சென்னை: வட சென்னையில் எரி உலை அமைக்கும் திட்டத்தை அரசு திரும்பப் பெற வேண்டும் என்று, ஹைதராபாத்தில் எரிஉலை திட்டத்தை நேரில் ஆய்வு செய்த குழு வலியுறுத்தியுள்ளது.
வட சென்னை குடியிருப்போர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் டி.கே.சண்முகம், மாநகராட்சி கவுன்சிலர் ஜெயராமன், மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ஹைதராபாத்தை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர்களுடன் இணைந்து, ஹைதராபாத்தில் ஜவஹர் நகர் பகுதியில் குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் எரிஉலை திட்ட பகுதிகளைச் சுற்றி கடந்த மே 7-ம் தேதி ஆய்வு செய்தனர்.
இதுதொடர்பாக அக்குழுவினர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஹைதராபாத்தில், குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் எரிஉலை இயங்கும் ஜவகர் நகரைச் சுற்றி கார்மிகா நகர், ஒய்எஸ்ஆர் நகர், காபிலா பேட்டை, சாந்தி நகர் உள்ளிட்ட குறைந்த வருவாய் மற்றும் ஒடுக்கப்பட்ட சமூக மக்கள் வசிக்கும் குடியிருப்புகள் உள்ளன.
இங்கு வசிப்போருக்கு, மின்சாரம் தயாரிக்கும் எரிஉலை ஏற்படுத்தும் மாசு காரணமாக சுவாசப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன. சிகிச்சைக்காக மாதம் ரூ.5 ஆயிரம் வரை செலவிட வேண்டி இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
எரிஉலையில் இருந்து, நச்சுத்தன்மை வெளியேற்றங்களின் தாக்கம் மிக அதிகமாக இருப்பதால், இந்த பகுதிகளைச் சேர்ந்த குழந்தைகள் வெளியே விளையாடுவதில்லை. மாசுபாடு மற்றும் அவர்களின் ஆரோக்கியத்தில் அதன் பேரழிவு தாக்கங்கள் காரணமாக அவர்களின் விளையாடும் உரிமை மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை பறிக்கப்படுகிறது.
அங்கு நிலத்தடி நீரின் தரம் மோசமாக உள்ளது. இந்த ஆலையால் 18 நீர்நிலைகள் மாசுபட்டுள்ளன. ஆலைக்கு நீர் கொண்டு செல்வதற்காக ஏரியில் சாலை அமைத்து, ஏரியின் இயற்கை சூழல் பாதிக்கப்பட்டுள்ளது. கார்மிகா நகருக்குள் நுழைந்த உடனே மூக்கு மற்றும் உதடுகளில் ஒருவித எரிச்சல் உணர்வு ஏற்பட்டது.
ஹைதராபாத் எரிஉலையை இயக்கும் எம்எஸ்டபிள்யூ எனர்ஜி சொல்யூஷன்ஸ் நிறுவனம் திடக்கழிவு மேலாண்மை விதிகளை மீறியுள்ளதாக தெலங்கானா மாசு கட்டுப்பாட்டு வாரிய அறிக்கைகள் தெரிவிக்கின்றன. கன உலோகங்கள் மற்றும் பிற நச்சுகள் போன்ற அபாயகரமான மாசுபாடுகளைக் கண்காணிக்கத் தவறிவிட்டது. இதே நிறுவனமான டெல்லி எம்எஸ்டபிள்யூ சொல்யூஷன் லிமிடெட் ஆலை, டெல்லியில் பல்வேறு மீறல்களுக்காக ரூ.25 லட்சம் இழப்பீட்டுத் தொகை செலுத்தியுள்ளது.
சென்னையில் இதுபோன்ற மிகவும் மாசுபடுத்தும் குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் எரிஉலை, இப்பகுதி மக்களின் வாழ்க்கையை சீரழிக்கும். ஹைதராபாத் மின்சாரம் தயாரிக்கும் திட்டம் புறநகர் பகுதியில் உள்ளது. ஆனால் சென்னை கொடுங்கையூரில், நகரத்தின் அடர்த்தியான மக்கள்தொகை கொண்ட பகுதி. எரிஉலையால் மக்களுக்கு தீங்கு அதிகமாக இருக்கும். எனவே வடசென்னையில் எரிஉலை அமைக்கும் திட்டத்தை திரும்பப் பெற வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.