ரூ.60 ஆயிரம் கோடியில் தொழிற்கல்வி மேம்பாட்டு திட்டம் – மத்திய மந்திரி சபை ஒப்புதல்

புதுடெல்லி,

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று மத்திய மந்திரி சபை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் தேசிய தொழிற்கல்வி மேம்பாட்டுக்காக பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன.

குறிப்பிடத்தக்க அம்சமாக 1,000 அரசு தொழிற்பயிற்சி மையங்கள் (ஐ.டி.ஐ.) மேம்படுத்தப்படுகின்றன. அவற்றில் தொழில் ரீதியாக புதுப்பிக்கப்பட்ட வர்த்தகப் படிப்புகள் சேர்க்கப்படுவதுடன், தேசிய திறன்மேம்பாட்டு பயிற்சி மையங்கள் வழிகாட்டலில் பயிற்சிகள் வழங்கப்படும். சென்னை உள்ளிட்ட 5 தேசிய திறன் மேம்பாட்டு பயிற்சி மையங்களை (என்.எஸ்.டி.ஐ.) மேம்படுத்தப்படுகின்றன.

இந்த திட்டங்கள் 2024-25 மற்றும் 2025-26 பட்ஜெட்டுகளில் அறிவிக்கப்பட்டபடி, ரூ.60 ஆயிரம் கோடி செலவில் மத்திய அரசின் பங்களிப்புடன் செயல்படுத்தப்படும்.

இதில் மத்திய அரசின் பங்களிப்பு ரூ.30 ஆயிரம் கோடியாகும். இந்த பங்களிப்பில் 50 சதவீதத்தை ஆசிய வளர்ச்சி வங்கி மற்றும் உலக வங்கிகள் பகிர்ந்தளிக்க உள்ளன. மீதி ரூ.30 ஆயிரம் கோடியானது மாநில அரசு பங்களிப்பு ரூ.20 ஆயிரம் கோடி மற்றும் தொழிற்துறை பங்களிப்பு ரூ.10 ஆயிரம் கோடியுடன் செயல்படுத்தப்பட உள்ளது.

இந்த திட்டமானது தற்போதுள்ள ஐ.டி.ஐ.களை அரசுக்கு சொந்தமான தொழில்துறையால் நிர்வகிக்கப்படும் திறன் மேம்பாட்டு மையங்களாக நிலைநிறுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது. மேலும் 5 வருட காலத்தில், தொழில்துறையில் மனித மூலதனத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் 20 லட்சம் இளைஞர்களை திறன் பயிற்சி பெறச் செய்வதை இலக்காக கொண்டுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் சென்னை, புவனேசுவரம், ஐதராபாத், கான்பூர் மற்றும் லூதியானா ஆகிய 5 என்.எஸ்.டி.ஐ.களில் பயிற்சியாளர்களின் மேம்பட்ட பயிற்சி வசதிகளுக்கான உள்கட்டமைப்பு மேம்படுத்தல் மேற்கொள்ளப்படும். கூடுதலாக, 50 ஆயிரம் பேருக்கு பயிற்சி வழங்கப்படும்.

ஐ.டி.ஐ.கள் மூலம் தொழிற்கல்வி பயிற்சி பெறுவது இளைஞர்கள் மத்தியில் ஆர்வம் குறைந்து உள்ளது. மேலும், உள்கட்டமைப்பை மேம்படுத்தவும், கவர்ச்சிகரமாகவும் செயல்பட முறையான தலையீடுகள் இல்லாததால் பாதிக்கப்பட்டு உள்ளது. இதை சீர் செய்து 2047-ம் ஆண்டுக்குள் இந்தியா ஒரு வளர்ந்த தேசத்தை நோக்கிய அதன் லட்சியப் பயணத்தைத் தொடங்கும் நோக்கில், தொழிற்கல்வி மற்றும் பயிற்சி பொருளாதார வளர்ச்சி மற்றும் உற்பத்தித்திறனுக்கு மகத்தான உந்துசக்தியாக இருக்கும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுவதாக மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

அனல்மின் நிலையங்களுக்கு புதிய நிலக்கரி இணைப்புகள் பெறவும் மத்திய மந்திரி சபை ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி உள்நாட்டு மின் உற்பத்தியாளர்கள், (தேவைப்பட்டால்) 12 மாதங்கள் வரை அல்லது 12 மாதங்களுக்கும் மேலான காலத்துக்கு 25 ஆண்டுகள் வரை ஏல அடிப்படையில் நிலக்கரியைப் பெற வழிவகை செய்யப்பட்டு உள்ளது.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.