சென்னை: தஞ்சாவூர் மாவட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் மருத்துவமனைகளுக்கு 16 புதிய கட்டிடங்கள் திறந்துவைக்கப்பட்டதோடு, 13 புதிய கட்டடங்களுக்கும் அடிக்கல் நாட்டப்பட்டது. இதில் தமிழக அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன் மற்றும் கோவி.செழியன் பங்கேற்றனர்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தஞ்சாவூர் மாவட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் ரூ.11.82 கோடி செலவில் 16 புதிய கட்டடங்கள் திறந்து வைத்து, ரூ.7.45 கோடி மதிப்பீட்டில் 13 புதிய கட்டடங்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் ஆகியோர் அடிக்கல் நாட்டினார்கள்.
தஞ்சாவூர் மாவட்டம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் ரூ.11.82 கோடி செலவில் 16 புதிய கட்டடங்கள் திறந்து வைக்கப்பட்டது. ரூ.7.45 கோடி மதிப்பீட்டில் 13 புதிய கட்டடங்களுக்கும் அடிக்கல் நாட்டப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் பா.பிரியங்கா பங்கஜம்,இ.ஆ.ப., மாநிலங்களவை உறுப்பினர் எஸ்.கல்யாணசுந்தரம், நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி (தஞ்சாவூர்), சட்டமன்ற உறுப்பினர்கள் துரை.சந்திரசேகரன் (திருவையாறு), உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அதனைத் தொடர்ந்து, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் ஆகியோர் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உடலியல் மருத்துவம் மற்றும் மறுவாழ்வு துறை மூலம் ரூ.2.37 இலட்சம் மதிப்பிலான செயற்கை கால்கள் 4 பயனாளிகளுக்கும், ஏழைத் தாய்மார்களுக்கு சத்துணவு பெட்டகமும் வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் க.கண்ணன், உள்ளிட்டஅதிகாரிகள் கலந்துகொண்டனர்.
முன்னதாக, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தஞ்சாவூர் அரசு இராசாமிராசுதார் மருத்துவமனையில் கடந்த 24.04.2025 அன்று குளிரூட்டும் இயந்திரத்தில் மின்கசிவினால் ஏற்பட்ட தீ விபத்து பகுதியினை பார்வையிட்டு மருத்துவமனையின் மேம்பாட்டுப் பணிகள் குறித்தும் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.