ஜம்மு,
ஜம்மு காஷ்மீரில் கடந்த சில நாட்களாக பதற்றமான சூழல் நிலவியது. பாகிஸ்தானின் அத்துமீறிய தாக்குதல் முயற்சி காரணமாக ஜம்முவில் இரவு நேரங்களில் மின் தடை, கல்வி நிலையங்களுக்கு விடுமுறை என பல்வேறு கட்டுப்பாடுகள் நீடித்தன. அடிக்கடி சைரன்கள் ஒலிக்கப்பட்டதால் மக்களும் வீடுகளுக்குள் முடங்கினர்.
நேற்று இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தம் அறிவித்துள்ள நிலையில், தற்போது ஜம்முகாஷ்மீரில் இயல்பு நிலை திரும்பி வருகிறது. இந்த நிலையில், ஜம்மு காஷ்மீரில் அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்கும் என்று அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக காஷ்மீரின் உணவு மற்றும் குடிமைப் பொருட்கள் வினியோகம் மற்றும் நுகர்வோர் விவகாரத் துறை மந்திரி சதீஷ் ஷர்மா நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
இந்தியா – பாகிஸ்தான் மோதலை தொடர்ந்து பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை. உணவு தானியங்கள், பெட்ரோலியம் உள்ளிட்ட எரிபொருட்கள், சமையல் எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் எவ்வித தட்டுப்பாடும் இன்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
எல்லா வினியோக முனையங்களிலும் தேவையான அளவில் பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டு உள்ளது. அவ்வப்போதைய நிலைமையை கண்காணித்து, தடையற்ற வினியோகம் நடைபெற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. எனவே மக்கள் அமைதி மற்றும் விழிப்புடன் இருக்க வேண்டும். வதந்திகளை நம்ப வேண்டாம். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.