பாகிஸ்தான் மீது இந்திய ராணுவப் படைகள் தாக்குதல் நடத்தி வரும் வேளையில் இஸ்லாமாபாத்திலுள்ள பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நேற்று சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. இதில் எம்.பி. ஷாகித் கட்டக் கலந்துகொண்டு பேசினார்.
அவர் பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. அதில் அவர் பேசியதாவது: நமது பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஒரு கோழை. எந்த முடிவையும் எடுக்க தைரியம் இல்லாமல் இருக்கிறார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பெயரை உச்சரிக்கக் கூட அவருக்கு தைரியம் இல்லை.
மிகவும் பலம் குறைந்தவராகவும், நம்பிக்கை இல்லாதவராகவும் நமது பிரதமர் ஷெபாஸ் இருக்கிறார். இது ஒரு நல்ல சமிக்ஞை கிடையாது. தைரியமற்ற பிரதமரால் பாகிஸ்தான் ராணுவம் மனச்சோர்வு அடைந்துள்ளது. இந்த நெருக்கடியான நேரத்தில் தேசம் ஆதரவற்று உள்ளது. நமது நாட்டின் ராணுவப் படைகளை ஆதரிக்க முடியாமல் பிரதமர் இருக்கிறார்.
இப்படி ஒரு நெருக்கடியான நிலை வந்திருக்கும் நிலையில் எனக்கு திப்பு சுல்தானின் ஒரு மேற்கோள் நினைவுக்கு வருகிறது. ஒரு ராணுவப் படை சிங்கத்தால் வழிநடத்தப்பட்டு நரிகளால் பின்தொடரும்போது, அந்தப் படை முழுவதும் சிங்கங்களைப் போலவே போராடும். ஆனால், படை நரிகளால் வழி நடத்தப்பட்டு, சிங்கங்களால் பின்தொடரும்போது அவர்களால் போராட முடியாது. அவர்கள் போரில் தோல்வியுறுவார்கள் என்று திப்பு சுல்தான் கூறியிருக்கிறார்.
இந்த இக்கட்டான சூழ்நிலையில் நமது நாட்டின் மீது நம்பிக்கை வைத்து எல்லையில் ராணுவ வீரர்கள் நிற்கின்றனர். ஆனால், நாட்டின் கண்ணாடியாக , முகமாக இருக்கவேண்டிய, நமது தலைவர், தேசியத் தலைவர், பிரதமர் அவர்களுக்கு தைரியம் அளிக்கவேண்டும். அவர்களுக்குத் நம்பிக்கை அளித்து எதிரி நாட்டின் சவாலை முறியடிக்கும் தைரியத்தை அவர் அளிக்க வேண்டாமா? ஆனால் அவர் ஓடி ஒளிந்து கொண்டிருக்கிறார்.
நமது பிரதமர் ஒரு கோழையாக இருக்கிறார். பிரதமர் மோடியின் பெயரை உச்சரிக்கக் கூட திராணியற்ற ஒரு பிரதமரை வைத்துக் கொண்டு, நமது எல்லையில் இருக்கும் வீரர்களுக்கு என்ன மாதிரியான செய்தியை நம்மால் அனுப்ப முடியும்? இவ்வாறு ஷாகிக் கட்டக் பேசினார். அவர் பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.