புதுடெல்லி: இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், நாட்டின் வடக்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் உள்ள 32 விமான நிலையங்களில் சிவில் விமானப் போக்குவரத்து நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக இந்திய விமான நிலைய ஆணையம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “குறிப்பிட்ட விமான நிலையங்கள் மற்றும் விமான வழித்தடங்களில் சிவில் விமானப் போக்குவரத்து நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தபடுகின்றன
செயல்பாட்டு காரணங்களுக்காகவும், வடக்கு மற்றும் மேற்கு இந்தியப் பகுதி முழுவதும் உள்ள 32 விமான நிலையங்கள், அனைத்து சிவில் விமான நடவடிக்கைகளுக்காகவும் தற்காலிகமாக மூடப்படுவதாக இந்திய விமான நிலைய ஆணையம் அறிவித்துள்ளது.
தொடர்புடைய விமான அதிகாரிகளும் விமானப் பணியாளர்களுக்கு தொடர்ச்சியான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனர். இது மே 9, 2025 முதல் மே 14, 2025 வரை (இந்திய நேரப்படி மே 15, 2025 அன்று காலை 05 29 மணிவரை) அமலில் இருக்கும்.
பாதிக்கப்படும் விமான நிலையங்கள்: ஆதம்பூர், அம்பாலா, அமிர்தசரஸ், அவந்திபூர், பதிண்டா, புஜ், பிகானீர், சண்டிகர், ஹல்வாரா, ஹிண்டன், ஜெய்சல்மார், ஜம்மு, ஜாம்நகர், ஜோத்பூர், கண்ட்லா, காங்ரா (காகல்), கேஷோட், கிஷன்கர், குல்லு மணாலி (பூந்தர்), லே, லுதியானா, முந்ரா, நாலியா, பதான்கோட், பாட்டியாலா, போர்பந்தர், ராஜ்கோட் (ஹிராசர்), சர்சாவா, சிம்லா, ஸ்ரீநகர், தோய்ஸ், உத்தர்லாய் ஆகிய 32 விமான நிலையங்கள் மூடப்படுகின்றன.
இந்த விமான நிலையங்களில் உள்ள அனைத்து சிவில் விமான நடவடிக்கைகளும் இந்தக் காலகட்டத்தில் நிறுத்தி வைக்கப்படும். செயல்பாட்டு காரணங்களுக்காக டெல்லி மற்றும் மும்பை விமான தகவல் மண்டலங்களுக்குள் 25 பிரிவுகளின் விமான போக்குவரத்து வழித்தட சேவைகளை தற்காலிகமாக மூடுவதையும் இந்திய விமான நிலைய ஆணையம் நீட்டித்துள்ளது.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.