நடிகர் யோகி பாபு தற்போது தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக மட்டுமல்லாமல் ஹீரோவாகவும் பல படங்களில் நடித்து வருகிறார்.
நெல்சன் இயக்கிய ‘கோலமாவு கோகிலா’ படத்தில் யோகி பாபுவின் நடிப்பு பட்டிதொட்டி எங்கும் வரவேற்பைப் பெற்றது.
இவர் தற்போது ரஜினியின் ‘ஜெயிலர் 2’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இதற்கிடையில், யோகி பாபு, வேதிகா, இனிகோ பிரபாகர் முதன்மை வேடங்களில் நடித்துள்ள படம் ‘கஜானா’ படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

அதில் கலந்து கொண்டு பேசிய தயாரிப்பாளர் ராஜா, “இந்தப் படத்தில் நடித்த நடிகர் யோகி பாபு இந்த இசை வெளியீட்டு விழாவுக்கு வரவில்லை. 7 லட்சம் கொடுத்திருந்தால் வந்திருப்பார்” எனக் கட்டமாகப் பேசியிருந்தார்.
இதற்கு யோகி பாபு தரப்பிலிருந்து சரியான விளக்கமளிக்கப்படவில்லை எனக் கூறப்பட்டது.
இந்த நிலையில், வாமா என்டர்டெயின்மென்ட் சார்பில் விநீஷ் மில்லினியம் இயக்கத்தில் ‘ஜோரா கைய தட்டுங்க’ என்ற படத்தில் யோகி பாபு நடித்து முடித்துள்ளார். வருகிற 16-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.

அதில் கலந்துகொண்டு உரையாற்றிய நடிகர் யோகி பாபு, “15 வருடத்துக்கு முன்னாள் வினி சார் தயாரிப்பில் தீக்குளிக்கும் பச்சை மரம் என்ற பாடத்தில் நடித்தேன்.
அப்போது எனக்குச் சம்பளமாக ரூ. 1000 கொடுத்தார். அதற்குப் பிறகு 6 வருடங்களாக எனக்கும் அவருக்கும் எந்தத் தொடர்புமில்லாமல் போனது.
திடீரென ஒருநாள் அவர் என்னை அழைத்தார். அவருடைய நம்பர் என்னிடம் இல்லை என்றாலும் அவரின் குரல் கேட்டவுடன், ‘வினி சார் எப்படி இருக்கீங்க?’ எனப் பேசினேன். அவருக்கு அப்போது பெரிய ஷாக்.
நான் எப்போதும் எனக்கு உதவியவர்களை மறக்கமாட்டேன். அப்போது அவர் சொன்ன பாடம்தான் இது. என் சம்பளம் எவ்வளவு என எனக்கே தெரியாது.
நான் அதை முடிவு செய்வதில்லை. வெளியே இருப்பவர்கள்தான் அதை முடிவு செய்கிறார்கள். சம்பளம் என்ன என முடிவு செய்பவர்கள் நடித்ததற்குப் பிறகு அதைச் சரியாகக் கொடுத்துவிட்டால் போதும்.
அதைக் கேட்டால்தான் இங்கு எதிரியாகிவிடுகிறோம். என்னிடம் ஆசிஸ்டன்ட் ஆக வேலை செய்த தம்பி ஒருவர் ஹீரோவாக படம் நடிப்பதாகத் தெரிவித்திருந்தார்.

அதில் இரண்டு நாள் நான் நடிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். அந்தப் படத்துக்குத்தான் 7 லட்சம் கேட்டேன், 8 லட்சம் கேட்டேன் என்கிறார்கள்.
எனக்கு எவ்வளவு பேர் பணம் கொடுக்க வேண்டும் தெரியுமா? என்னிடம் பெரிய பட்டியலே இருக்கிறது. எனவே தவறாகப் பேசாதீர்கள். எல்லோருக்கும் சப்போர்ட் செய்கிறோம். பேசுபவர்கள் பேசட்டும். கடவுள் பார்த்துக்கொள்வார்” எனப் பேசினார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…