புதுச்சேரி: “போர்க் காலத்தில் ரெஸ்டோ பார்களில் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டங்களுக்கு அரசு அனுமதிப்பது தேசப்பற்று மிக்க மக்களின் நெஞ்சில் ஈட்டிகொண்டு துளைப்பது போல் உள்ளதாகவும், போர் நடைபெறும் வேளையில், வரும் 20-ம் தேதி இண்டியா கூட்டணி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள பந்த் போராட்டம் அவசியமற்ற ஒன்றாகும்,” என்று புதுச்சேரி அதிமுக செயலாளர் அன்பழகன் கூறியுள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியின் பிறந்த நாளையொட்டி அவர் நலமுடன் வாழவும், எல்லையில் போர் புரியும் ராணுவ வீரர்கள் நலமுடன் இருக்கவும், வெற்றி பெற வேண்டியும் புதுச்சேரி அதிமுக சார்பில் மணக்குள விநாயகர் கோயிலில் சிறப்பு பூஜை இன்று (மே 10) நடைபெற்றது.
மாநிலச் செயலாளர் அன்பழகன் தலைமையில் அக்கட்சியினர், 1008 தேங்காய் உடைத்து தங்கத் தேர் இழுத்து வழிபட்டனர். இதனைத் தொடர்ந்து சுப்பையா சாலையில் இருதய ஆண்டவர் தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனையும், முல்லா வீதியில் உள்ள தர்காவில் சிறப்பு தொழுகையும் நடைபெற்றது. ஏழை எளியவர்களுக்கு அன்னதானம், இனிப்புகள் வழங்கப்பட்டன.
பின்னர் மாநில செயலாளர் அன்பழகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “நம்முடைய நாட்டுக்காக இரவு பகல் பாராமல் தனது இன்னுயிரையும் துச்சமென நினைத்து எல்லையில் போர் புரியும் இந்திய போர் வீரர்களான நமது சகோதர, சகோதரிகள் போற்றதலுக்கு உரியவர்கள். எடப்பாடி பழனிசாமி கருத்துக்கு இணங்க நம் நாட்டு மக்கள் அனைவரும் பிரதமர் மோடியின் கரத்தை வலுப்பெற செய்ய வேண்டும். போர் நடைபெறும் வேளையில் இண்டியா கூட்டணி சார்பில் வரும் 20-ம் தேதி அறிவித்துள்ள பந்த் போராட்டம் அவசியமற்ற ஒன்றாகும்.
நம் நாட்டு போர் வீரர்கள் எல்லையில் தங்களது உயிரை பணயம் வைத்து போர் புரியும் வேளையில் புதுச்சேரி அரசானது சகட்டு மேனிக்கு அரசு விழாக்களை நடத்துவது அவசியமான ஒன்றா?. நம்முடைய பிரதமர் போர் பிரகடனம் செய்துள்ள நிலையில் ராணுவ சட்டத்தின்படி போர்க்கால சமயத்தில் மாநில அரசின் செயல்பாடுகள் இருக்க வேண்டும். தேவையற்ற விழாக்கள், விளம்பரங்கள், இரவு நேர ஆட்டம் பாட்டங்கள் இவை எதற்கும் யாரும் அனுமதி அளிக்கக்கூடாது.
நாடே பதற்றத்தில் உள்ள இச்சூழ்நிலையில் புதுச்சேரியில் உள்ள அனைத்து ரெஸ்டோ பார்களிலும் நடைபெறும் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் இவற்றையெல்லாம் அரசு அனுமதித்து கொண்டிருப்பது தேசப்பற்று மிக்க மக்களின் நெஞ்சில் ஈட்டிகொண்டு இதயத்தை துளைத்து போல் உள்ளது. எனவே போர்க் காலத்தில் மக்கள் அனைவரும் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள், கட்டுப்பாடுகள் பல்வேறு விஷயங்களை செய்யாமல் இருக்க தடை ஏற்படுத்துதல் உள்ளிட்ட விஷயங்களில் மாநில தலைமைச் செயலாளர், மாவட்ட ஆட்சியர் ஆகியோர் இணைந்து போர்க்கால நடைமுறை சட்டங்களை புதுச்சேரி மாநிலத்தில் உடனடியாக அமலுக்கு கொண்டுவர வேண்டும்.” என்றார்.