புதுடெல்லி: டெல்லி சர்வதேச விமானநிலையம் வழக்கம் போல இயல்பாக செயல்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. என்றாலும், மாறிவரும் வானிலை மற்றும் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்புச் சோதனைகள் காரணமாக சில விமான சேவைகள் பாதிக்கப்படலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியா பாகிஸ்தான் இடையேயான பதற்றத்தால் அமல்படுத்தப்பட்ட மேம்பட்ட பாதுகாப்பு நெறிமுறைகள் இன்னும் விமானநிலையத்தில் அமலில் உள்ளன.
டெல்லி சர்வதேச விமானநிலையம் லிமிட் (DIAL) வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “டெல்லி விமானநிலையம் வழக்கம் போல செயல்படுகிறது. என்றாலும் வான்வெளி இயக்கப்பாதை மாற்றம் மற்றும் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு நெறிமுறைகள் காரணமாக சில விமானங்களின் அட்டவணை மற்றும் நேரம் பாதிக்கப்படலாம்” என்று தெரிவித்துள்ளது.
அதேபோல், பாதுகாப்புச் சோதனைகளுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கி, சீரான சேவைகள் வழங்குதற்காக விமான நிறுவனங்கள் மற்றும் பாதுகாப்பு பணியாளர்களுக்கு ஒத்துழைக்குமாறு பயணிகளுக்கு DIAL அறிவுறுத்தியுள்ளது.
நாட்டின் மிகவும் பரபரப்பான விமானநிலையமாக தேசிய தலைநகரில் உள்ள இந்திராகாந்தி சர்வதேச விமானநிலையத்தை DIAL இயக்கி வருகிறது.
வழக்கமாக நாளொன்றுக்கு சுமார் 1,300 விமான இயக்கங்களை டெல்லி விமானநிலையம் கையாளுகிறது என்பது குறிப்பிடத்தகது.