தற்போதைய நிலை என்பது புரிந்துணர்வுதான்; போர் நிறுத்தம் அல்ல: நாராயணன் திருப்பதி 

சென்னை: தற்போதைய நிலை என்பது புரிந்துணர்வுதான்; போர் நிறுத்தம் அல்ல என்று தமிழக பாஜகவின் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ”ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் இந்தியா 90 நிமிடங்களில் பாகிஸ்தானின் பல விமான தளங்களை குறிவைத்து தாக்கியது மிகப்பெரிய ராணுவ நடவடிக்கை. இந்த துல்லிய, முன்னெச்சரிக்கை தாக்குதல் பாகிஸ்தான் விமானப் படையின் பலத்தை, தேசிய பாதுகாப்பின் ஒருங்கிணைப்பை, எதிர் தாக்குதலுக்கான தயார் நிலையை பலவீனமாக்கியதோடு, ராணுவத்தின் உறுதியை குலைத்தது.

1. நூர் கான் (ராவல்பிண்டி) : இஸ்லாமாபாத்திற்கு அருகேயுள்ள இந்த விமான தளத்திலிருந்து தான் வான் தாக்குதல் மற்றும் ராணுவ ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. மேலும், ராணுவ தளவாடங்கள் போக்குவரத்து, மிக முக்கிய நபர்களின் நடமாட்டம் ஆகியவை இந்த விமான தளத்தை பலவீனமாகியதால் தடைபட்டது.

2. ரஃபிக்கி விமான தளம் (பஞ்சாப்) : மத்திய பஞ்சாபிலிலுள்ள இந்த விமானதளத்தின் ஓடுதளத்தை இந்திய விமானங்கள் தாக்கி அழித்ததால் இந்த விமானதளத்திலிருந்து எதிர்வினையாற்ற முடியாத நிலைக்கு பாகிஸ்தான் தள்ளப்பட்டது.

3. முரித் விமான தளம் (சக்வால் மாவட்டம்) : 9000 அடி ஓடுபாதையை கொண்ட இந்த விமானதளத்தை தாக்கியதன் மூலம் ஆளில்லா வான் வழி தாக்குதலை மேற்கொள்ளவிருந்த பாகிஸ்தானின் திட்டம் தவிடு பொடியாகியது. இந்தியாவின் தாக்குதலால் நிலைகுலைந்து போயிருக்கும் இந்த விமானதளத்தை சீர்செய்ய பல காலம் பிடிக்கும்.

4. சுக்கூர் விமான தளம் (சிந்து) : சமீபத்தில் திறக்கப்பட்ட விமானதளத்திலிருந்து தான் 19 படைப்பிரிவு மற்றும் செயல்பாட்டு மாற்றப் பிரிவையும் கொண்டுள்ள இந்த தளத்திலிருந்து தான் F-16 A/B பிளாக் 15 ADF விமானங்களை பாகிஸ்தான் இயக்குகிறது. இந்த தளத்தை இந்தியா தாக்கியதால் தெற்கு திசையிலிருந்து பாகிஸ்தான் தாக்க முடியவில்லை. மேலும் அதன் ஆயுதங்களின் போக்குவரத்தும் தடைபட்டது.

5. சியால்கோட் விமான தளம் (கிழக்கு பஞ்சாப்) : இந்திய எல்லைக்கருகே அமைந்துள்ள முதன்மையாக வீழ்த்தப்பட்ட விமானதளம் இது. இந்தியாவின் ஜம்மு மற்றும் பஞ்சாப் பகுதிகளில் ஏவுகணைகளை செலுத்தி வீழ்த்த வியூகம் வகுத்த நிலையில், இந்திய விமானப்படை சாகசம் புரிந்து சியால் கோட் விமான தளத்தை பதம் பார்த்தது.

6. பஸ்ரூர் வானூர்தி ஓடுபாதை : (பஞ்சாப்) : சிறியதாக இருந்தாலும், அவசரகால நிலைக்காக உருவாக்கப்பட்ட ஓடுபாதை இது. அதை முற்றிலுமாக இந்திய விமான படை தாக்கியதால் செயலிழந்து போனது.

7. சுனியன் தொலைக் கண்டுணர்வு தளம் (Radar/ Support Installation): இந்த தளத்தை தாக்கியதால் வான்வெளி கண்காணிப்பை தொடர முடியாமல் தவித்தது பாகிஸ்தான். ஆகையால் இந்திய விமான வான் தாக்குதல் குறித்த எச்சரிக்கையை முன்கூட்டியே கணித்து, எச்சரிக்கை விடுக்க முடியாத சூழ்நிலை உருவாகி, இந்திய போர் விமானங்கள் பாகிஸ்தானின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று தாக்க முடிந்தது.

8. சர்கோதா விமான தளம் : இந்த விமான தளத்தின் மீதான தாக்குதல் மிகவும் முக்கியமானது. போர்திறஞ்சார்ந்தது. இங்கு தான் வான் வெளி தாக்குதலுக்கான பல்வேறு பயிற்சிகள், முன்னெடுப்புகள், முக்கிய தளவாடங்கள் குவிக்கப்பட்டுள்ளன. இதை தாக்கியதன் மூலம் பாகிஸ்தானின் வான்வெளி தாக்குதல்களுக்கான கட்டமைப்பை இந்தியா தகர்த்தது.

9. ஸ்கார்டு விமான தளம் (கில்கிட் – பால்டிஸ்தான்) : பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீரில் உள்ள விமான தளம் இது. இந்திய எல்லைக்கருகே அமைந்துள்ள இந்த இடத்தை இந்திய விமானப்படைகள் நிர்மூலமாக்கியதோடு இல்லாமல், இமயமலையில், பாகிஸ்தானுக்கும் சீனாவுக்கும் இடையே உள்ள வான்வெளி செயல்பாட்டு இணைப்பை துண்டித்தது. இந்த நடவ்டிக்கையானால் அப்பகுதியில் இந்தியா பலம் பெற்றது.

10. போலாரி வான் தளம் (கராச்சி) : வான்வழி தாக்குதல் மற்றும் கடல் வழித்தாக்குதலுக்கு பயன்படும் இந்த தளத்தை தாக்கியதன் மூலம் பாகிஸ்தானின் எதிர்பார்ப்புகளை முறியடித்தது இந்திய விமான படை. கடல் வழி தாக்குதலை மேற்கொள்ள முடியாத சூழ்நிலைக்கு பாகிஸ்தான் தள்ளப்பட்டது.

11. ஜகோபாபாத் வான் தளம் (சிந்து-பலுச்சிஸ்தான்) : இந்த தளத்தின் மீதான தாக்குதலால் மேற்கு பாகிஸ்தானின் தொடர்பு முற்றிலுமாக துண்டிக்கப்பட்டது.

மேற்கண்ட விரைவான நடவடிக்கை மற்றும் தாக்குதல்கள் தான் ஆபரேஷன் சிந்தூரின் சாதனைகள். நாங்கள் பலசாலிகள் என்று விமானப்படையின் பலத்தை தம்பட்டம் அடித்துக் கொண்டிருந்த பாகிஸ்தானின் குகைகளுக்குளே சிங்கம் போல் நுழைந்து அழித்து ஒழித்து சாதித்தது இந்திய விமானப்படை. தொலைகண்டுணர்வு தளங்கள், கட்டுப்பாட்டு மையங்கள், ஏவுகணை தளங்கள் என பாகிஸ்தானின் வான் வெளி நடவடிக்கைகளுக்கு முட்டுக்கட்டை போட்டது இந்திய விமானப்படை. இன்றும் எதிர்காலத்திலும் தம்பட்டம் அடித்துக் கொள்ள முடியாத நிலைக்கு தள்ளப்பட்டது பாகிஸ்தானின் விமானப் படை.

இந்தியாவின் திறன், தொழில்நுட்பம், நவீன ஆயுதங்கள், கருவிகள், திட்டமிடுதல் ஆகிய அனைத்தும் ஆசியாவின் மிகப்பெரிய சக்தி இந்தியா என்பதை உணர்த்தியுள்ளது. இந்தியாவை சீண்டினால் அதன் விளைவுகள் எதிரிகளை அழித்து விடும் என்பதை ஆபரேஷன் சிந்தூர் உணர்த்தியுள்ளது.

பாகிஸ்தானின் கோரிக்கையை ஏற்று தாக்குதலை இந்தியா நிறுத்தியிருந்தாலும், பாகிஸ்தான் தொடர்ந்து தாக்கினாலோ, பயங்கரவாதிகளுக்கு துணை புரிந்தாலோ, அது இந்தியாவின் மீதான போர் என்பதாக தான் கருதப்படும் என்றும் தீவிர தாக்குதலை இந்தியா மேற்கொள்ளும் என்று இந்தியா குறிப்பிட்டிருப்பது தற்போதைய நிலை என்பது புரிந்துணர்வு தான் போர் நிறுத்தம் அல்ல என்பதையும் தெளிவாக உணர்த்துகிறது. வாழ்க இந்தியா! வெல்க இந்தியா!” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.