புதுடெல்லி: இந்திய ராணுவ நடவடிக்கைக்காக பிரதமர் நரேந்திர மோடியை பாஜக முன்னாள் எம்.பி வருண்காந்தி பாராட்டியுள்ளார். “மனிதநேயத்தையும் நீதியையும் பாதுகாப்பதில் இந்தியா ஒருபோதும் பின்வாங்காது என்பதை உலகுக்கு உறுதியுடன் காட்டிய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் நாட்டின் வலிமையான தலைமை குறித்து நாங்கள் பெருமைப்படுகிறோம்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “இந்த சவாலான தருணங்களில், நமது ராணுவத்துடன் ஒரு பாறை போல நிற்பது நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் கடமை. இது வெறும் போர் மட்டுமல்ல, இரண்டு சித்தாந்தங்களின் மோதல். இதற்கு முழு உலகமும் சாட்சியாக உள்ளது. மனிதநேயம், அமைதி மற்றும் ஜனநாயகத்தின் பாதுகாவலரான இந்தியா ஒரு பக்கம் உள்ளது. மறுபுறம் வெறித்தனம், உறுதியற்ற தன்மை மற்றும் பயங்கரவாதத்தின் அடையாளமாக மாறிய பாகிஸ்தான்.
நிலையான மற்றும் வலுவான தலைமையுடன் பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியா ஒரு தீர்க்கமான போரில் போராடுகிறது. அதே வேளையில், பாகிஸ்தான் அரசியல் ரீதியாக நிலையற்றது மற்றும் பயங்கரவாதிகளின் கைப்பாவையாகவே உள்ளது. நமது ராணுவம் தேசபக்தி, ஒழுக்கம் மற்றும் சேவையால் ஈர்க்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் ராணுவம் வெறுப்பு, குழப்பம் மற்றும் வஞ்சகத்தால் ஈர்க்கப்பட்டுள்ளது. அப்பாவி மற்றும் பாதிப்பில்லாத பொதுமக்களைக் கூட கொல்வதில் அவர்களுக்கு எந்தத் தயக்கமும் இல்லை.
இன்று நாடு முழுவதும் துணிச்சலான வீரர்களின் தியாகத்தையும் வீரத்தையும் ஒற்றுமையுடன் வணங்குகிறது. மனிதநேயத்தையும் நீதியையும் பாதுகாப்பதில் இந்தியா ஒருபோதும் பின்வாங்காது என்பதை உலகுக்கு உறுதியுடன் காட்டிய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் நாட்டின் வலிமையான தலைமை குறித்து நாங்கள் பெருமைப்படுகிறோம். ‘புதிய இந்தியா’ முடிவுகளை எடுக்க பயப்படுவதில்லை என்பதை உலகம் இப்போது அறிந்திருக்கிறது, புரிந்துகொள்கிறது. அது ஒவ்வொரு குடிமகனின் பாதுகாப்பையும் மிக உயர்ந்ததாக கருதுகிறது, ஜெய் ஹிந்த் கி சேனா,” என்று அவர் பதிவிட்டுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் சுல்தான்பூர் மற்றும் பிலிபித்தின் முன்னாள் பாஜக எம்.பி வருண்காந்தி. இவருக்கு மக்களவை தேர்தலில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால், அரசியலிலிருந்து முற்றிலும் விலகி இருந்தார். 2017 உ.பி சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பு பாஜகவின் முதல்வர் வேட்பாளராக பேசப்பட்டவர் வருண் காந்தி. இவரது தாயான மேனகா காந்தி முன்னாள் மத்திய அமைச்சராகவும், பாஜகவின் மூத்த தலைவராகவும் உள்ளார்.
கடைசியாக நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தாய், மகன் இருவருக்குமே மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இதற்கு வருண்காந்தி தனது சொந்தக் கட்சியின் ஆட்சியையே தொடர்ந்து விமர்சித்து வந்தது காரணமாக கூறப்பட்டது. இதனால், வருண் தனது சகோதரரான ராகுல் காந்தியுடன் காங்கிரஸில் இணைகிறார் என்றும் சர்ச்சைகள் கிளம்பின. ஆனால், வருணின் கொள்கைகள் வேறு எனக்கூறி ராகுல் காந்தி இதற்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தார். வருண் காந்தி கடைசியாக 2024 மார்ச் 28 அன்று தனது நாடாளுமன்றத் தொகுதியான பிலிபித் மக்கள் முன் உரையாற்றினார். சுமார் 400 நாட்களுக்குப் பிறகு தனது எக்ஸ் தளத்தில், பிரதமர் மோடியைப் பாராட்டி அவர் பதிவிட்டுள்ளார்.