சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக சென்னை, வேலூரில் நடந்த சோதனையில் ரூ.4.73 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அமலாக்கத் துறை கூறியிருப்பதாவது: முன்னாள் சுற்றுச்சுழல் துறை கண்காணிப்பாளர் எஸ்.பாண்டியனுக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறை பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையின்பேரில், சென்னை, வேலூரில், தமிழ்நாடு அரசு துறைகளுடன் தொடர்புடைய கன்சல்டன்சி நிறுவனங்கள், ஆலோசகர்களுக்கு (கன்சல்டன்ட்) சொந்தமான 16 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
அந்தவகையில், முக்கிய ஆலோசகர்களான (கன்சல்டன்ட்) பிரபாகர் சிகாமணி, ஏ.கே.நாதன், நவீன்குமார், சந்தோஷ்குமார், வினோத்குமார் ஆகியோர் சட்டவிரோதமாக அனுமதியை பெற்றுக் கொடுத்ததில் முக்கியப் பங்கு வகித்துள்ளனர். சோதனையில் இவர்களிடம் இருந்து கணக்கில் வராத ரூ.4.73 கோடி ரொக்கம், டிஜிட்டல் பதிவுகள், சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், குற்றச்செயல்களின் மூலம் பெறப்பட்ட சொத்துகளும் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றை முடக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.