"தனியார் துறைகள், நீதிமன்றங்களில் இட ஒதுக்கீடு வேண்டும்" – பாமக மாநாடு தீர்மானங்கள் ஹைலைட்ஸ்

பாட்டாளி மக்கள் கட்சி சார்பில், சித்திரை முழுநிலவு வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு மாமல்லபுரத்தையடுத்த திருவிடந்தை பகுதியில் நடைபெற்றது.

இன்று மாலை நான்கு மணிக்குத் தொடங்கிய மாநாட்டில், இசை, நடன கலைநிகழ்ச்சிகள், பாராகிளைடரில் வன்னியர் சங்க கொடியை பறக்கவிடுதல், ட்ரோன் காட்சி உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றன.

மாநாட்டைத் தொடங்கிவைத்த பாமக நிறுவனர் ராமதாஸ், தொண்டர்கள் ஆர்பரிப்புக்கு இடையே கட்சிக் கொடியை ஏற்றினார். மாநாட்டில் 14 முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

தீர்மானங்கள்:

1. தமிழ்நாட்டில் 69% இடஒதுக்கீட்டைப் பாதுகாக்க மாநில அரசின் சார்பில் தனியாக சாதிவாரி சர்வே நடத்தப்பட வேண்டும்!

2. சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு: போராடி சாதித்த மருத்துவர் அய்யா அவர்களுக்கு நன்றியும், பாராட்டுகளும்!

3. உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் வன்னியர்களுக்கு உடனடியாக உள்இடஒதுக்கீடு வழங்கவேண்டும்!

4. அனைத்து சமூகங்களுக்கும் அவர்களின் மக்கள்தொகைக்கு இணையாக இட ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்!

5. பட்டியலின மக்களுக்கான இட ஒதுக்கீட்டின் அளவை, அவர்களின் மக்கள்தொகைக்கு ஏற்ப மேலும் 2% உயர்த்த வேண்டும்!

6. சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில், இடஒதுக்கீட்டுக்கான உச்சவரம்பை நீக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்!

7. மத்திய அரசின் ஓபிசி இடஒதுக்கீட்டில் கிரிமிலேயர் முறையை நீக்க வேண்டும்!

8. தனியார்துறையில் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும்!

9. உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களில் இடஒதுக்கீட்டை கட்டாயமாக்க வேண்டும்!

10. தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50% இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்!

11. தமிழ்நாட்டில் அனைத்துச் சமூக மக்களின் வளர்ச்சிக்காக நிதி அதிகாரத்துடன் கூடிய தனித்தனி கார்ப்பரேஷன்கள் அமைக்கப்பட வேண்டும்!

12. தமிழ்நாட்டில் கல்வி, தனிநபர் வருமானம், மனிதவள குறியீட்டில் பின்தங்கிய நிலையில் உள்ள வடமாவட்டங்களின் முன்னேற்றத்திற்கு சிறப்புத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்!

13. முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்தவும், போதைப் பொருட்களை ஒழிக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்!

14. ஜம்மு &காஷ்மீர் பயங்கரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்ட சகோதர, சகோதரிகளுக்கு  வீர வணக்கம்!



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.