவர்கள் அங்கேயே தனிமைப்படுத்தப்படுகிறார்கள். இதற்காக அவர்களது செல்போன்கள் ஒப்படைக்கப்பட்டும், அவர்களை எந்தவிதத்திலும் தொடர்பு கொள்ளாமல் இருப்பதற்காக ஜாமர் கருவிகள் கொண்டு சிற்றாலயத்தை சுற்றி தொலைத்தொடர்பும் துண்டிக்கப்பட்டு உள்ளன.

முன்னதாக வாடிகன் புனித பீட்டர் பேராலயத்தில் கார்டினல் காலேஜ் டீன் ஜியோவான்னி பாட்டிஸ்டா ரே தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது. இதில் மேற்படி கார்டினல்கள் பங்கேற்று புதிய போப் ஆண்டவரை தேர்வு செய்வதற்கான ஞானம், புரிந்துணர்வு கேட்டு பிரார்த்தனை செய்தனர்.

பின்னர் வாக்கெடுப்பில் ரகசியம் காப்பது தொடர்பாக பீடத்தின் முன்பு நின்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். பின்னர் அவர்களுக்கு மூத்த கார்டினல் ஒருவர் தியானம் வழங்கினார். அதைத்தொடர்ந்து சிற்றாலயத்தில் புதிய போப் ஆண்டவரை தேர்வு செய்யும் பணிகள் தொடங்கியது. அதில் 3-ல் 2 பங்கு ஆதரவு அதாவது 89 வாக்குகள் பெறும் கார்டினல் புதிய போப் ஆண்டவராக தேர்வு செய்யப்படுவார்.

அதேநேரம் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றால், அந்த வாக்குச்சீட்டுகள் மற்றும் கார்டினல்கள் எழுதி வைத்திருக்கும் பேப்பர்கள் அனைத்தும் எரிக்கப்பட்டு ஆலய சிம்னி வழியாக கரும்புகை வெளியேற்றப்படும். இதன் மூலம் புதிய போப் ஆண்டவர் இதுவரை தேர்வு செய்யப்படவில்லை என வெளியுலகம் அறிந்து கொள்ளும்.

பின்னர் பெரும்பான்மை கிடைக்கும் வரை வாக்கெடுப்பு நடக்கும். இறுதியில் புதிய போப் தேர்வானால் வெண்புகை மூலம் வெளியுலகுக்கு தெரிவிக்கப்படும்.

இந்நிலையில் நேற்று போப்பின் அதிகாரப்பூர்வ இல்லமான அப்போஸ்தலிக் அரண்மனையில் உள்ள சிஸ்டைன் சேப்பலில், 80 வயதுக்குட்பட்ட அனைத்து கார்டினல்களும் ரகசிய வாக்கெடுப்பில் பங்கேற்றனர். நேற்று நடந்த கூட்டத்தில், புதிய போப் தேர்வு செய்யப்படவில்லை. அதை குறிக்கும் வகையில் இரவு 9.05 மணிக்கு புகைபோக்கியில் இருந்து கரும்புகை வெளியேற்றப்பட்டது.

ஓய்வு எடுக்கச் சென்ற கார்டினல்கள், இன்று 2வது முறையாக கூடி புதிய போப்பை தேர்வு செய்யும் பணியில் ஈடுபடுவர். இந்த பணி புதிய போப் தேர்வு செய்யப்படும் வரை தொடரும். போப் ஆண்டவரை தேர்வு செய்யும் பணிகள் தொடங்கியிருக்கும் நிலையில், ஓரிரு தினங்களில் புதிய போப் ஆண்டவர் தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்காக கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த உலகமும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறது.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.