நியூயார்க்: தன்னுடைய சொத்தில் 99 சதவிதத்தை தானமாக வழங்கும் மெகா திட்டத்தை மைக்ரோசாப்ட் இணை நிறுவனரான பில் கேட்ஸ் பகிர்ந்துள்ளார். இதுகுறித்து தன்னுடைய வலைதளத்தில் அவர் கூறியுள்ளதாவது:
“என்னுடைய சொத்துக்களை தானமாக வழங்கலாம் என முடிவு செய்த போது, அதை எப்படி செய்வது என்ற கேள்வி எழுந்தது. வழக்கமாக ஒரு புதிய புராஜெக்டை நான் தொடங்கினால் என்ன செய்வேனோ அதையே தான் செய்தேன். அதாவது புத்தகம் வாசித்தேன். பல்வேறு நன்கொடையாளர்கள் மற்றும் அவர்களின் அறக்கட்டளை குறித்து அறிந்து கொண்டேன். அது எனக்கு சில புரிதலை கொடுத்தது.
மேலும், உலகம் முழுவதும் உள்ள சுகாதாரம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து அறிந்து கொள்ளும் வகையில் சில புத்தகங்களை வாசித்தேன். நான் படித்தவற்றில் மிகச் சிறந்தது என்றால் 1889-ம் ஆண்டு ஆண்ட்ரூ கார்னகி என்பவர் எழுதிய The Gospel of Wealth என்ற கட்டுரை தான். செல்வந்தர்கள் தங்கள் சொத்துகளை சமூகத்துக்கு திரும்ப தரும் பொறுப்பு உள்ளது என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
‘பணக்காரராக இறக்கும் ஒரு மனிதன், அவமானத்துடன் இறக்கிறான்’ என அதில் மேற்கோள் காட்டப்பட்டு இருந்தது. நான் இறக்கும் போது மக்கள் என்னை குறித்து பேசுவார்கள். ஆனால், நான் பணக்காரராக இருந்தேன் என யாரும் சொல்ல மாட்டார்கள். நான் பெற்றுள்ள செல்வத்தை கொண்டு மக்களுக்கு உதவ முடியும் என நம்புகிறேன்.
அதனால் ஏற்கெனவே நான் திட்டமிட்டு வைத்ததை காட்டிலும் இப்போது அதை இன்னும் வேகமாக முடிக்க திட்டமிட்டுள்ளேன். அடுத்த 20 ஆண்டுகளில் கேட்ஸ் அறக்கட்டளை மூலம் என்னுடைய சொத்தில் 99 சதவிதத்தை உலகம் முழுவதும் உயிர்களைக் காப்பாற்ற நன்கொடையாக வழங்குவேன்.
2000-மாவது ஆண்டு இந்த அறக்கட்டளையை நானும் மெலிண்டாவும் தொடங்கிய போது வேறு திட்டம் இருந்தது. இப்போது அது மாறியுள்ளது” என அவர் கூறியுள்ளார். தற்போது 108 பில்லியன் டாலர்களாக உள்ள அவரது சொத்து மதிப்பு வரும் 2045-ல் 99 சதவிதம் குறைந்து இருக்கும் என கூறியுள்ளார். வறுமை ஒழிப்பு, தொற்று நோய்களுக்கு தீர்வு காண்பது, தாய் மற்றும் குழந்தை இறப்பு விகிதத்தை குறைப்பது ஆகிய மூன்று விஷயங்களில் கேட்ஸ் அறக்கட்டளை கவனம் செலுத்த உள்ளது.