“வீதிக்கு வராமல் வீட்டிலேயே இருங்கள்” – காஷ்மீர் மக்களுக்கு உமர் அப்துல்லா வேண்டுகோள்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரை சுற்றியுள்ள மக்கள் வீதிகளில் இறங்குவதை தவிர்த்து வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்குமாறு அம்மாநில முதல்வர் உமர் அப்துல்லா வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “இப்போது ஜம்மு இருளில் மூழ்கியுள்ளது. நகர் முழுக்க சைரன் ஒலிகளை கேட்கமுடிகிறது. குண்டுவெடிப்பு மற்றும் கனரக பீரங்கித் தாக்குதல்களின் சத்தங்கள் விட்டுவிட்டு கேட்கின்றன. ஜம்மு மற்றும் அதைச் சுற்றியுள்ள அனைவருக்கும் எனது தாழ்மையான வேண்டுகோள் என்னவென்றால், தயவுசெய்து தெருக்களில் இறங்குவதைத் தவிர்த்து, வீட்டிலேயே இருங்கள்.

அடுத்த சில மணிநேரங்களுக்கு நீங்கள் வசதியாக தங்கக்கூடிய அருகிலுள்ள இடத்தில் இருங்கள். வதந்திகளைப் புறக்கணிக்கவும். ஆதாரமற்ற அல்லது சரிபார்க்கப்படாத கதைகளைப் பரப்பாதீர்கள். இதை நாம் ஒன்றாகக் கடந்து செல்வோம்” இவ்வாறு உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

— Omar Abdullah (@OmarAbdullah) May 9, 2025

கடந்த ஏப்ரல் 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் 26 பேர் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டனர். கொடூரமான இந்தத் தாக்குதலுக்கு பதிலடியாக புதன்கிழமை நள்ளிரவில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தானின் 9 பயங்கரவாத முகாம்களை அழித்தது இந்திய ராணுவம். அதன் தொடர்ச்சியாக, இந்திய எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டருகே உள்ள எல்லை கிராமங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தியாவின் 15 நகரங்களை குறிவைத்து பாகிஸ்தான் மேற்கொண்ட வான்வழித் தாக்குதல் முயற்சிகளை இந்தியா முறியடித்தது. அதன் தொடர்ச்சியாக இரவிலும் பாகிஸ்தானின் ஏவுகணைகளையும், ட்ரோன்களையும் வெற்றிகரமாக வீழ்த்தியது இந்திய பாதுகாப்புப் படை.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.