புதுடெல்லி: சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் தொலைபேசி அழைப்பில் பேசினார். அப்போது இந்தியா, பாகிஸ்தான் இடையே பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட வேண்டும் என அவர் கூறியுள்ளார். இந்நிலையில், ‘போர் என்பது இந்தியாவின் தெரிவு அல்ல’ என சீன அமைச்சரிடம் அஜித் தோவல் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா – பாகிஸ்தான் இடையில் நேற்று (மே 10) மாலை போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இருப்பினும் நேற்று இரவு ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட இந்திய எல்லையோர மாநிலங்களில் ட்ரோன் தாக்குதலில் பாகிஸ்தான் ஈடுபட்டது. இந்நிலையில், சீன அமைச்சர் வாங் உடன் அஜித் தோவல் பேசியதாக சீன தரப்பில் அறிக்கை ஒன்று வெளியாகி உள்ளது.
‘பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் இந்தியாவுக்கு ஏற்பட்ட உயிரிழப்புகள், பாதிப்புகள் அதிகம். தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையை தான் இந்தியா முன்னெடுத்தது. போர் என்பது இந்தியாவின் தெரிவு அல்ல. அது இரு தரப்புக்கும் உகந்ததல்ல. இந்தியாவும் பாகிஸ்தானும் போர் நிறுத்தத்துக்கு உறுதி ஏற்றுள்ளன. பிராந்திய ரீதியான அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை விரைவில் மீட்டெடுக்க எதிர்நோக்குகிறோம்’ என தங்களிடம் அஜித் தோவல் தெரிவித்துள்ளதாக சீனா கூறுகிறது.
பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலை சீனா கண்டிப்பதாகவும், அனைத்து வகையான தீவிரவாதத்தையும் எதிர்ப்பதாகவும் சீன அமைச்சர் வாங் இந்த உரையாடலில் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் நாட்டின் துணை பிரதமர் முகமது இஷாக் தார் உடனும் வாங் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தம்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி தீவிரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தி சுற்றுலா பயணிகள் 26 பேரை சுட்டுக் கொன்றனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானில் இருந்து செயல்படும் தீவிரவாத அமைப்புகளுக்கு தொடர்பு இருப்பதாக மத்திய அரசு குற்றம்சாட்டியது. சிந்து நதிநீர் பங்கீடு ஒப்பந்தம் நிறுத்திவைப்பு, அட்டாரி – வாகா எல்லை மூடல்,விசாக்களை ரத்து செய்து பாகிஸ்தானியர்களை வெளியேற்றியது என பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு அதிரடி நடவடிக்கைளை இந்தியா மேற்கொண்டது.
இதன் தொடர்ச்சியாக, பாகிஸ்தானுக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கையை இந்தியா முடுக்கி விட்டது. பஹல்காம் தாக்குதல் பல பெண்களின் குங்குமம் அழிய காரணமாக இருந்ததால், அதை நினைவுகூரும் விதமாக ‘ஆபரேஷன் சிந்தூர்’ என இந்த நடவடிக்கைக்கு பெயரிடப்பட்டது. பாகிஸ்தானுக்குள் 9 இடங்களில் செயல்பட்டு வந்த முக்கிய தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அவற்றின் கட்டமைப்புகளை இந்திய ராணுவம் தகர்த்தது.
இந்தியாவின் இந்த நடவடிக்கைக்கு பாகிஸ்தான் கடுமையாக எதிர்வினையாற்றியது. எல்லை பகுதிகளில் ட்ரோன்கள், ஏவுகணைகள் மூலமாக தாக்குதல் நடத்தியது. எனினும், இந்தியா தனது அதிநவீன ஆயுதங்களான எல்-70 பீரங்கி, சில்கா பீரங்கி, எஸ்-400 (சுதர்சன சக்கரம்) உள்ளிட்டவற்றால் கடுமையாக பதிலடி கொடுத்தது. பாகிஸ்தான் வீசிய ட்ரோன்கள், ஏவுகணைகளை நடுவானிலேயே இடைமறித்து அழித்தது.
அணு ஆயுத நாடுகளான இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வந்தது உலக நாடுகளை கவலையடைய செய்தது. கடந்த 4 நாட்களாக இருதரப்பும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வந்த நிலையில், அமெரிக்காவின் சமாதான முயற்சியால் இந்தியா – பாகிஸ்தான் இடையே நேற்று போர் நிறுத்தம் ஏற்பட்டது. இரு நாடுகளின் முப்படைகளும் சனிக்கிழமை மாலை 5 மணி முதல் தாக்குதலை நிறுத்திக் கொள்வதென முடிவு செய்யப்பட்டது. போர் நிறுத்தம் குறித்து முதலில் அறிவிப்பு வெளியிட்ட அமெரிக்க அதிபர் ட்ரம்ப், நீண்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு இந்த முடிவு எட்டப்பட்டதாக தெரிவித்தார்.
ஆனால், போர் நிறுத்தம் சனிக்கிழமை மாலை 5 மணிக்கு அமலுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில், இரவு 8 மணி அளவில் ஜம்மு – காஷ்மீர் உள்ளிட்ட இந்திய எல்லை பகுதிகளில் பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறி தாக்குதலை தொடங்கியது. கதுவா, சம்பா, சுந்தர்பானி, அக்னூர், உதம்பூர், நவ்சோரா உள்ளிட்ட பகுதிகளில் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. பாகிஸ்தான் தாக்கினால் பதிலடி கொடுக்க இந்திய எல்லை பாதுகாப்பு படைக்கு முழு அனுமதி வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.