சென்னை: பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:
முதல்வர் மு.க.ஸ்டாலின்: பள்ளிக்கல்வி நிறைந்து உயர்கல்விக்குள் அடியெடுத்து வைக்கும் மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். நமது பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சொன்னதுபோல கல்லூரிக் கனவு – உயர்வுக்குப் படி – சிகரம் தொடு – நான் முதல்வன் என நமது அரசின் திட்டங்கள், மாணவர்களின் ஒவ்வொரு அடியிலும் உடனிருந்து வழிகாட்டும், உதவும்.
பெற்றோர்கள் பிள்ளைகள் மீது எந்த அழுத்தத்தை ஏற்படுத்தாமல், அவர்கள் விரும்பிய துறைகளைத் தேர்ந்தெடுக்க ஊக்குவிக்க வேண்டும். தேர்ச்சி பெற இயலாத மாணவர்களும் துவண்டுவிடக் கூடாது. அவர்களும் உயர்கல்வி பெற்று வாழ்வில் வெற்றி பெற்றே தீருவார்கள். அதற்கான வாய்ப்புகளை நமது அரசு உறுதிசெய்யும்.
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: உயர்கல்விக்கான விருப்பமிக்க மற்றும் சரியான திசையைத் தேர்ந்தெடுத்து, வாழ்வின் அனைத்து படிகளிலும் சிறக்க வேண்டும் என மாணவர்களை வாழ்த்துகிறேன்.
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்: மாணவர்கள் அனைவரும் உயர்கல்வி கற்று வாழ்வில் மேன்மேலும் உயர்ந்து சாதனை படைக்க என் மனமார்ந்த வாழ்த்துகள்.
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை: தேர்ச்சி பெற்று உயர்கல்வியில் அடியெடுத்து வைக்கப் போகும் அனைத்து மாணவச் செல்வங்களுக்கும் வாழ்த்துகள்.
இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்: தேர்வான மாணவர்கள் அவரவர் துறையில் முன்னேறி முத்திரை பதிக்க வேண்டும் என வாழ்த்துகிறேன்.
பாமக நிறுவனர் ராமதாஸ்: வெற்றி பெற்ற மாணவர்களுக்கு எனது வாழ்த்துகளும், பாராட்டுக்களும்.
பாமக தலைவர் அன்புமணி: மாணவர்கள் நல்ல ஆலோசனை பெற்று சிறந்த உயர் கல்வி பயிலும்படி அறிவுறுத்துகிறேன்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: மாணவர்கள் உயர்படிப்பில் சேர்ந்து கல்வியில் முன்னேற, அறிவுக்கூர்மை பெற, வாழ்வில் சிறக்க வாழ்த்துகள்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: தேர்வான மாணவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்
மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா: தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு இதயப்பூர்வமான நல்வாழ்த்துகள்.
ஐஜேகே தலைவர் ரவி பச்சமுத்து: மாணவர்களுக்கான எதிர்கால புதிய பாதை, புதிய பயணங்கள் நிச்சயம் உருவாகும்.
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா: சிறந்த கல்வியை தேர்ந்தெடுத்து கல்லூரி வாழ்க்கையையும் எதிர்காலத்தையும் சிறப்பாக அமைத்துக் கொள்ள வாழ்த்துகிறோம்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்: பொதுத்தேர்வு தேர்ச்சி மட்டுமே வாழ்வின் எல்லாவற்றையும் முடிவு செய்யாது என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
முதல்வர் உதவி: கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த கீர்த்திவர்மா என்ற மாற்றுத்திறனாளி மாணவர், பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற நிலையில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு முதல்வர் உதவ வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார். இதற்கு பதிலளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கத்தில், “கண்ணீர் வேண்டாம் தம்பி. சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியனிடம் உங்களுக்கான மருத்துவச் சிகிச்சைகளுக்கான ஏற்பாடுகளைக் கவனிக்கச் சொல்லியிருக்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.
இதேபோல், பொதுத்தேர்வில் 600-க்கு 599 மதிப்பெண்கள் பெற்றுள்ள மாணவி ஓவியாஞ்சலியிடம் திருச்சியில் இருந்து தொலைபேசி வாயிலாக முதல்வர மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது, “பொருளாதார துறையில் சாதனை படைக்க வேண்டும். அதுசார்ந்த உயர் படிப்பில் சேர வேண்டும்” எனும் விருப்பத்தைத் தெரிவித்த மாணவிக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டு, லட்சியம் நிறைவேற துணை நிற்போம் என முதல்வர் உறுதியளித்துள்ளார்.