புதுடெல்லி: இன்று காலையும் ஆத்திரமூட்டும் தீவிர தாக்குதல்களில் பாகிஸ்தான் ஈடுபட்டதாக வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி குற்றம் சாட்டியுள்ளார்.
இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், அது தொடர்பான செய்தியாளர் சந்திப்பு புதுடெல்லியில் இன்று(மே 10) நடைபெற்றது. இதில், வழக்கம்போல் வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, கர்னல் சோபியா குரேஷி, விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர் பங்கேற்றனர்.
வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி கூறுகையில், “பாகிஸ்தானின் நடவடிக்கைகள் ஆத்திரமூட்டக் கூடியதாகவும், பதற்றத்தைத் தீவிரப்படுத்தக் கூடியதாகவும் இருப்பதை இதற்கு முன்பு பல சந்தர்ப்பங்களில் நான் சுட்டிக்காட்டி உள்ளேன். இதற்கு இந்தியா பொறுப்புடனும், அளவிடப்பட்ட முறையிலும் பாதுகாப்புக்கான எதிர்வினையை ஆற்றி உள்ளது.
இன்று காலையும் ஆத்திரமூட்டக்கூடிய, தீவிரமான தாக்குதல்களை பாகிஸ்தான் நடத்தியது. பாகிஸ்தானின் செயல் ஆத்திரமூட்டலையும், தீவிரத்தையும் ஏற்படுத்தியது. பாகிஸ்தானின் இந்த நடவடிக்கைகளுக்கு இந்தியா அளவான முறையில் பதிலளித்தது.
இந்திய மக்கள் பல்வேறு பிரச்சினைகளில் இந்திய அரசாங்கத்தை விமர்சிக்க வேண்டும் என்பதில் பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் மிகுந்த மகிழ்ச்சியடைவதையும் அவரது சில கருத்துக்களில் கண்டோம். குடிமக்கள் தங்கள் சொந்த அரசாங்கத்தை விமர்சிப்பதைப் பார்ப்பது பாகிஸ்தானியர்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஏனெனில், அவ்வாறு விமர்சிப்பது வெளிப்படைத்தன்மை நிறைந்த செயல்படக்கூடிய ஜனநாயகத்தின் ஓர் அடையாளமாகும். பாகிஸ்தானுக்கு இதில் பரிச்சயம் இல்லாதது எங்களுக்கு ஆச்சரியம் அளிக்கவில்லை.” எனத் தெரிவித்தார்.
முன்னதாக, பாதுகாப்பு அமைச்சகம் தனது எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில், “பாகிஸ்தான் மே 10, 2025 அன்று ஜம்முவில் உள்ள புகழ்பெற்ற ஷம்பு கோயில் மற்றும் குடியிருப்பு பகுதிகள் போன்ற வழிபாட்டுத் தலங்களை குறிவைத்து தனது விரோதப் போக்கைத் தொடர்ந்தது. இரவு முழுவதும் பல ஆயுதமேந்திய ட்ரோன்கள் அனுப்பப்பட்டன. இதனால் பொதுமக்கள் மற்றும் மதத் தலங்களுக்கு ஆபத்து ஏற்படுகிறது. இந்திய ஆயுதப் படைகள் விழிப்புடன் உள்ளன, மேலும் நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்க உறுதிபூண்டுள்ளன.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா – பாக். மோதல்: நடப்பது என்ன? – கடந்த ஏப்ரல் 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் 26 பேர் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டனர். கொடூரமான இந்தத் தாக்குதலுக்கு பதிலடியாக கடந்த புதன்கிழமை நள்ளிரவில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தானின் 9 தீவிரவாத முகாம்களை அழித்தது இந்திய ராணுவம். அதன் தொடர்ச்சியாக, இந்திய எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டருகே உள்ள எல்லை கிராமங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது.
ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் ஆகிய 4 எல்லை மாநிலங்களில் வியாழக்கிழமை இரவு 36 இடங்களை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய 400-க்கும் மேற்பட்ட துருக்கி தயாரிப்பு ட்ரோன்களை ‘சுதர்சன சக்கரம்’ (எஸ்-400) உள்ளிட்ட வான் பாதுகாப்பு ஆயுதங்களால் இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியது. அதன் பின்னரும், பாகிஸ்தானின் வான்வழித் தாக்குதல்களும், இந்தியாவின் பதிலடி தாக்குதல்களும் நீடிப்பது கவனிக்கத்தக்கது.