தேனி: இந்திய எல்லையில் போர்ச் சூழல் அதிகரித்துள்ள நிலையில், சபரிமலையில் ஐயப்பனை தரிசிக்க வருவதாக இருந்த குடியரசுத் தலைவர் நிகழ்ச்சி தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மாதாந்திர பூஜைக்காக வரும் 14-ம் தேதி மாலையில் நடை திறக்கப்பட உள்ளது. தொடர்ந்து 19-ம் தேதி வரை பல்வேறு சிறப்பு பூஜைகளுடன் வழிபாடு நடைபெறும். இந்நிலையில் 19-ம் தேதி குடியரசுத் தலைவர் திரவுபதிமுர்மு சபரிமலைக்கு வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதற்காக 18,19-ம் தேதிகளில் பக்தர்களுக்கான அனுமதி ரத்து செய்யப்பட்டது.
மேலும் நிலக்கல் முதல் சபரிமலை வரை ராணுவ கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டு பலத்த பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டன. இந்நிலையில் தற்போது பாகிஸ்தான் மீதான போர் நடவடிக்கைகள் தீவிரம் அடைந்துள்ளன. பாகிஸ்தான் உடனான மோதல் காரணமாக இந்திய எல்லையில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. இதனால் குடியரசுத் தலைவரின் வருகை தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தேவசம் போர்டு தலைவர் பி.எஸ்.பிரசாந்த் கூறுகையில், “குடியரசுத் தலைவர் வருகை ரத்து செய்யப்படவில்லை. எல்லையில் போர்ச் சூழலால் பதற்றம் அதிகரித்துள்ளதால் அவரின் வருகை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. எனவே 18,19-ம் தேதிகளில் கோயிலுக்கு வரும் பக்தர்கள் முன்பதிவு செய்யலாம்,” என்றார்.