ரூ.25 கோடியில் 1,256 இடங்களில் முழு உடல் பரிசோதனை முகாம் விரைவில் தொடக்கம்

ரூ.25 கோடியில் 1,256 இடங்களில் முழு உடல் பரிசோதனை மருத்துவ முகாமை, முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் தொடங்கி வைக்கவுள்ளார்.

மக்களுக்கு உயர் மருத்துவ சேவைகள் மற்றும் ஆரோக்கியமான வாழ்வை உறுதி செய்யும் வகையில், சட்டப்பேரவை மானியக் கோரிக்கை 2025-26ம் ஆண்டு அறிவிப்பின் கீழ் 1,256 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து, சென்னை சைதாப்பேட்டை, மாந்தோப்பு சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் முன்னோட்டமாக நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று பார்வையிட்டார். சுகாதாரத் துறை செயலாளர் ப.செந்தில் குமார், தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் அருண் தம்புராஜ், பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை இயக்குநர் செல்வ விநாயகம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

அப்போது, செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது: கடந்த 2021 செப்.9ம் ‘கலைஞரின் வருமுன் காப்போம்’ திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ஆண்டுதோறும் இந்த முகாம்கள் மிகச் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. கடந்த 4 ஆண்டுகளில் தமிழகம் முழுவதும் நடந்த 5,654 முகாம்கள் மூலம் 52,87,000 பேர் பயன்பெற்றுள்ளனர்.

மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் நம்மைக் காக்கும் 48, பாதம் பாதுகாப்போம் திட்டம், இதயம் காப்போம், சிறுநீரக பாதுகாப்பு திட்டம், நடப்போம் நலம் பெறுவோம், மக்களைத் தேடி மருத்துவ ஆய்வக திட்டம், தொழிலாளர்களைத் தேடி மருத்துவம் திட்டம் என்று பல்வேறு திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அரசு மருத்துவமனைகளில் முழு உடல் பரிசோதனைக்கு ரூ.1,000 முதல் ரூ.5,000 வரை செலவாகிறது. தனியார் மருத்துவமனையில் ரூ.12,000 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

ஒட்டுமொத்த மக்களும் முழு உடல் பரிசோதனை தெரிந்து கொள்வது, அவர்களுடைய உடலில் உள்ள நோய் பாதிப்புகளுக்குத் தீர்வு காண்பது என்கின்ற வகையில் ஒரு திட்டத்தை நிதிநிலை அறிக்கையில் முதல்வர் அறிவித்தார். இந்த திட்டத்துக்கு புதிய பெயர் விரைவில் சூட்டப்படும். மிக விரைவில் சென்னையில் இந்த திட்டத்தை முதல்வர் தொடங்கி வைக்க இருக்கிறார்.

இந்தத் திட்டத்தில் 17 வகையான சிறப்பு மருத்துவம், 30 வகையான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். முழு உடல் பரிசோதனைக்கு தேவையான ஒட்டுமொத்த பரிசோதனைகளும் இந்த முகாமில் மேற்கொள்ளப் படும். 1,256 இடங்களில் நடைபெறும் மருத்துவ முகாமுக்கு ஏறக்குறைய ரூ.25 கோடி வரை செலவிடப் படவுள்ளது. 1,231 தனியார் மருத்துவமனைகளில் காப்பீட்டு திட்டங்கள் நடைமுறையில் உள்ளன. அந்த மருத்துவமனைகளும் முகாம்களில் இணையவுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.