Retro நாயகிகள் 03 : `கணவர்கிட்ட இருந்து தப்பிக்க வீட்டை சுத்தி ஓடியிருக்கேன்' – நடிகை ரதி பர்சன்ல்ஸ்

மிழ் சினிமா எத்தனையோ பேரழகிகளை, நடிப்பில் உச்சம்தொட்ட திறமையான நடிகைகளைப் பார்த்திருக்கு. அதுல 70-கள்ல அழகிலும் நடிப்பிலும் ஜொலித்த நாயகிகள் எப்படி சினிமாத்துறைக்கு வந்தாங்க; என்னென்ன சாதிச்சாங்க; அவங்களோட பர்சனல் லைஃப்னு பல விஷயங்களை இந்த `Retro நாயகிகள்’ சீரிஸ் உங்களுக்கு சொல்லப்போகுது. இன்னிக்கு, தமிழ் சினிமாவுல அழகான மின்னல் மாதிரி சில படங்கள்ல மட்டுமே நடிச்ச, ஆனா, இன்னிக்கு வரைக்கும் நம்ம எல்லாரோட மனசுலேயும் இருக்கிற நடிகை ரதி பத்தி தான் தெரிஞ்சுக்கப்போறீங்க.

நடிகை ரதி
நடிகை ரதி

உத்திரப்பிரதேசத்துல இருக்கிற பரேலி தான் ரதியோட சொந்த ஊர். பஞ்சாபி குடும்பத்தைச் சேர்ந்தவங்க. அவங்க அப்பா ‘ரூப் அக்னிஹோத்ரி’யோட வேலை காரணமா, குடும்பமா சென்னைக்கு வந்திருக்காங்க. ஸோ, படிச்சதெல்லாம் ரதி சென்னையிலதான். அவங்களோட அக்கா மாடலிங் பண்ணிக்கிட்டிருந்ததால, ரதியும் 5 வயசுலேயே மாடலிங் பண்ண ஆரம்பிச்சிருக்காங்க. கே. ஆர். வி. பக்தா என்கிற புகைப்படக்கலைஞர் ஒருத்தர், ரதியோட புகைப்படத்தை டைரக்டர் பாரதிராஜாவுக்குக் காட்ட ‘புதிய வார்ப்புகள்’ படத்தோட நாயகி ஆகியிருக்கிறார் ரதி.

”புதிய வார்ப்புகள்ல நடிக்கிறப்போ எனக்கு தமிழும் தெரியாது, நடிப்பும் தெரியாது. அதுக்கு முன்னாடி எங்க குடும்பத்துல யாரும் சினிமா ஃபீல்டுல இருந்ததுமில்ல. அதனால, டைரக்டர் சொன்னதைக் கேட்டு கேட்டு ரொம்ப பயந்துக்கிட்டே தான் நடிச்சேன். படம் பயங்கர சக்ஸஸ்.

இந்தியில என்னோட முதல் படம் ‘ஏக் துஜே கேலியே’ டைரக்டர் கே. பாலச்சந்தர் சார். அவரோட கண்ணைப் பார்த்தாலே எனக்கு பயமா இருக்கும். இந்தப்படமும் பயங்கர சக்ஸஸ். இப்போ யோசிச்சுப்பார்த்தா, எவ்ளோ பெரிய லெஜண்ட்ஸ் படத்துல நான் அறிமுகமாகியிருக்கேன்; எவ்ளோ லக்கியா இருந்திருக்கேன்னு ஆச்சரியமா இருக்குது”ன்னு 3 வருடங்களுக்கு முந்தைய இன்டர்வியூ ஒண்ணுல ரதி சொல்லியிருக்காங்க.

நடிகை ரதி
நடிகை ரதி

புதிய வார்ப்புகள் படத்தோட வெற்றிக்குப் பிறகு, நிறம் மாறாத பூக்கள், உல்லாசப்பறவைகள், முரட்டுக்காளை, கழுகு, வீட்டுக்கு வீடு வாசப்படி, அன்புக்கு நான் அடிமைன்னு வரிசையா படங்கள்ல நடிக்க ஆரம்பிச்சார் ரதி.

முதல் படத்துல தமிழ் ஹீரோயின்களுக்கான உடல்வாகு இல்ல; படத்துல பாட்டுக்கு ஏத்த மாதிரி வாயசைக்க தெரியலைன்னு ரதியைபத்தின விமர்சனங்கள் வந்தாலும், அவரோட குழந்தை முகமும், கிளைமேக்ஸ்ல கண்கள்லேயே அவர் வெளிப்படுத்தின நடிப்பும் பலராலும் கொண்டாடப்பட்டுச்சு. ‘நிறம் மாறாத பூக்கள்’ படத்தோட ஹிட் பாடலான ‘ஆயிரம் மலர்களே மலருங்கள்’ பாட்டுலகூட குளோசப்ல ரதிக்கு இன்னமும் பாட்டுக்கு ஏத்த மாதிரி வாயசைக்க தெரியலைங்கிறது நல்லாவே தெரியும்.

ஆனா, தான் வர்ற கொஞ்ச சீன்கள்லேயே தன்னோட க்யூட்டான நடிப்பால அதை பேலன்ஸ் பண்ணியிருப்பாங்க. உல்லாசப்பறவைகள், முரட்டுக்காளை, கழுகு படங்கள்ல பார்த்தீங்கன்னா, மேக்கப்ல ஆரம்பிச்சி லிப் மூவ்மென்ட் வரைக்கும் செமையா க்ரூம் ஆகியிருப்பாங்க ரதி.

நடிகை ரதி
நடிகை ரதி

தெலுங்குல தான் எடுத்த ‘மரோசரித்ரா’வை இந்தியில் ‘ஏக் துஜே கேலியே’வாக கே.பாலச்சந்தர் எடுக்க, அதுல கமலுக்கு ஜோடியா இந்தி ஃபீல்டுக்கு போன ரதி, பாலிவுட்டோட டார்லிங் ஆகிட்டாங்க. அந்தப்படத்தோட சூப்பர் டூப்பர் வெற்றிக்குப்பிறகு அமிதாப், மிதுன் சக்ரவர்த்தி, சத்ருகன் சின்ஹா, தர்மேந்திரா, அனில் கபூர்னு இவங்க ஜோடி சேராத இந்தி ஹீரோக்களே இல்லைன்னு சொல்லலாம். தமிழ், இந்தி தவிர, தெலுங்கு, கன்னடத்துலேயும் நடிச்சிருக்காங்க ரதி.

தன்னோட நடிப்பைப்பத்தி, தன்னோட கேரக்டர்பத்தி ரதியே சொன்ன சில வார்த்தைகள் ரொம்ப இன்ட்ரஸ்ட்டிங்கா இருக்கும். ”சினி ஃபீல்டுல நான் களிமண்ணு மாதிரி தான் இருந்தேன். அப்படியிருந்தா தான் கொடுக்கப்படுற கேரக்டருக்கு தகுந்த மாதிரி வளைஞ்சிக்கொடுத்து நடிக்க முடியும்னு நம்பினேன்.

நடிகை ரதி
நடிகை ரதி

நான் பார்ட்டிக்குப்போற நடிகை கிடையாது. அதை நான் தப்புன்னு சொல்ல வரல. 3 ஆயிரம் பேருக்கு முன்னாடி ஒரு ஸ்டேஜ்ல நின்னுக்கிட்டு என்னால ஆட முடியும்; நடிக்க முடியும். ஆனா, அஞ்சாறு பேருக்கு நடுவுல கையில கிளாஸோட நிக்க முடியாது. அதுக்குபதிலா, என் வீட்ல என் நாயோட இருக்கிறதைதான் நான் விரும்பினேன்.”

ரதி, பயங்கரமான அப்பா பொண்ணு. ”அவர் என் அப்பா மட்டுமில்ல. அவர் என் ஃப்ரெண்ட். என்னோட, எங்கம்மாவோட உலகமே அவர்தான். நான் ஒருநாள்கூட ஷூட்டிங்குக்கு லேட்டா போனதே இல்ல. அப்பா என் கரியரை பார்த்துக்கிட்டதுதான் அதுக்குக் காரணம். ஆனா, ஒருநாள் திடீர்னு அப்பா இல்லாம போயிட்டார். அது சாகுற வயசே கிடையாது. நாங்க உடைஞ்சிப் போயிட்டோம். அவர் எனக்காக கட்டி வெச்ச ஓர் உலகத்தைத் தாண்டி எனக்கு எதுவுமே தெரியாது”ன்னு கண் கலங்குகிற ரதி, அவரோட அப்பா இறந்த மூணே வாரங்கள்ல, தன் கரியரோட உச்சத்துல இருக்கிறப்போவே லவ் மேரேஜ் பண்ணியிருக்கார்.

நடிகை ரதி
நடிகை ரதி

”ஆமா, நான் இந்தி ஃபீல்டுல புகழோட உச்சியில இருந்தப்போ தான் கல்யாணம் செஞ்சுக்கிட்டேன். அவர் ஒரு பிசினஸ்மேன். பேரு அனில் விர்வானி. என்னோட அப்பா, ’23 வயசு வரைக்கும்தான் நான் உன்னை நடிக்க விடுவேன். அதுக்கப்புறம் நீ கல்யாணம் பண்ணிக்கிட்டே ஆகணும்’னு சொல்லி இருந்தார். எனக்கும் அதுதான் சரின்னு பட்டுச்சு. எங்க காதல் கல்யாணத்துல முடிய ஜஸ்ட் மூணு வாரம் இருக்கிறப்போ தான் என் அப்பா தவறிட்டார். கல்யாணத்தை நிறுத்திடலாம்னு முடிவெடுத்தேன். ஆனா, எங்க அக்னிஹோத்ரி குடும்பத்துல எல்லாருக்கும் அம்மா ஸ்தானத்துல இருந்த ஒருத்தங்க ‘குறிச்ச தேதியில கல்யாணம் பண்ணிக்கோங்க. அது உங்கப்பாவோட ஆசை’ன்னு சொன்னாங்க. ஸோ, சிம்பிளா கல்யாணம் பண்ணி, அனிலோட ஃப்ரெண்ட்ஸுக்காக ரிசப்ஷன் வெச்சோம். 70-களோட இறுதியில நடிக்க வந்தேன். 85-லேயே கல்யாணம் செஞ்சுக்கிட்டேன்”னு அதுக்கான காரணத்தை அவரே ஓர் இன்டர்வியூவுல சொல்லியிருக்கார்.

அதுக்கப்புறம் கணவர், மகன்னு வீடே உலகமா ரதி வாழ ஆரம்பிச்சிட்டதாகவும், ரதியோட கணவர் அவங்களை நடிக்கக்கூடாதுன்னு சொல்லிட்டதாகவும் வதந்திகள் பரவ ஆரம்பிச்சிது. 2001-ல செகண்ட் இன்னிங்ஸை ஆரம்பிச்சார் ரதி. இந்திப்படங்கள், இந்தி சீரியல்னு நடிக்க ஆரம்பிச்சவர், தமிழ்ல பிரசாந்த் நடிச்ச மஜ்னு படத்துல ஹீரோயின் ‘ரிங்கி கன்னா’வோட அம்மாவா நடிச்சிருந்தார்.

நடிகை ரதி குடும்பத்துடன்
நடிகை ரதி குடும்பத்துடன்

ரதி ரொம்ப சந்தோஷமா இருக்காங்கன்னு நம்பிட்டிருந்த பலருக்கும், அது உண்மையில்லைன்னு தெரிஞ்சது 2015-ல. ”கல்யாணமான சில மாதங்கள்ல இருந்து என் கணவர் எனக்கு மென்டல் டார்ச்சர் பண்ணிட்டிருக்கார். அடிக்கவும் செஞ்சிருக்கார். எல்லா மனைவிகள் மாதிரியும் அவர் மாறிடுவாருன்னு நானும் நம்பினேன். என் பையனுக்காக எல்லாத்தையும் பொறுத்துக்கிட்டேன். இதுக்கு மேல முடியாதுன்னு தான் போலீஸ்ல கம்ப்ளெயின்ட் பண்ணியிருக்கேன்”னு மீடியா முன்னாடி பேசினார் ரதி.

அந்த நேரத்துல, கல்யாணமானதுல இருந்து தன்னோட வாழ்க்கையில என்னவெல்லாம் நடந்துச்சுன்னு விரிவா பேட்டி கொடுத்திருக்கார் ரதி. அதுல, ”எங்களோடது பீச் ஹவுஸ். என் கணவரோட அடிகளுக்கு பயந்து, தனியா இருக்கிற இந்த பங்களாவை சுத்தி எத்தனையோ நாள் நான் ஓடியிருக்கேன். உடம்புலேயோ, முகத்துலேயோ காயம் ஏற்படாதபடிக்கு அடிப்பார் அனில். அவரை பொறுத்தவரைக்கும் நான் ஓர் அழகான பொம்மை. ஆரம்பத்துல எங்களோட காதல் மேல எனக்கிருந்த நம்பிக்கையில அவர் மாறிடுவார்னு நம்பினேன். அதுக்கப்புறம் கல்யாணத்து மேல எனக்கிருந்த மரியாதையால அவர் செஞ்ச கொடுமைகளை பொறுத்துக்கிட்டேன். பிறகு, என் மகன் தனுஜூக்காக தாங்கிக்கிட்டேன்.

நடிகை ரதி மகனுடன்
நடிகை ரதி மகனுடன்

எங்கம்மா பக்கவாதத்துல பாதிக்கப்பட்டு எங்கக்காகூட போலாந்துல இருக்காங்க. என்னோட நெருங்கின தோழி சென்னையில இருக்கா. இங்க என்னை பாதுகாக்க யாருமே இல்ல. சமீபத்துல அனில் என்னை அடிச்சப்போ, என் மகன் தனுஜ் வெளியூர் ஷூட்டிங்ல இருந்தான். இதுக்கு மேலயும் அமைதியா இருந்தா, என்னிக்காவது நான் அடிவாங்கியே செத்திடுவேன்கிறது புரிந்துபோச்சு. அதனாலதான், அனில் மேல கம்ப்ளெய்ன்ட் கொடுத்தேன்”னு சொல்ற ரதி, 2001-ல தான் மறுபடியும் நடிக்க ஆரம்பிச்சதுக்கு காரணமா தன்னோட பணத்தேவையை குறிப்பிடுறார். ஸோ, உடம்பு, மனசு, பொருளாதாரம்னு எல்லாவகையிலேயும் ரதி கஷ்டப்பட்டுக்கிட்டுதான் இருந்திருக்கார்.

ரதி, இப்போ போலாந்துல செட்டிலாகிட்டதா சொல்றார். ”அங்க நானும் என் அக்கா அனிதாவும் செயின் ஆஃப் ரெஸ்ட்டாரன்ட் நடத்திக்கிட்டிருக்கோம். அவங்க ரெஸ்ட்டாரன்ட்டோ கணக்கு, வழக்குப் பார்த்துக்கிறாங்க. நான் உணவு விஷயத்தைப் பார்த்துக்கிறேன். உண்மையை சொல்லணும்னா, எனக்கு நடிக்கிறதைவிட சமைக்கிறது நல்லா வரும். எங்க ரெஸ்ட்டாரன்ட்ல இருக்கிற எல்லா ரெசிபியும் என்னோடதுதான். ருசியில எந்த மாற்றமும் வந்துடக்கூடாதுன்னு எங்களோட செஃபை கூட என் சமையல்ல நுழைய விட மாட்டேன். யோகா, மகன், என்னோட செல்ல நாய்னு சந்தோஷமா இருக்கேன். என்ன, மெனோபாஸ் வந்தப்போ ரொம்ப வெயிட் போட்டுட்டேன். ஆனா, அதைப்பத்தியெல்லாம் இப்போ நான் கவலைப்படுறதில்ல. எக்ஸ்ட்ரா உடல் எடையோட நான் சந்தோஷமா இருக்கே”ன்னு நிம்மதியா ஒரு பேட்டி கொடுத்திருக்கார் ரதி.

நடிகை ரதி
நடிகை ரதி

ஓய்வு கிடைச்சா தமிழ்ல ஒரு படம் நடிங்க ரதி. உங்களோட முகமும் நடிப்பும் தமிழ் ரசிகர்கள் மனசுல இன்னமும் நிறம் மாறவே இல்லை.!

(நாயகிகள் வருவார்கள்..!)

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.